ஐ.பி.முகவரிக்குத் தட்டுப்பாடு

சென்ற 1980 ஆம் ஆண்டு முதல் இன்டர்நெட் முகவரிகள், பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த முகவரிகள், ஒரு பொதுவான கட்டமைப்பில் அமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. 

இந்த கட்டமைப்புIpv4 (Internet Protocol version 4) என அழைக்கப்பட்டு வந்தது. இவற்றை வரையறை செய்து, பெயர் வழங்கும் பணியை, பன்னாட்டு அமைப்பான ICANNமேற்பார்வையிட்டு வருகிறது. 

பெயர் வழங்குவதற்கான இந்த Ipv4 கட்டமைப்பு சில நூறு கோடிகள் முகவரியினை அமைக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டது. ஆனால் இன்னும் சில மாதங்களில் இதனால் வழங்க முடியாத அளவிற்குத் தேவைப்படும் ஐ.பி. முகவரிகள் எண்ணிக்கை உயரும். 

சாத்தியப்படக் கூடிய எண்ணிக்கையில், இன்னும் 4% அல்லது 5% தான் மீதம் உள்ளது. கம்ப்யூட்டர்கள் மட்டுமின்றி, தற்போது, டிஜிட்டல் கேமராக்கள், மியூசிக் பிளேயர்கள், வீடியோ கேம் சாதனங்கள் நேரடியாக இன்டர்நெட்டில் இணைக்கப்படுவதால், அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு ஐ.பி. முகவரி தரப்பட வேண்டியுள்ளது. மேலும் எப்போதும் இன்டர்நெட்டில் இணைந்திருக்கும் சாதனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

குறிப்பாக மொபைல் போன்களை இங்கு குறிப்பிடலாம். புஷ் மெயில் போன்ற வசதிகள் பெற இவையும் தொடர்ந்து இன்டர்நெட் இணைப்பில் இருக்கின்றன. இவற்றிற்கும் நிரந்தர முகவரி தேவைப்படுகிறது. எப்போதும் இணைப்பில் இருக்கும் பிராட்பேண்ட் இணைப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே தான் இந்த தட்டுப்பாடு. 

தற்போதைக்கு இந்த தட்டுப்பாடு, ஓரளவிற்குச் சமாளிக்கப்பட்டு வருகிறது. நிரந்தர முகவரிக்குப் பதிலாகப் பல இடங்களில் தற்காலிக முகவரிகள் தரப்படுகின்றன. ஆனால் இது நிரந்தர தீர்வாகாது. 

இவற்றை எதிர்பார்த்தே, இன்டர்நெட் பொறியியல் வல்லுநர்கள், Ipv4 கட்டமைப்பிற்குப் பதிலாக, Ipv6 (Internet Protocol version 6)என்னும் கட்டமைப்பினைத் தற்போது உருவாக்கியுள்ளனர். இதன் தொடக்க உருவாக்கம் 1998 ஆம் ஆண்டிலேயே முடிவு செய்யப்பட்டது. இது 128 பிட்களில் அமைக்கப்படுவதால், ட்ரில்லியன் கணக்கில், ஐ.பி. முகவரிகளை அமைக்க முடியும். 

Ipv4 கட்டமைப்பு 32 பிட்களில் இயங்கக் கூடியது. எனவே 2 to the power of 32 என்ற கணக்கின்படி, 400 கோடி முகவரிகளே அமைக்க முடியும். தொடக்கக் காலத்தில் இது போதும் என்று திட்டமிடப்பட்டது. இன்டர்நெட் இந்த அளவிற்கு விரியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 

ஆனால், சுதாரித்துக் கொண்ட இன்டர்நெட் வல்லுநர்கள், 1998 ஆம் ஆண்டு முதல் புதிய Ipv6 கட்டமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்டமைப்பிலேயே, நெட்வொர்க் பாதுகாப்பிற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

புதிய கட்டமைப்பில், தகவல் தொகுப்பு என்று அழைக்கப்படுகின்ற இன்டர்நெட் பாக்கெட் பார்மட்டின் வடிவமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஒரு தகவல் பாக்கெட்டினை, ஒரே நேரத்தில் பல ஐ.பி. முகவரிகளுக்கு அனுப்பும் தொழில் நுட்பத்தினை இதில் கொண்டு வந்துள்ளனர். மேலும் இந்த வகையில், ஒரு பாக்கெட் ஹெடர் மிக எளிதாக அமைந்திருக்கும். இது இன்டர்நெட் செயல்பாட்டின் வேகத்தினை இன்னும் அதிகமாக்கும். 

Ipv6  இயக்கம் 128 பிட் என்பதால், ஐ.பி. அட்ரஸ் அமைக்க, நிறைய ஸ்பேஸ் கிடைக்கிறது. ஸ்பேஸ் அதிகம் என்பதால், ஐ.பி. முகவரிகளைப் பலப்பல வகைகளில் அமைக்க முடியும். இதனைப் பயன்படுத்தி 2 to the power of 128 முகவரிகள் அமைக்க முடியும். இது ஏறத்தாழ 3.4×10 to the power of 36 முகவரிகள் ஆக இவை இருக்கும். 

மேலும் இதில் கூடுதல் பாதுகாப்பினையும், இயக்கத்தில் வேகத்தையும், எளிமையையும் வழங்க முடியும். இந்த நடைமுறை புழக்கத்தில் வருகையில், பழைய நடைமுறையும் சேர்ந்தே இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

எந்த கண்டுபிடிப்பிற்கும் தேவை தான் அடிப்படை என்று ஒரு பழமொழி உண்டு. அது இங்கு உண்மையாகி உள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails