விண்டோஸ் 7 வரவேற்பும் வருத்தமும்

விண்டோஸ் 7 ஒரு மாதக் குழந்தைதான். இருப்பினும் அந்த தொகுப்பினைப் பயன்படுத்தும் வாசகர்கள் பலர் அவர்களின் அனுபவத்தினைத் தொலைபேசி வழியாகவும், கடிதங்கள் வாயிலாகவும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர் ஆகிய நகரங்களில் உள்ளனர். ஒரு சிலர் பெங்களூரிலிருந்தும் தொடர்பு கொண்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இதனை வரவேற்று சந்தோஷத்துடன் பயன்படுத்தி வருகின்றனர்.

ஒரு சிலர் மட்டுமே அதன் சில குறைகளைக் கூறினார்கள். என்ன இருந்தாலும் புதிய இந்த சிஸ்டத்தை வரவேற்கலாம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் என்றைக்கும் வெளியான சில வாரங்களில் பல மாறுதல்களுக்கு உள்ளாகும்.

பல பேட்ச் பைல்கள் தரப்படும். தர விட்டுப்போன டிரைவர்கள் வழங்கப்படும். அதன் பின்னரே அதனை நாம் முழுமையாக ஆய்வு செய்திட முடியும். இருப்பினும் நம் வாசகர்கள் பகிர்ந்து கொண்டவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

தற்போது விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வந்தவர்களே. 18 சதவிதம் பேர் விஸ்டா பயன்படுத்தி வந்தவர்கள். 6 சதவிதம் பேர் இரண்டையும் பயன்படுத்தியவர்கள். 3 சதவிதம் பேர் பிற நிறுவன ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தியவர்கள்.புதிதாய் விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்களில் பலர் தங்களின் பழைய சிஸ்டத்திலிருந்து மேம்படுத்தி இதனைப் பெற்றுள்ளனர். ஒரு சிலரே புதிய கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 7 தரப்பட்டு பயன்படுத்துகின்றனர்.

அப்கிரேட் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள், மிகவும் எளிதாக மேம்படுத்துதல் நடந்தது என்றே கூறுகின்றனர். பிரச்னைகள் என்று எடுத்துக் கொண்டால் டிரைவர்கள் சில தேவைப்பட்டதாகத் தெரிகிறது. அடுத்ததாக ஏற்கனவே பயன்படுத்திய சாப்ட்வேர்கள் சில இயங்க மறுத்தன. ஒரு சிலருக்கு சிஸ்டம் கிராஷ் ஆகி, புளு ஸ்கிரீன் ஆப் டெத் காட்டப்பட்டது.

ஆனால் இந்த பிரச்னைகள் எல்லாம், எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் புதியதாக கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும்போது வருபவையே. விஸ்டா மற்றும் எக்ஸ்பியிலும் இவை இருந்தன; ஆனால் விரைவில் சரி செய்யப்பட்டன. எனவே இதிலும் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

நம் வாசகர்கள் விண்டோஸ் 7 தொகுப்பில் வரவேற்று ரசித்த புதிய அம்சங்களைப் பார்க்கலாம். டாஸ்க்பார், சிஸ்டம் ட்ரே, விண்டோ டைலிங், டெஸ்க்டாப் தரும் ஏரோ பீக் காட்சி –– ஆகியவற்றை அனைவருமே குறிப்பிட்டுள்ளனர். மிகவும் உற்சாகமாக வரவேற்கப்பட்ட வசதி புதிய டாஸ்க்பார் தான். அதிகம் வரவேற்பு பெறாத அம்சம் இந்த சிஸ்டத்துடன் தரப்பட்டுள்ள இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 தான். அடுத்ததாக ஹோம் குரூப் மற்றும் மீடியா பிளேயர் ஆகும். பலரும் இந்த மூன்றைப் பற்றி அதிகம் குறைபட்டுக் கொள்கின்றனர்.

விஸ்டாவில் அதிகம் வரவேற்கப்படாத யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல், விண்டோஸ் 7–ல் விரும்பப்படுவதாகத் தெரிகிறது. ஒரு சில குறைகளைக் கூறியவர்களிடம் பொதுவான ஒன்றை அறிய முடிந்தது. குறிப்பிட்ட ஒரு குறையைப் பற்றிக் கூறிவிட்டு, விண்டோ எக்ஸ்பி அந்த விதத்தில் சிறந்தது என்றே கூறுகின்றனர். அதில் ஏற்பட்ட சந்தோஷமும் நிறைவும் கூட விண்டோஸ் 7 மீது குறை சொல்ல வைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

விண்டோஸ் 7 தொகுப்பில் விண்டோஸ் மெசஞ்சர், மூவி மேக்கர், லைவ் மெயில் ஆகியவை இல்லை. இவற்றைப் பயன்படுத்தாதவர்களுக்கு இது இல்லாதது பிரச்னை இல்லை. பழைய பிரிண்டர்கள் மற்றும் பல இணைப்பு சாதனங்களுக்கான டிரைவர்கள் இந்த தொகுப்பில் இல்லாதது, இவற்றைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது. இது களையப்படவேண்டும்.

மேலும் இந்த டிரைவர் புரோகிராம்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக டிஜிட்டல் சிக்னேச்சரை விண்டோஸ் 7 எதிர்பார்க்கிறது. எனவே ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வந்த டிஜிட்டல் பிரிண்டர் அல்லது வெப் கேமரா வைத்திருந்தால் சிக்கல் தான். பல புதிய யூசர் இன்டர்பேஸ்களை நாம் அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தை விண்டோஸ் 7 ஏற்படுத்துகிறது.

ஜம்ப் லிஸ்ட், ஒன் கிளிக் வை–பி, ஹோம் குரூப் மற்றும் டிவைஸ் ஸ்டேஜ் ஆகியவற்றை இங்கு குறிப்பிடலாம். ஆனால் இவை எல்லாம் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். விண்டோஸ் 7 அதிகப் பாதுகாப்புடன் அமைக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் வைரஸ்களின் பாதிப்பு இதன் மீதும் எளிதாக ஏற்படுகிறது என்பதே உண்மை என இந்த வகையில் இதனை சோதனை செய்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் இன்னொன் றையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். மற்ற விண்டோஸ் பதிப்புகளில், வைரஸிற்கு எதிரான பாதுகாப்பு புரோகிராம் இணைக்கப்பட்டிருந்தது.

விண்டோஸ் 7ல் அந்த மாதிரி எதுவும் இல்லை. ஆனால் பொதுவாக எல்லோரும் குறிப்பிட்ட குறை, விலை தான். விண்டோஸ் 7 சிஸ்டம் விலை இன்னும் குறைக்கப்பட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். சிலருக்கு ஏன் விலையில் இத்தனை வேறுபாடு உள்ளது எனக் குறை காண்கின்றனர். பலர் விலை குறைந்த பின்னர் வாங்கிப் பயன்படுத்தக் காத்திருக்கின்றனர்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails