வோடபோன் சாதனை

மொபைல் போன் சேவை சந்தையில், தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் 10 கோடி என்ற வெற்றிப் படியை, அண்மையில் வோடபோன் தாண்டியுள்ளது.

பன்னாட்டளவில் வோடபோன் நிறுவனம் மிகப் பெரிய ஒன்றாக முன்னணியில் இயங்கி வருகிறது. இந்தியாவில் இந்நிறுவனம் சற்று தாமதமாக 2007ல் தான் தன் இயக்கத்தைத் துவங்கியது. ஹட்சின்சன் நிறுவனத்தின் 67% பங்கினைப் பெற்று இங்கு தன் வர்த்தகத்தை ஆரம்பித்தது.

தற்போது இந்தியாவின் அனைத்து 23 தொலை தொடர்பு மண்டலங்களிலும் தன் மொபைல் போன் சேவையினை வழங்கி வருகிறது.

சென்ற வாரம் தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளதாக அறிவித்துள்ளது. இதுவரை இந்த எண்ணிக்கையை இந்தியாவில் பெற்ற நிறுவனங்கள் பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஆகும்.

உலக அளவில் தங்களுக்கு கிடைத்திருக்கும் மொபைல் போன் சேவை அனுபவத்தின் அடிப்படையில், இந்திய வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த சேவையினை வழங்குவதாக, இந்நிறுவன தலைமை அதிகாரி மார்டென் அறிவித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்திட ரூ.20,000 கோடி முதலீடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். ஒரே நாட்டில் 10 கோடிக்கும் மேல் வாடிக்கையாளர்களைக் கொண்ட ஐந்தாவது நிறுவனமாக வோடபோன் இடம் பிடித்துள்ளது.

முதல் இரண்டு இடங்களை சீனா மொபைல் மற்றும் சீனா யூனிகாம் நிறுவனங்களும், மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனமும் கொண்டுள்ளன.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails