ஆரம்பமே சரியில்லையே.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது மட்டும் அல்ல, அவசியமும்கூட என்பதைப் பொருளாதாரம் படித்தவர்கள், நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் அதற்கான முடிவை அரசு எடுத்த விதமும், நேரமும் வியப்பை அளிக்கின்றன.

பெட்ரோல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தும் முடிவை பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ரா, பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த பிறகு தில்லியில் புதன்கிழமை அறிவிக்கிறார்; புதன்கிழமை நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்தது. ஆனால் மிகவும் முக்கியமான இந்த முடிவை எடுப்பதற்கு முன்னால் மத்திய அமைச்சரவையில் இதைப்பற்றிப் பேசவே இல்லை; அதைவிட முக்கியம் தோழமைக் கட்சிகளும் இடம் பெற்றுள்ள அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவிலும் இதை விவாதிக்கவே இல்லை.

இவ்வளவு அவசர அவசரமாக விலையை அறிவிக்கும் அளவுக்கு கச்சா பெட்ரோலின் விலை மிகக் கடுமையாக கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் உயர்ந்துவிடவில்லை. அப்படியிருக்க இந்த முடிவை அரசு எடுத்ததற்கு முழுக்க முழுக்க அரசியல்தான் காரணம் என்று அறியும்போது வேதனையாக இருக்கிறது.

மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைக்கு வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பொதுத் தேர்தல் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே அந்தச் சமயம் விலையை உயர்த்தினால் அது அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்பதால், முன்கூட்டியே விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவரான முரளி தேவ்ரா அதனால்தான் தனி அக்கறை எடுத்துப் பிரதமரைத் தனியாகச் சந்தித்தார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இவையெல்லாம் வெறும் ஊகங்கள்தான் என்று ஒதுக்கிவிட முடியாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வும், குறைப்பும் தேர்தலை ஒட்டி பலமுறை மேற்கொள்ளப்பட்டதை நாம் நேரடியாகவே பார்த்து வருகிறோம்.

இந்த விலை உயர்வு இல்லாமலேயே தனியார் துறையில் உள்ள "ரிலையன்ஸ்', "எஸ்ஸôர்' போன்ற தொழில் குழுமங்கள் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வருகின்றன. மத்திய அரசும் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி வரியாகவே கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெறுகிறது. எனவே அரசுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களின் நஷ்டம் மட்டுமே காரணமாகக் காட்டப்படுவது கண்துடைப்புதான்.

அரிய நிதி ஆதாரமான அன்னியச் செலாவணி இப்படி கோடிக்கணக்கில் செலவாவது குறித்து மத்திய அரசுக்கு உண்மையிலேயே கவலை ஏற்பட்டிருந்தால் கார், ஸ்கூட்டர், பைக் ஆலைகளுக்கு இந்த அளவுக்கு உரிமங்களும், சலுகைகளும் அளித்திருக்கவே கூடாது. நம்முடைய பெட்ரோலியத் தேவையில் 70 சதவீதத்தை இறக்குமதியைக் கொண்டுதான் பூர்த்தி செய்கிறோம் என்கிறபோது சாலைகளில் ஓட்டக்கூட இடம் இல்லாத அளவுக்கு கார், ஸ்கூட்டர், பைக் தயாரிப்புகளைப் பொறுப்பில்லாமல் ஊக்குவிப்பது ஏன்?

கடுமையான மின்சார வெட்டு, உற்பத்தி இழப்பு, வேலை இழப்பு, வருவாய்க் குறைவு என்று நம் நாட்டின் 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் தவித்துக் கொண்டிருக்கையில் அரசு நிறுவனங்களின் நஷ்டத்தைக் குறைப்பதற்கு மட்டுமே இந்த அளவுக்கு அக்கறை காட்டியிருப்பது வருத்தத்தையே தருகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் அறுதிப் பெரும்பான்மைக்கான வலு கிடைத்துவிட்டது என்றதும் காங்கிரஸ்காரர்களின் பேச்சும் தோரணையும் மாறிவிட்டது என்று அதன் நெருங்கிய தோழமைக்கட்சியின் தலைவர் மு. கருணாநிதியேகூட தில்லியில் உணர்ந்தார்.

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதற்கும், அதற்கு முன் தங்களிடம் ஆலோசனை கலக்காமல்விட்டதற்கும் நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். அதற்கும் காங்கிரஸ் வட்டாரம் எகத்தாளமான பதிலையே விடையாகத் தந்திருக்கிறது. ""எந்த மாநில அரசாவது விலை உயர்வு கடுமை என்று கருதினால் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியைக் குறைத்துக் கொள்ளட்டும்'' என்பதே அது.

பணவீக்க விகிதம் சரிவு என்று மாய்மாலமான ஒரு சொற்றொடரை அடிக்கடி பயன்படுத்துகின்றனர் நம்முடைய ஆட்சியாளர்கள். மொத்தவிலை குறியீட்டெண் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது. இதில் உணவுப்பண்டங்கள், உலோகம், அலோகம், மரச்சாமான்கள் என்று சகலவிதமான அசையும், அசையாப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. அந்த அடிப்படையில் விலைவாசி உயர்வு பூஜ்யமாகி இப்போது மைனஸ் என்ற அளவுக்குப் போய்விட்டதாம். அந்த துணிச்சலில்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்படும் பணவீக்க விகித உயர்வும் நல்லது என்ற முடிவுக்கு வந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

உண்மையில், நடுத்தரக் குடும்பத்து குடும்பத் தலைவியிடம் கேட்டுப்பார்த்தால் தெரியும் விலைவாசியின் லட்சணம் என்ன என்று. ஆரம்பமே சரியில்லை என்று அரசை எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். அதிகாரம் ஏற்படுத்தும் அகங்காரம் ஆபத்தில்தான் முடியும் என்கிறது சரித்திரம்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails