தாங்கள் வாங்கிய மொபைல் சேவை தலைவலியைத் தந்தாலும், அந்த எண்ணைப் பலருக்குத் தந்துவிட்டோமே என்ற ஆதங்கத்தில், தொடர்ந்து ஒரே நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு, அரசு ஒரு தீர்வைத் தந்துள்ளது.
இந்த தலைவலி மருந்து விலை ரூ.19 மட்டுமே. ஆம், நம்மை அடையாளம் காட்டும் மொபைல் எண்ணை அப்படியே வைத்துக் கொண்டு, நிறுவனத்தை மட்டும் இனி மாற்றிக் கொள்ளலாம்.
டிசம்பர் 31 முதல் மெட்ரோ நகரங்களிலும், மார்ச் மாதம் முதல் நாட்டின் பிற பகுதிகளிலும் இந்த வசதி அமலுக்கு வருகிறது. ரூ. 19 என்பது அதிக பட்ச கட்டணமே. மொபைல் சேவை நிறுவனங்கள் அதற்கும் குறைந்த கட்டணத்தை வாங்கிக் கொண்டு மாற்றிக் கொடுக்கலாம்.
நிறுவனத்தை மாற்றிக் கொள்ள விரும்பும் வாடிக்கையாளர், எந்த நிறுவனத்திற்கு மாறிக் கொள்ள விரும்புகிறாரோ, அந்த நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அவருடைய எண்ணை ஏற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ள வேண்டும். அந்த நிறுவனம், விண்ணப்பத்தின் மீதான முடிவினை நான்கு வேலை நாட்களுக்குள் அறிவித்தாக வேண்டும்.
தற்போதைய கணிப்பின் படி, 25 சதவீத வாடிக்கையாளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் மாற்றும் வசதியை போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்கள்தான் அதிகம் பயன்படுத்துவார்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்களே அதிகம் உள்ளனர் என்பதுவும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த நவம்பர் மாதத்தில் தன் மொபைல் சந்தாதாரர் எண்ணிக்கையை 50 கோடியாக உயர்த்தியுள்ளது இந்தியா. இன்னும் 60 கோடி பேர் இணைப்பினைப் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மார்க்கட்டைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்தான் ராஜா.
எனவே தான் பல்வேறு திட்டங்கள் மூலம் பழைய மற்றும் புதிய நிறுவனங்கள்,மக்களைக் கவர முயற்சிக்கின்றனர். புதிய நிறுவனங்கள் இந்த நிறுவனம் மாற்றும் வசதியைத் தங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
ஏற்கனவே தங்கள் எண்களை விட்டுவிட்டு, புதிய நிறுவனங்களிடம் புதிய இணைப்புகளை மாதந்தோறும் பெறுபவர் எண்ணிக்கை 3 முதல் 4 சதவிகிதம் ஆக உள்ளது. இது அடுத்த மாதம் முதல் மிக மிக அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களில் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்கள் அதிகம் இருப்பார்கள். நல்ல தரமான நெட்வொர்க் இணைப்பு வசதியைத் தரும் பழைய நிறுவனங்களும், புதிய புதிய திட்டங்கள் மூலம் மிகக் குறைவான கட்டணத்தில் இணைப்பு தரும் புதிய நிறுவனங்களும் இந்த புதிய சலுகை மூலம் நிச்சயம் பயன்பெறுவார்கள்.
இந்த வசதி அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் உட்பட 50 நாடுகளுக்கும் மேலாக, ஏற்கனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment