7 செயற்கை கோள்களுடன் இந்திய ராக்கெட்

இந்தியா கடல் தட்ப வெப்ப நிலை மற்றும் கடல் வளங்களை பற்றி ஆய்வு நடத்துவதற்காக ஓசியான் சாட்-2 என்ற செயற்கைகோளை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள்.

இதை பி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இத்துடன் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 6 சிறு ரக செயற்கைகோள்களும் சேர்த்து அனுப்பப்பட இருந்தன.

இவற்றை அனுப்ப பி.எஸ்.எல்.வி.-சி 14 என்ற ராக்கெட் உருவாக்கப்பட்டது. இது 44.4 மீட்டர் உயரமும், 230 டன் எடையும் இருந்தது.

இதை இன்று ஸ்ரீஹரி கோட்டா விண்வெளி தளத்தில் இருந்து ஏவ முடிவு செய் திருந்தனர்.

ராக்கெட்டில் ஓசியான் சாட்-2 செயற்கைகோள் ஏற்றப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

ராக்கெட்டை பகல் 11.51 மணியில் இருந்து 12.06-க்கும் விண்ணில் செலுத்த நேரம் நிர்ணயித்து இருந்தனர். இதற்கான கவுண்டவுன் நேற்று முன்தினம் 9 மணிக்கு தொடங்கியது.

நேற்று இரவில் இருந்தே ராக்கெட்டை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இன்று காலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக தலைவர் மாதவன் நாயர் மற்றும் விஞ்ஞானிகள் ஏவுதளம் கட்டுப்பாட்டு அறைக்கு வந்தனர்.

ராக்கெட் ஏவுவதை பார்வையிட துணை ஜனாதிபதி அமீது அன்சாரி வந்திருந்தார். அவரும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஏவும் பணியை பார்வையிட்டார்.

ராக்கெட் இயக்கத்தை கட்டுப்படுத்தும் விஞ்ஞானிகள் தயார் நிலையில் இருந்தனர்.

51 மணி நேர கவுண்டவுன் சரியாக 11.51 மணிக்கு முடிவுக்கு வந்தது. உடனே ராக்கெட்டில் அடியில் தீப்பற்றியது. அடுத்த வினாடி ராக்கெட்டில் உந்துதல் ஏற்பட்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

தீக்குழம்பு மற்றும் புகைகளை கக்கியபடி ராக்கெட் வானத்தை கிழித்து கொண்டு மேல் நோக்கி சென்றது.

விஞ்ஞானிகள் வகுத்து இருந்த பாதையில் சரியான திசையில் சென்று கொண்டிருந்தது. உடனே விஞ்ஞானிகள் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

ராக்கெட் புறப்பட்டு குறிப்பிட்ட வினாடியில் ஓசியான்சாட் செயற்கை கோளை அதன் சுற்று வட்ட பாதையில் நிலை நிறுத்தியது. அதன் பிறகு மேலும் ராக்கெட் பயணம் செய்து 6 சிறு செயற்கைகோள்களையும் அதன் பாதையில் நிறுத்தியது. 20 நிமிடத்தில் 7 செயற்கைகோள்களும் அந்தந்த இடத்தில் நிலை நிறுத்தப்பட்டது.

ராக்கெட்டில் முழு பயணமும் சரியான பாதையில் சென்று பயணத்தை முடித்து கொண்டது.

ராக்கெட் வெற்றிகரமாக பறந்ததும் அங்கிருந்த அனைத்து விஞ்ஞானிகளும் கட்டிப்பிடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

துணை ஜனாதிபதி அமீது அன்சாரி அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார். இஸ்ரோ தலைவர் மாதவன் நாயரும் விஞ்ஞானிகளை பாராட்டினார்.

பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவி இந்திய விஞ்ஞானிகள் இமாலய சாதனையை புரிந்தனர். பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வகையில் இன்று ஏவப்பட்டதுடன் சேர்த்து இதுவரை 16 ராக்கெட்டுகள் ஏவப்பட்டு உள்ளன. அதில் ஒரு ராக்கெட்டை தவிர அனைத்து ராக்கெட்டுகளும் வெற்றிகரமாக பறந்துள்ளன.

ராக்கெட் வெற்றிகரமாக பறந்ததை அறிந்ததும் பிரதமர் மன்மோகன் சிங் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயருக்கு டெலிபோன் செய்து வாழ்த்து தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails