தமிழில் பேச அனுமதி இல்லை

மக்களவையில் தமிழில் பேச அனுமதிக்க வேண்டும் என்ற திமுக அமைச்சர்களின் கோரிக்கையை மக்களவைச் செயலகம் நிராகரித்துவிட்டது.

அமைச்சர்கள் பிராந்திய மொழிகளில் பேசுவதற்கு விதிகளில் இடமில்லை என்று மக்களவை தலைமைச் செயலர் பி.டி.டி ஆச்சாரி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

அவை மரபுப்படி உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் மட்டுமே பதிலளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

உறுப்பினர்களின் கேள்விகள் அதற்கான பதில்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. எனவே அமைச்சர்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் மட்டுமே பதிலளிக்க முடியும் என்று கூறினார்.

ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் பேச வேண்டும் என்பது அமைச்சர்களுக்கு மட்டும்தான். உறுப்பினர்கள் தங்களது தாய் மொழியில் கேள்விகளை எழுப்பலாம். விவாதங்களில் பேசலாம் என்று ஆச்சாரி கூறினார்.

திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் தமிழில் கேள்வி கேட்கவும், பதில் அளிக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் நாடாளுமன்ற அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி சென்னையில் செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார்.

ஆனால் திமுக அமைச்சர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழுக்கு ஜெயலலிதா ஆதரவு: ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தவிர, பிற பிராந்திய மொழிகளில் பேசும் உரிமை உறுப்பினர்களுக்கு மட்டும்தான் என்றும், அமைச்சர்களுக்கு இல்லை எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர். உறுப்பினர்களுக்கே இந்த வசதி இருக்கும்போது, அமைச்சர்களுக்கு ஏன் செய்து தரக் கூடாது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலம், ஹிந்தி தெரியாததால் மத்திய அமைச்சர் அழகிரியால் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க முடியவில்லை. எனவே தமிழில் பேசும் உரிமையை முதல்வர் கருணாநிதி பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails