யூனிநார் - தொடக்கமே தூள்

நிமிடத்திற்கு 29 பைசா, எஸ்.டி.டி.க்கு 49 பைசா என்ற குறைவான கட்டணத்துடன் மொபைல் சேவையில் இறங்கியுள்ளது யூனிநார். இந்திய மொபைல் சந்தையில் வாரந்தோறும் ஏதாவது அதிரடி ஆரம்பங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

சென்ற வாரம் புதிய நிறுவனமாக யூனிநார், ஜி.எஸ்.எம். சேவையில் இறங்கியுள்ளது. யூனிடெக் மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த டெலிநார் குரூப் இணைந்து யூனிநார் நிறுவனத்தைத் தொடங்கி உள்ளன. டெலிநார் உலக அளவில் தொலை தொடர்பு சேவையில், ஆறாவது பெரிய நிறுவனமாகும்.

யூனிநார் ஒரே நாளில் இந்தியாவின் ஏழு தொலைதொடர்பு மண்டலங்களில், எட்டு மாநிலங்களில், தங்களின் ஜி.எஸ்.எம். சேவையைத் தொடங்கி உள்ளது. எந்த நிறுவனமும் இதுவரை இவ்வாறு ஒரேநாளில் அதிக இடங்களில் தங்கள் ஜி.எஸ்.எம். சேவையைத் தொடங்கியதில்லை என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம் கிழக்கு மற்றும் மேற்கு மற்றும் ஜார்க்கண்ட் உட்பட்ட பீஹார் ஆகிய மண்டலங்களில் இந்த சேவை வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இயங்கும் பிற நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டு போன் அழைப்புகள் அங்கு அனுப்பப்படுகின்றன.

இந்நிறுவனம் நிமிடத்திற்கு லோக்கல் அழைப்புக்கு 29 பைசா, எஸ்.டி.டி. அழைப்பிற்கு 49 பைசா எனக் கட்டணம் வசூலிக்கிறது. கால் செட் அப் கட்டணமாக 29 பைசா செலுத்த வேண்டும். இன்னொரு திட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.2 வாடகையாகச் செலுத்தி இதே கட்டணத்தில் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

ஒரு நாளில் நான்கு கால்களை இந்த போனில் குறைந்த பட்சம் ஏற்படுத்தினால் வாடிக்கையாளர்கள் குறைந்த கட்டணப் பயனை அடையலாம். விநாடிக்கு பைசா என்ற திட்டம் எதுவும் யூனி நார் வசம் இல்லை எனத் தெரிகிறது.

இந்த சேவைகளை வழங்க நாடெங்கும் 2 லட்சத்து 10 ஆயிரம் விற்பனை மையங்களை அமைத்துள்ளது யூனிநார். தமிழ்நாட்டில் 45 ஆயிரம் மையங்களும், 169 விநியோகஸ்தர்களும் உள்ளனர். மொபைல் பயன்பாடு இளைஞர்களிடம் அதிவேகமாகப் பரவி வருவதால், அவர்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை யூனிநார் பிரிவின் தலைவர் ஸ்டெபான் தெரிவித்தார்.

மொத்த மொபைல் சந்தாதாரர்களில் 8% பேரை 2018க்குள் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 3ஜி வகை சேவையில் இந்த நிறுவனம் தற்போதைக்கு இறங்காது என்றும் தெரிகிறது.

இந்தியாவில் ஜப்பானின் டொகொமோ, பிரிட்டனின் வோடபோன், ரஷ்யாவின் சிஸ்டெமா ஆகிய வெளிநாட்டு நிறுவனங்கள் ஏற்கனவே இயங்கி வருகின்றன. நார்வே நாட்டின் டெலிநார் அடுத்ததாகும். அடுத்து அராப் எமிரேட் நாட்டைச் சேர்ந்த எடிசலாட் இந்தியாவில் தன் சேவையினைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

120 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில், மாதந்தோறும் 1.5 கோடி புதிய மொபைல் இணைப்புகள் தரப்பட்டு வருகின்றன. எனவே எந்த வகையான கட்டண யுத்தம் நிறுவனங்களுக்கிடையே இருந்தாலும், தனக்கும் ஒரு இடம் உண்டு என வெளிநாட்டு நிறுவனங்கள் திட்டமிடுகின்றன

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails