சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தை வியாழக்கிழமை சரிவிலிருந்து மீண்டது. சீன பங்குச் சந்தையில் புள்ளிகள் உயர்ந்ததன் விளைவாக மும்பை பங்குச் சந்தையிலும் முதலீடு அதிகரித்து 62 புள்ளிகள் உயர்ந்தன. இதனால் குறியீட்டெண் 16,781 புள்ளிகளாக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையில் 16 புள்ளிகள் உயர்ந்து 4,986 புள்ளிகளைத் தொட்டது.

வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே ஸ்திரமற்ற நிலை காணப்பட்டது. இருப்பினும் பிற்பகலுக்குப் பிறகு பங்கு விற்பனை அதிகரித்தது. சீன பங்குச் சந்தையில் புள்ளிகள் உயர்ந்த செய்தி வெளியானதும் வர்த்தகம் முடியும் தருவாயில் அதிக அளவில் பங்குகளை வாங்கினர்.

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் முடிவடையும் பங்குகளை முன் தேதியிட்டு விற்பனை செய்ய பலரும் முன்வந்ததால் பங்குச் சந்தையில் காலையில் ஸ்திரமற்ற நிலை காணப்பட்டது.

ஜப்பான் பங்குச் சந்தை, சிங்கப்பூர் பங்குச் சந்தை உள்ளிட்ட ஆசிய பங்குச் சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாய் இருந்தது.

அத்துடன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 6 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு வெளியிட்டதும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதாக அமைந்தது.

வங்கித் துறை பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர். ஹெச்டிஎஃப்சி வங்கிப் பங்குகள் 3.39 சதவீதம் அதிகரித்தது. ஐடிபிஐ வங்கி பங்கு 1.98 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 1.74 சதவீதமும், அலகாபாத் வங்கி பங்கு 2.59 சதவீதமும் உயர்ந்தது.

விப்ரோ நிறுவனப் பங்கு விலை 2.21 சதவீதமும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்கு 2.14 சதவீதமும், என்டிபிசி 1.97 சதவீதமும், பார்தி ஏர்டெல் 1.42 சதவீதமும், லார்சன் அண்ட் டியூப்ரோ பங்கு 1.40 சதவீதமும் உயர்ந்தன.

ஹிண்டால்கோ பங்கு மிக அதிகபட்சமாக 3.98 சதவீதம் சரிந்தது. இன்ஃபோசிஸ் பங்கு விலை 3.40 சதவீதமும், ஹீரோ ஹோண்டா 1.59 சதவீதமும், டாடா ஸ்டீல் 1.41 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.

வியாழக்கிழமை மொத்தம் ரூ. 5,420 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. புதன்கிழமை புள்ளிகள் சரிந்தபோதிலும் ரூ. 6,741 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. எடுகாம்ப் சொல்யூஷன்ஸ் பங்குகள் மிக அதிகபட்சமாக ரூ. 163.81 கோடிக்கு விற்பனையாயின. இதற்கு அடுத்தபடியாக ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் ரூ. 150.47 கோடிக்கும், டாடா ஸ்டீல் ரூ. 125.26 கோடிக்கும் விற்பனையாயின. ஒட்டுமொத்தமாக 1,466 நிறுவனங்களின் பங்குகள் அதிக விலைக்கு விற்பனையாயின. 1,289 நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. வியாழக்கிழமை வர்த்தக நேரம் முடியும் முன்னதாகவே பங்குச் சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்டது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails