மூன்றாம் தலைமுறை செல்போனுக்கான அலைக்கற்றை ஏலத்தில் தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தொலைத் தொடர்பு அமைச்சகம் குறிப்பிட்டபடி இதற்கான ஏலத்தை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.
தற்போதைய சிக்கல் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலம் உருவாகியுள்ளது. தொலைத் தொடர்புத் துறையும் பாதுகாப்பு அமைச்சகமும் ஒப்பந்தம் செய்து கொண்டன. ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் தங்கள் வசம் எஞ்சியுள்ள 3-ஜி அலைக்கற்றைகளை அளிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
3-ஜி அலைக்கற்றையானது உயர் தொழில்நுட்ப பணிகளான விடியோ கான்ஃபரன்ஸிங் மற்றும் அதிவிரைவு இணையதள சேவை உள்ளிட்டவற்றுக்கு மிகவும் அவசியமானதாகும். இதைப் பகிர்ந்து கொள்வதில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கிடையே கடந்த மே 22-ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
தற்போது ஏற்பட்டுள்ள புதிய சிக்கலைத் தீர்க்க இரு அமைச்சகங்களையும் சேர்ந்த செயலர்கள் தங்களது கருத்துகளை அமைச்சரவை செயலகத்தில் அளிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி இருஅமைச்சகமும் உயர்நிலைக் கண்காணிப்புக் குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காலத்திற்குள் 3-ஜி அலைக்கற்றையை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதைச் செயல்படுத்தும் பணியை இக்குழு மேற்கொள்ளும். கடந்த 11-ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இரு அமைச்சக பிரதிநிதிகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தற்போது மிக அதிக அளவிலான 3-ஜி அலைக்கற்றை பாதுகாப்பு அமைச்சகம் வசம் உள்ளது. ஒப்பந்தத்தின்படி 45 மெகாஹெர்ட்ஸ் அளவுக்கு ரேடியோ அலைக்கற்றையை மூன்று ஆண்டுகளில் விடுவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதில் 25 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை 3-ஜி சேவைக்கானது. எஞ்சியது 2-ஜி சேவைக்கானதாகும்.
பாதுகாப்பு அமைச்சகம் தங்கள் வசமுள்ள அலைக்கற்றையை விடுவிக்காவிடில், தொலைத் தொடர்பு துறையால் செல்போன் நிறுவனங்களுக்கு 3-ஜி அலைக்கற்றையை அளிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
0 comments:
Post a Comment