இந்தியாவில் இமெயில் பயன்பாட்டில் யாஹூவை பின்னுக்குத் தள்ளி ஜிமெயில் முன்னுக்கு வந்துள்ளது. இதுவரை மிகவும் விசுவாசத்துடன் யாஹூ மெயிலைப் பயன்படுத்தி வந்த பலர் ஜிமெயிலுக்குத் தாவி உள்ளனர்.
வைஸி சென்ஸ்(ViziSense) என்ற ஆன்லைன் கண்காணிப்பு நிறுவனம் ஒன்று இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இப்போது அதிகம் பயன் படுத்தப்படும் இமெயில் கிளையண்ட்டாக கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் இடம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
ஒரு கோடியே 80 லட்சம் பேர்களுக்கும் மேலாக ஜிமெயிலை இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர். சென்ற மாதம் வரை யாஹூ தான் முதல் இடத்தில் இருந்து வந்தது.
யாஹூ மெயிலின் நேயர்கள் எண்ணிக்கை இப்போது ஒரு கோடியே 68 லட்சமாகும். சென்ற ஆகஸ்ட் மாதம் முதல் இதன் வாடிக்கையாளர்கள் 8% குறையத் தொடங்கினர். அதே நேரத்தில் ஜிமெயில் பயனாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து 3% அதிகரிக்கத் தொடங்கியது.
அக்டோபரின் முதல் வாரத்திலேயே ஜிமெயில் முதல் இடத்திற்கு வந்தது. அதே போல விண்டோஸ் லைவ் மெயில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் வளர்ச்சி 8% ஆகும்.
ரீடிப் மெயில் 62 லட்சத்து 50 ஆயிரம் பேர்களுடன் இயங்கி மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனாலும் உலக அளவில் யாஹூ மெயில் இடத்தை ஜிமெயில் பிடிக்க இன்னும் சில மாதங்களாகலாம். ஏனென்றால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் லைவ் மெயில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் ஜிமெயில் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதாக அங்குள்ள ஆய்வு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. எனவே யாஹூவும் மைக்ரோசாப்டின் விண்டோஸ் லைவ் மெயிலும் ஏதேனும் அதிரடியான மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டு வரவில்லை என்றால், நிச்சயம் உலக அளவில் ஜிமெயில் முதல் இடத்தைப் பிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம்.
இதனால் தான் அக்டோபர் தொடக்கத்தில் இந்தியாவின் பிரபலமான ஆங்கில நாளிதழில் யாஹூ ஒரு முழுப் பக்க விளம்பரத்தினை க் கொடுத்தது. தன்னிடம் விசுவாசமாக உள்ள மெயில் பயனாளர்களைத் தன் பக்கம் தக்க வைத்துக் கொள்ள யாஹு எடுத்த முயற்சியே இது என்று இந்தத் துறையில் உள்ளவர்கள் அனைவரும் எண்ணுகின்றனர்.
0 comments:
Post a Comment