கோடிக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது, மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பின் புரோகிராம் ஒன்றைப் பயன்படுத்துகின்றனர் என்று கூறினால் அது மிகையாகாது. சிறிய, பெரிய நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வீடுகள் என எங்கும் எம்.எஸ்.ஆபீஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் புதிய பதிப்பு 2010 பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகிறது. அண்மையில் இதன் வளர்ச்சி குறித்து தொடர்புள்ளவர்களுக்கு மட்டும், (மைக்ரோசாப்ட் டெக்நெட் மற்றும் எம்.எஸ்.டி.என். சந்தாதாரர்களுக்கு மட்டும்) இது டவுண்லோட் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
வரும் மே 12, நாளை மறுநாள், இத்தொகுப்பின் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. வர்த்தக ரீதியாக, பொது மக்களுக்கு வரும் ஜூன் மாதம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த தேதியிலிருந்து என இன்னும் அறிவிப்பு வரவில்லை.
இத்தொகுப்பு குறித்த கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
ஆபீஸ் 2010, மிக ஆழமாக மேற்கொள்ளப்பட்ட சிந்தனையில், நுண்மையாக வடிவமைக்கப்பட்டு, பல சாப்ட்வேர் புரோகிராம்கள் இணைப்பாக அமைக்கப் பட்ட ஒரு பெருந் தொகுப்பாகும். இந்த தொகுப்பில் மையமாகத் தரப்படும் வேர்ட், எக்ஸெல், அவுட்லுக் மற்றும் பிரசன்டேஷன் புரோகிராம்கள், இன்றைய தேவைகளின் அடிப்படையில் புதிய மாற்றங்களைக் கொண்டுள்ளவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
முந்தைய ஆபீஸ் தொகுப்புகளுடன் ஒப்பிடுகையில், இத்தொகுப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் சிறப்பினைக் காணலாம். ஆபீஸ் 2007 தொகுப்பில் ரிப்பன் இன்டர்பேஸ் அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால் முழுமையாக அனைத்து தொகுப்புகளுடனும் தரப்படவில்லை.
அவுட்லுக், ஒன் நோட் மற்றும் பப்ளிஷர் தொகுப்புகளில், ஆபீஸ் 2003ல் இருந்த மெனுவே தொடர்ந்தது. ஆனால் ஆபீஸ் 2010ல் அனைத்துமே ரிப்பன் இன்டர்பேஸுக்கு மாறிவிட்டன. குறிப்பாக அவுட்லுக் தொகுப்பில் முன்பு புதைக்கப்பட்டிருந்த சில வசதிகள் அனைத்தும், ரிப்பன் இன்டர்பேஸில் எளிமையாகப் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
ஆபீஸ் 2010ல் பைல் மெனு மீண்டும் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2007 தொகுப்பில் ஓப்பன் அண்ட் சேவ் டயலாக் பாக்ஸ், பிரிண்ட் பங்சன் போன்றவை ஆபீஸ் மெனுவில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இவை இப்போது மிகத் தெளிவாக, வண்ணக் கலவையில் காட்டப்படுகின்றன. ரிப்பன் மெனுவில் இடது ஓரம் அனைத்தும் பைல் ஆப்ஷனாகத் தரப்பட்டுள்ளன.
மேலும் இந்த ரிப்பன் இன்டர்பேஸ் இணைந்து டெவலப்பர்கள் பல டேப்களைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப உருவாக்கி அமைக்கலாம். ஆப்ஜெக்ட், கிராபிக்ஸ் போன்றவற்றை எடிட் செய்வது, மாற்றி அமைப்பது போன்றவை, ஆபீஸ் 2010 தொகுப்பின் அனைத்து புரோகிராம்களில் ஒரே மாதிரியாக உள்ளன. ஆனால் டெக்ஸ்ட் எடிட் செய்வதில், இந்த புரோகிராம்களுக்கிடையே வேறுபாடுகள் உள்ளன.
வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட் ஒன்றில் சொற்களைத் தேடுவதற்கு பைண்ட் அண்ட் ரீபிளேஸ் பயன்படுத்துகிறோம். வேர்ட் 2010ல் நேவிகேஷன் பேனில் தரப்பட்டிருக்கும் மூன்றாவது டேப்பில் இந்த தேடல்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன.
சர்ச் பாக்ஸில் ஒரு சொல்லை டைப் செய்கையில், அந்த சொல் இருக்கும் அனைத்து இடங்களும் ஹைலைட் செய்யப்படுகின்றன. இதனால், நாம், சொல் உள்ள அடுத்தடுத்த இடங்களை தொடர் முயற்சி இன்றி அறியலாம்.
எக்ஸெல் தொகுப்பில் அனைத்து பங்ஷன்களும் மீண்டும் துல்லிதமாகவும் வேகமாகவும் செயல்படும்படி அமைக்கப்பட்டுள்ளன. டேட்டா பேஸ் தனியே அமைத்து, எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் இணைத்துப் பயன்படுத்துபவர்களுக்கு, இந்த தொகுப்பில் பல வசதிகள் கூடுதலாகத் தரப்பட்டுள்ளன.
அவுட்லுக் 2010ல், மெனுவிற்குப் பதில் ரிப்பன் இன்டர்பேஸ் தந்திருப்பது ஒரு முக்கிய மாற்றமாகும். புதியதாக தரப்பட்டுள்ள இரண்டு வசதிகளை இங்கு குறிப்பிட வேண்டும். குயிக் ஸ்டெப்ஸ் (Quick Steps) என்ற ஒரு டூல் உள்ளது. இதில் கட்டளைகளை லிஸ்ட்டிலிருந்து எடுத்து, அவற்றைச் செயல்படுத்தும் வரிசைப்படி அமைக்கலாம்.
பின்னர் இதனை ஹோம் டேப்பில் உள்ள பட்டன் ஒன்றுக்கு இணைக்கலாம். இந்த பட்டனை அழுத்துவதன் மூலம் அனைத்து கட்டளைகளையும் செயல்படுத்தலாம்.
அடுத்ததாக மெசேஜ்களை குழுவாக அமைக்கும் டூல் செயல்படும் விதத்தினைக் குறிப்பிடலாம். மெசேஜ் சப்ஜெக்ட் அடிப்படையில், அவை குழுவாக அமைக்கப்படுகின்றன. இதில் புதியதாக இக்னோர்(Ignore) ஆப்ஷன் தரப்பட்டுள்ளது.
இதனை அழுத்தினால், தேர்ந்தெடுக்கப்பட்ட மெசேஜ் அல்லது கான்வர்சேஷன் மற்றும் அதன் பின்னணியில் வரப்போகும் அனைத்து மெசேஜ்களும் தானாகவே நீக்கப்படுகின்றன. ஒருவருக்கு காப்பி செய்யப்படும் தேவையற்ற மெசேஜ்களை நீக்க இது பயன்படும்.
இந்த டூல் சப்ஜெக்ட் தலைப்பின் அடிப்படையில் செயல்படுவதால், அதில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் இந்த வசதி செயல்படாமல் போய்விடும். இந்த பிரச்னை வரும்காலத்தில் தீர்க்கப்படலாம்.
அடுத்ததாக ஆபீஸ் 2010 தொகுப்பு எவற்றை எல்லாம் கொண்டிருக்கிறது என்று பார்க்கலாம். அனைத்து எடிஷன்களும் Word, Excel, PowerPoint, மற்றும் OneNote ஆகிய அனைத்தையும் கொண்டுள்ளன. இவை 32 பிட் மற்றும் 64 பிட் வகைகளில் கிடைக்கின்றன.
ஹோம் எடிஷன் (Home Edition) : இது கீழ்க்காணும் வகைகளில் கிடைக்கிறது. Microsoft Office Home and Student 2010 – இந்த தொகுப்பினைப் பெறும் ஒருவர், தன் வீட்டில் மூன்று பெர்சனல் கம்ப்யூட்டர்களில் இதனை நிறுவிக் கொள்ளலாம். மேலே சொல்லப்பட்ட இந்த நான்கு அடிப்படை தொகுப்புகள் மட்டுமே உள்ளன. இதனை எந்த வர்த்தக நிறுவனத்திலும், லாப நோக்கில் செயல்படும் அமைப்புகளிலும் பயன்படுத்தக்கூடாது. அரசு அலுவலகங்களிலும் பயன்படுத்துவது, ஒப்பந்தப்படி தடை செய்யப்படுகிறது.
