பங்குச் சந்தையில் சரிவு ஆரம்பம்

கடந்த வாரம் முழுவதும் ஏற்றத்தைச் சந்தித்துவந்த மும்பை பங்குச் சந்தை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சரிவைச் சந்தித்தது. 50 புள்ளிகள் சரிந்து குறியீட்டெண் 16,214 புள்ளிகளாகக் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையிலும் 20 புள்ளிகள் சரிந்ததால் குறியீட்டெண் 4,808 புள்ளிகளானது.

கடந்த வாரம் முழுவதும் பங்குச் சந்தை ஏற்றத்துக்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. நாட்டின் சில பகுதிகளில் பருவ மழை தாமதமாகத் தொடங்கியது மற்றும் ஜூலை மாதத்தில் தொழில்துறை உற்பத்தி அதிகரிப்பு ஆகியன பிரதான காரணமாக அமைந்தன. அத்துடன் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் மிக அதிக எண்ணிக்கையில் பங்குகளை வாங்கியதும் முக்கியக் காரணமாக அமைந்தது.

பங்குச் சந்தை குறியீட்டெண் 16 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டவுடனேயே ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. இதனாலேயே திங்கள்கிழமை பங்கு வர்த்தகத்தில் தேக்க நிலை ஏற்பட்டதாக தரகர்கள் தெரிவித்தனர்.

ஆசிய பங்குச் சந்தையில் பெரும்பாலான பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவும் மும்பை பங்குச் சந்தை சரிவுக்குக் காரணமாக அமைந்தது.

ஸ்டெர்லைட் மற்றும் ஹிண்டால்கோ நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. ஸ்டெர்லைட் நிறுவனப் பங்குகள் ரூ. 719.45-க்கும், ஹிண்டால்கோ பங்குகள் ரூ. 121.10-க்கும் விற்பனையானது. டாடா ஸ்டீல் நிறுவனப் பங்கு 2.12 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 1.97 சதவீதமும் உயர்ந்தன.

ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் கணிசமாக உயர்ந்து ரூ. 2,146.95-க்கு விற்பனையாயின. ஆனால் இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் 0.68 சதவீதம் சரிந்து ரூ. 2,250.55-க்கு விற்பனையானது. வங்கிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்கு விலைகள் ஒரு சதவீதம் உயர்ந்ததால் பங்குச் சந்தையில் பெருமளவு சரிவு தவிர்க்கப்பட்டது. நுகர்வோர் தயாரிப்பு நிறுவனப் பங்குகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன. சில ஆட்டோமொபைல் மற்றும் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். ஒட்டுமொத்தமாக 1,474 நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு விற்பனையாயின. 1,308 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன.

திங்கள்கிழமை வர்த்தகமும் ரூ. 5,125 கோடியாக சரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 5,710 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. மிக அதிகபட்சமாக டாடா ஸ்டீல் நிறுவனப் பங்குகள் ரூ. 361.29 கோடிக்கு விற்பனையாயின

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails