நாளையுடன் முடிகிறது எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான முதல் கட்ட கவுன்சலிங் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) முடிவுக்கு வருகிறது.
இரண்டாம் கட்ட கவுன்சலிங் ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்குகிறது. அதற்குள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் மாநில ஒதுக்கீடான 85 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதி கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை உள்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்கள், நான்கு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 283 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க கடந்த ஜூலை 6-ம் தேதி முதல் கவுன்சலிங் நடைபெற்று வருகிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் கடந்த 8 தினங்களாக நடைபெற்ற கவுன்சலிங்கில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு, இதுவரை மொத்தம் 1,308 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டுவிட்டன.

தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 44 இடங்கள், தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) வகுப்பினருக்கு 33 இடங்கள், பழங்குடி வகுப்பினருக்கு 13 இடங்கள் என மொத்தம் 90 காலியிடங்கள் மட்டுமே உள்ளன.
இவற்றில் மாணவர்களைச் சேர்க்க தொடர்ந்து வியாழக்கிழமை (ஜூலை 16), வெள்ளிக்கிழமை (ஜூலை 17) கவுன்சலிங் நடைபெறுகிறது.

55 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலி: மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி (காலியிடம்: 19) கோவை பி.எஸ்.ஜி. (காலியிடம்: 18), ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஐ.ஆர்.டி. (காலியிடம்: 11), கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை (காலியிடம்: 7) ஆகிய நான்கு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 55 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

இந்த சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 1 இடம், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 42 இடங்கள், தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) வகுப்பினருக்கு 9 இடங்கள், பழங்குடி வகுப்பினருக்கு 3 இடங்கள் என மொத்தம் 55 இடங்கள் காலியாக உள்ளன

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails