மும்பை பங்குச் சந்தை வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை 30 புள்ளிகள் ஏற்றமடைந்து 16,741 புள்ளிகளைத் தொட்டது. இந்த வாரத்தில் தொடர்ந்து 5 நாள்கள் பங்குச் சந்தை உயர்வைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய பங்குச் சந்தையில் 10 புள்ளிகள் உயர்ந்ததால் குறியீட்டெண் 5,000 புள்ளிகளைத் தொட்டது.
பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை காலையிலிருந்தே ஸ்திரமற்ற நிலை காணப்பட்டது. வர்த்தகம் தொடங்கியபோது பங்கு விலைகள் சரிவைச் சந்தித்தன. பின்னர் படிப்படியாக ஏற்றம் பெற்று புள்ளிகள் கணிசமான உயர்வைச் சந்தித்தன.
மோட்டார் வாகனங்களின் விற்பனை அதிகரித்ததைத் தொடர்ந்து ஆட்டோமொபைல் நிறுவனப் பங்கு விற்பனை அதிகரித்தது. மேலும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வாகன விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பாலும் இந்நிறுவனப் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன.
கட்டுமானத்துறை மற்றும் வங்கித் துறை பங்குகளும் அதிக விலைக்கு விற்பனையாயின.
ஆசிய சந்தையில் உருக்கு நிறுவனப் பங்கு விலைகள் 3 சதவீத சரிவைச் சந்தித்தன. சீன தயாரிப்புகளுக்கு கூடுதல் சுங்க வரியை அமெரிக்க விதிக்கக் கூடும் என்ற அச்சமே இதற்கு முக்கியக் காரணமாகும்.
அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 8,459.06 கோடிக்கு முதலீடு செய்துள்ளதாக வெளியான தகவலும் பங்குச் சந்தை சரிவை தடுத்து நிறுத்தப் போதுமானதாக அமைந்தது.
மாருதி சுஸýகி நிறுவனப் பங்குகள் 5.23 சதவீதம் அதிகரித்தது. ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர் பங்குகள் 4.47 சதவீதமும், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 3.82 சதவீதமும், பார்தி ஏர்டெல் 2.18 சதவீதமும், ஏசிசி 2.04 சதவீதமும், டிஎல்எஃப் 1.92 சதவீதமும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 1.75 சதவீதமும், பாரத ஸ்டேட் வங்கி 1.69 சதவீதமும், கிராஸிம் 1.49 சதவீதமும், ஹிண்டால்கோ பங்கு விலை 1.21 சதவீதமும் உயர்ந்தது.
ஐசிஐசிஐ பங்கு விலை 3.35 சதவீதம் சரிவைச் சந்தித்தது. சன் பார்மா 1.61 சதவீதமும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 1.49 சதவீதமும், ஸ்டெர்லைட் 1.29 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 1.19 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.
மொத்தம் 1,443 நிறுவனப் பங்கு விலைகள் ஏற்றமடைந்தன. 1,334 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. வெள்ளிக்கிழமை ரூ. 6,309.4 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. வியாழக்கிழமை ரூ. 9,401.72 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பாரத ஸ்டேட் வங்கி பங்குகள் மிக அதிகபட்சமாக ரூ. 181.83 கோடிக்கு விற்பனையானது
0 comments:
Post a Comment