எளிதாகக் கையில் எடுத்துச் சென்று பயன்படுத்த நமக்கு உதவுவது பிளாஷ் ட்ரைவ். ஆனால் இதன் கொள்ளளவு நாம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பது ஒரு சிலரின் ஆதங்கமாகும். இதுவரை நமக்கு அதிக பட்ச அளவாக 64 ஜிபி கொள்ளளவுடன் பிளாஷ் ட்ரைவ்கள் கிடைத்து வருகின்றன.
அண்மையில் இத்துறையில் புகழ் பெற்ற கிங்ஸ்டன் நிறுவனம் தன்னுடைய டேட்டா ட்ராவலர் வரிசையில், 256 ஜிபி கொள்ளளவுடன் பிளாஷ் ட்ரைவ் ஒன்றைத் தயார் செய்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
டேட்டா ட்ராவலர் 310 என்ற பெயரில் வந்துள்ள இந்த ட்ரைவ், ஒளி ஊடுறுவிச் செல்லும் வகையில் அமைப்பினைக் கொண்டுள்ளது. இதன் நீளம் 73.7 மிமீ. தடிமன் 16.1 மிமீ. அகலம் 22.2 மிமீ. எடையும் மிகவும் குறைவு.
சற்று தடிமன் அதிகமாக இருப்பதால், அடுத்தடுத்து இரண்டு யு.எஸ்.பி. ட்ரைவ் இருந்தால், இதனைச் செருகிய பின்னர் இன்னொரு பிளாஷ் ட்ரைவினைச் செருகுவது கடினம்.
இந்த ட்ரைவ் செயல்படுகையில், இதனுள்ளே இருக்கும் எல்.இ.டி. விளக்கு எரிந்து காட்டுகிறது. இதன் ட்ரைவ் என்.டி.எப்.எஸ். வகையில் பார்மட் செய்யப்பட்டுள்ளது. இதில் 4 ஜிபி அளவுக்கு மேல் உள்ள பைல்களையும் காப்பி செய்திடலாம்.
இதிலேயே பாஸ்வேர்ட் ட்ராவலர் என்னும் சாப்ட்வேர் பதிந்து கிடைக்கிறது. முதல் முதலாக இதனைப் பயன்படுத்துகையில் பிரைவேட் ஸோன் என்று ஒரு பகுதியை உருவாக்குமாறு கேட்டுக் கொள்கிறது. மீதமுள்ள பகுதி பப்ளிக் ஸோன் ஆக பார்மட் செய்யப்படுகிறது.
முதல் பகுதியில் காப்பி செய்யப்படும் பைல்களை, நீங்கள் மட்டுமே கையாள முடியும். அதற்கான பாஸ்வேர்ட் பாதுகாப்பினை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இதன் விலை எந்த வகையிலும் பொருத்தமானதாக இல்லை. குறிக்கப்பட்டுள்ள விலை ரூ. 48,830. இதனால் விற்பனையாவது சற்று கடினமே.
0 comments:
Post a Comment