இருதய நோய்கள் வராமல் தடுக்க

இருதய நோய் உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க சீரான உடல் பயிற்சி அவசியம் என்றார் இருதய நோய் சிகிச்சை நிபுணர் செந்தில்குமார் நல்லுசாமி.

திருச்சி நடுநகர் அரிமா சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் "இதமாய் காப்போம் இதயம்' என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:

"அதிக கொழுப்புச் சத்து, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு உள்ளது.

40 வயதுக்கு மேல் உள்ள ஆண்களும், 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களும் ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

மூச்சுத் திணறல், தோள்பட்டை வலியுடன் கூடிய மார்பு வலி, நடக்கும்போது, ஓடும் போது, உயரமானப் பகுதிகளில் ஏறும்போது மார்பு வலி ஏற்படுதல் போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகள்.

ஒருவருக்கு தொடர்ந்து 20 நிமிஷங்களுக்கு மேல் படபடப்புடன் மார்பு வலி ஏற்பட்டால் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

இருதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் கொழுப்புச் சத்துகள் அதிகமாகி ரத்த ஓட்டத்தை தடுப்பதால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது.

பொதுவாக, இருதய நோய் உள்ளிட்ட எந்த நோயும் நம்மைத் தாக்காமல் இருக்க தினமும் அரைமணி நேரமாவது சீரான உடல் பயிற்சி செய்வது நல்லது.

மேலும், இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஏறத்தாழ இரண்டு மணி நேரத்துக்கு முன்பே சிறிய அளவு உணவு சாப்பிட வேண்டும். முடிந்தளவு சாதத்தை தவிர்ப்பது நல்லது.

இருதய நோயைத் தவிர்க்க நினைப்பவர்கள் முதலில் புகைப் பிடிப்பதையும், மது அருந்துவதையும் நிறுத்த வேண்டும்.

இதுதவிர, இறைச்சி, எண்ணெய் பலகாரங்கள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

எந்தச் சூழ்நிலையிலும் மன அழுத்தத்துக்கு ஆளாகமல் இருத்தல் அவசியம். ஒரே நேரத்தில் பல வகையான சிந்தனைகளில் ஈடுபடுவதால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

நாம் எப்போதும் நேர்மறை எண்ணத்துடன் இருந்தால்தான் நமக்கு நேர்மறையான முடிவுகள் கிடைக்கும்' என்றார் செந்தில்குமார் நல்லுசாமி.

நிகழ்ச்சியில், அரிமா சங்கத் தலைவர் சூசைநாதப்பிள்ளை, செயலர் எஸ். சசிதரன், வட்டாரத் தலைவர் லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails