பங்குச் சந்தையை பாதித்த பன்றிக் காய்ச்சல்: 150 புள்ளிகள் சரிவு

உலகம் முழுவதிலும் உள்ள அனைவரையும் அச்சுறுத்தி வரும் பன்றிக் காய்ச்சல் நோய் மும்பை பங்குச் சந்தையையும் விட்டுவைக்கவில்லை.

வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் ஆரம்பம் முதலே ஸ்திரமற்ற நிலை காணப்பட்டது. அதிகபட்சமாக 15,417 புள்ளிகள் வரை உயர்ந்த பங்குச் சந்தை ஒரு கட்டத்தில் 14,902 புள்ளிகள் வரை சரிந்தது. வர்த்தகம் முடியும்போது 150 புள்ளிகள் சரிந்து 15,009 புள்ளிகளாகக் குறைந்தது.

அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் மிக அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்ததும் சரிவுக்கு முக்கியக் காரணமாகும். புணேயில் பன்றிக் காய்ச்சல் பரவியதை அடுத்து மகாராஷ்டிர மாநிலம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது. இதனால் அன்னிய முதலீட்டாளர்கள் அச்சமடைந்து தங்கள் வசமிருந்த பங்குகளை விற்பனை செய்தனர்.

கடந்த 7-ம் தேதி வரை அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 1 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

இதுவரை பருவமழை குறைந்ததால் வேளாண் உற்பத்தி குறையும் என்ற அச்சத்தால் பங்குச் சந்தை பாதிக்கப்பட்டது. தற்போது அதிக அளவில் பரவி உயிர்க் கொல்லி நோயாக அச்சுறுத்தி வரும் பன்றிக் காய்ச்சல் நோய் காரணமாக பங்குச் சந்தையில் ஸ்திரமற்ற நிலை உருவாகியுள்ளது.

இதே நிலை நீடிக்கும்பட்சத்தில் பங்குச் சந்தையில் தொடர் சரிவு ஏற்படுவது உறுதி என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேசிய பங்குச் சந்தையிலும் 43 புள்ளிகள் சரிந்ததால் குறியீட்டெண் 4,437 புள்ளிகளாகக் குறைந்தது.

ஆட்டோமொபைல், அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பிரகாசம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து அவற்றின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் மிக அதிக பட்சமாக 9 சதவீத சரிவைச் சந்தித்தது. இதற்கு அடுத்தபடியாக ஏசிசி நிறுவனப் பங்கு 6.52 சதவீதமும், ஹீரோ ஹோண்டா 3.90 சதவீதமும், ஹிந்துஸ்தான் யுனிலீவர் 3.48 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 3.27 சதவீதமும் சரிந்தன.

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் டிசிஎஸ் நிறுவனப் பங்கு விலை 6.02 சதவீதம் அதிகரித்தது. விப்ரோ நிறுவனம் 2.80 சதவீதமும், இன்ஃபோசிஸ் 2.20 சதவீதமும், டாடா பவர் 2.12 சதவீதமும், ஓஎன்ஜிசி 1.90 சதவீதமும் உயர்ந்தன.

இரண்டாம் நிலை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைவிட முதல் நிலைப் பங்கு முதலீட்டை பெரும்பாலோர் தேர்வு செய்ததும் சரிவுக்கு முக்கியக் காரணம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் 1.49 சதவீதமும், அரசுத் துறை நிறுவனங்கள் 1.33 சதவீதமும், வங்கிகள் 1.30 சதவீதமும், மின்துறை 0.93 சதவீதமும், எண்ணெய், எரிவாயு நிறுவனங்கள் 0.43 சதவீதமும், உருக்கு நிறுவனங்கள் 0.63 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails