சென்னை நகர போலீஸ் கமிஷனர் மோகன்லாலுக்கு மர்ம போன் வருகிறது. அதில் பேசிய கமல் ஐந்து இடங்களில் அதி பயங்கர குண்டுகள் வைத்திருப்பதாக மிரட்டுகிறார். போலீஸ் நிலையத்தில் வைத்துள்ள குண்டு பற்றி மட்டும் விவரம் சொல்கிறார்.
போலீஸ் படை அங்கு முற்றுகையிடுகிறது. வெடிகுண்டு நிபுணர்கள் குண்டை செயலிழக்க செய்கின்றனர்.
போலீஸ் வட்டாரமும் அரசும் அதிர்ந்து நிற்கிறது. கமல் திரும்பவும் கமிஷனரிடம் பேசி மீதி நான்கு குண்டுகளும் வெடிக்காமல் இருக்க ஜெயில்களில் அடைக்கப்பட்டிருக்கும் நான்கு தீவிரவாதிகளை விடுவிக்கும்படி “கெடு” வைக்கிறார்.
போலீஸ் திகைக்கிறது. அந்த தீவிரவாதிகள் படுபயங்கரமானவர்கள். ஒருவன் அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்து நாசவேலைகள் செய்பவன். இன்னொருவன் பாகிஸ்தான் சென்று பயிற்சி பெற்றவன். மற்றவன் வேறொரு தீவிரவாத அமைப்புக்கு வேலை செய்பவன்.
நான்காவது ஆள் தரம்சந்த் லாலா என்ற உள்ளூர்காரன். இவன் பணத்துக்காக தீவிரவாதிகளுக்கு ஆயுத சப்ளை செய்பவன். இவர்களை விடுதலை செய்ய போலீஸ் தரப்பிலேயே ஆட்சேபனை கிளம்புகிறது.
போனில் பேசுவது யார்? எங்கிருந்து பேசப்படுகிறது? என்பதை கண்டு பிடிக்க முடியாமல் போலீசும், உளவுத்துறையும் அல்லோலப்படுகிறது. கெடு நேரமும் நெருங்குகிறது. வேறு வழியின்றி கமல் கோரிக்கையை கமிஷனர் ஏற்கிறார். நான்கு தீவிரவாதிகளும் கமல் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் நிறுத்தப்படுகின்றனர்.
அவர்களிடம் மேலிட உத்தரவுப்படி உங்களை விடுவிப்பதாகவும் வேனில் தப்பிச் செல்லுங்கள் என்றும் கமல் போனில் கூறுகிறார். அதன் பிறகு நடப்பது எதிர்பாராத அதிர்ச்சி கிளைமாக்ஸ்...
தீவிரவாத கதைகளில் வித்தியாசமான படம். குண்டு வெடிப்பு, ரத்தம், வன்முறை தொகுப்பாக இல்லாமல் விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தியுள்ளார் இயக்குனர் சக்ரி.
ஒரே சட்டை, பேண்ட் தாடியில் அப்பாவியாக வரும் கமல். ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், எக்ஸ்பிரஸ் ரெயில், போலீஸ் நிலையம் என வெவ்வேறு இடங்களில் மர்ம பைகளை வைத்து விட்டு திரும்புகையில் ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறுகிறது.
சென்னை நகரில் கட்டப்பட்டு வரும் உயரமான கட்டிடத்தின் மாடியில் நவீன கம்ப்யூட்டர், செல்போன் என தகவல் தொழில்நுட்ப சாதனங்களுடன் உட்கார்ந்து போலீஸ் கமிஷனருக்கு மிரட்டல் விடுப்பது பகீர்.
அலட்டல் இல்லாமல் கமிஷனரிடம் பேசும் உரை யாடல், மனக்குமுறலை உள்ளுக்குள் அடக்கும் முகபாவம் என நடிக்காமல் நடிக்கும் வித்தைக்காரராக இன்னொரு பரிணாம் காட்டுகிறார். கர்ப்பிணி பெண் பயங்கரவாத கோரத்துக்கு பலியாகும் பிளாஷ்பேக் கதை சொல்லி கண்ணீர் வடிக்கையில் இதயங்களை கனக்க வைக்கிறார்.
எல்லாவற்றையும் முடித்து விட்டு காய்கறி கூடையுடன் வீட்டுக்கு புறப்படுவது தமாஷ் ரகம்.
கமிஷனர் கேரக்டருக்கு கச்சிதமாய் பொருந்துகிறார் மோகன்லால். குண்டுகளை கண்டு பிடிக்க படும் தவிப்புகளை நிறைவாய் வெளிப்படுத்துகிறார். இறுதியில் தனது பதவியை இழந்து நிமிர்கிறார்.
நேர்மையான போலீஸ் அதிகாரிகளாக வரும் கணேஷ் வெங்கட்ராம், பிரேம்குமார் அதிரடி செய்கிறார்கள். லட்சுமி தலைமை செயலாளராக வருகிறார்.
டூயட் பாடல்கள் வளவன என்று நீளும் சீன்கள் இல்லாதது நிறைவு. இரா.முருகன் வசனத்துக்கு கை குலுக்கலாம். நிறைய ஆங்கில வசனங்கள் திணிப்பு சில சீன்களை அன்னியப்படுத்துகிறது. ஸ்ருதி இசையில் தேறி விட்டார். படத்துக்கு அவரது பின்னணி இசை பெரிய பலம்.
தீவிரவாத சட்டங்களை புதுப்பிக்க சொல்லும் படிப்பினையான படம்
0 comments:
Post a Comment