Microsoft Office Home and Business 2010:
இது சிறிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கென வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலே சொல்லப்பட்ட நான்கு தொகுப்புகளுடன், அவுட்லுக் தொகுப்பும் இணைக்கப்பட்டுள்ளது.
Microsoft Office Professional Academic 2010: இந்த தொகுப்பில் அவுட்லுக், பப்ளிஷர் மற்றும் அக்செஸ் (Outlook, Publisher, and Access) உள்ளன. – – @__.edu என்ற இமெயில் முகவரியைக் கொண்டுள்ள எவருக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அத்தாட்சி பெற்ற கல்வி சார்ந்த அமைப்புகள் வழியாகவே இதன் விற்பனை மேற்கொள்ளப்படும்.
பிசினஸ் எடிஷன் (Business Edition): இது கீழ்க்காணும் வகைகளில் கிடைக்கிறது.
Microsoft Office Standard 2010:
இந்த தொகுப்பில், அடிப்படையான நான்கு புரோகிராம்களுடன், அவுட்லுக் மற்றும் பப்ளிஷர் இணைக்கப் பட்டுள்ளன. மொத்த வால்யூம் லைசன்ஸ் முறையில் இது விற்பனை செய்யப்படும்.
Microsoft Office Professional 2010: சில்லரை விற்பனையாளர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அவுட்லுக், பப்ளிஷர் மற்றும் அக்செஸ் இணைக்கப்பட்டுள்ளன.
Microsoft Office Professional Plus 2010:
அடிப்படை தொகுப்புகளுடன் Outlook, Publisher, Access, SharePoint Workspace (formerly Groove), Communicate, and InfoPath ஆகியவை இணைக்கப்பட்டு கிடைக்கின்றன. வால்யூம் லைசன்ஸ் முறையில் வாங்கலாம்.
ஆபீஸ் 2010 ஐ இயக்க உங்கள் சிஸ்டம் எந்த கட்டமைப்புடன் இருக்க வேண்டும் என்பதனைப் பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி (எஸ்.பி.3 இணைப்புடன்), விண்டோஸ் விஸ்டா எஸ்.பி.1 அல்லது பின் வந்த இணைப்புடன் ( 32 அல்லது 64 பிட்) விண்டோஸ் 7 (32 அல்லது 64 பிட்) விண்டோஸ் சர்வர் 2003 ஆர் 2 மற்றும் விண்டோஸ் சர்வர் 2008.
ஹார்ட் டிஸ்க் குறைந்தது 3 ஜிபி இதற்கென இருக்க வேண்டும். வழக்கம்போல, ஒரு ஆபீஸ் 2010 தொகுப்பு, ஒரு கம்ப்யூட்டரில் மட்டுமே பதிந்து இயக்க லைசன்ஸ் வழங்கப்படுகிறது. கூடுதலாக பதிவதற்கென, ஒரு சில தொகுப்புகள் மட்டும் சில வரையறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
மேலே குறிப்பிட்டவை அல்லாமல் ஆபீஸ் ஸ்டார்ட்டர் எடிஷன் கிடைக்கிறது. ஆனால் இவை கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன. வெளியே தனியே சில்லரை விற்பனையில் வாங்க முடியாது.
இதில் வேர்ட் ஸ்டார்ட்டர் மற்றும் எக்ஸெல் ஸ்டார்ட்டர் ஆகியவை மட்டும் உள்ளன. இதனைப் பெற்றவர்கள், கூடுதலாகப் பணம் செலுத்து முழுமையான ஆபிஸ் 2010 தொகுப்பாகத் தங்கள் ஸ்டார்ட்டர் எடிஷனை மாற்றலாம்.
இந்தியாவில் இந்த பல்வேறு தொகுப்புகளின் விலை, வர்த்தக ரீதியாக வெளியிடப்படும் போது தெரியவரும்.
0 comments:
Post a Comment