கூகுள் காலண்டர்

கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்து இப்போது அதிகம் பேசப்படுகிறது. இணைய தளம் மூலமாக, நாம் இணையத் தொடர்பில் இருந்தவாறே, புரோகிராம்களைப் பயன்படுத்தி, நம் செயல்பாடுகளை மேற்கொள்வதே கிளவுட் கம்ப்யூட்டிங்.

இந்த வசதிகளை நமக்குத் தருவதற்கு, சர்வர்களை நிறுவி சேவை செய்திடும் நிறுவனங்கள், நம்மிடம் கட்டணம் பெறுகின்றன. சிறிய சில உதவிகளை, சேவைகளைத் தருவதற்குப் பல நிறுவனங்கள் நம்மிடம் கட்டணம் வாங்காமலேயே இயங்குகின்றன. ஆன்லைன் ஸ்டோரேஜ், ஆன்லைன் கன்வர்டர்கள் போன்றவை இந்த கிளவுட் கம்ப்யூட்டிங் வகையைச் சேர்ந்தவை தான்.

இந்த வகையில் கூகுள் வெகு நாட்களாக பல சேவையினைத் தந்து வருகிறது. அவற்றில் மிகவும் பயனுடையதும், இன்றைய காலத்திற்குத் தேவையானதுமான ஒன்று, கூகுள் காலண்டர். இது வெறும் நிகழ்வுகளைக் குறித்து வைத்துச் செயல்படும் காலண்டர் மட்டுமின்றி, இதன் சேவை இப்போது மொபைல் போனையும் இணைத்து நமக்குக் கிடைக்கிறது என்பது பலருக்குத் தெரிவதில்லை. இந்த இலவச சேவையை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம்.

1. இதற்கு முதல் தேவை ஜிமெயிலில் ஒரு அக்கவுண்ட். பின் இதனைப் பயன்படுத்தி கூகுள் காலண்டர் தளத்திற்குச் செல்லவும். அதில் செட்டிங்ஸ் (Settings) என்பதில் கிளிக் செய்திடவும்.

2. அதன்பின் அங்கு கிடைக்கும் டேப்களில் மொபைல் செட் அப் டேப்பில் (Setup) கிளிக் செய்திடவும்.

3. இதில் உங்கள் மொபைல் எண்ணை என்டர் செய்திட வேண்டும். அதன் பின் Send Verification Codeஎன்பதில் கிளிக் செய்து காத்திருங்கள். உங்கள் மொபைல் போன் எண் சோதனை செய்யப்பட்டு அந்த போனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பப்படும்.

சில நொடிகளில் கிடைக்கும் இந்த செய்தியில் Your Google calendar verification code is என ஒரு எண் தரப்படும். இதுதான் உங்கள் கூகுள் காலண்டர் அக்கவுண்ட்டுக்கான பாஸ்வேர்ட்.

அடுத்து கூகுள் காலண்டரில் வரும் நாட்களுக்கான நிகழ்வுகளை முன் கூட்டியே குறித்து வைக்கலாம். எடுத்துக் காட்டாக மே மாதம் 22 அன்று, மாலை 5 மணிக்கு ஒரு திருமண வரவேற்பில் கலந்து கொள்ள வேண்டும் என்றால், அதனைச் சுருக்கமாக எழுதி வைக்கலாம்.

இது குறித்த செய்தி உங்களுக்கு அந்த நாளில், நிகழ்ச்சிக்கு எவ்வளவு நேரம் முன்னால் உங்கள் போனுக்கு எஸ்.எம்.எஸ். ஆகவும், இமெயிலுக்கு செய்தியாகவும் அனுப்பப்பட வேண்டும் என்பதனைக் குறிக்கலாம்.

30 நிமிடத்திற்கு முன் அல்லது ஒரு நாளுக்கு முன் எனக் குறித்தால், சரியான அந்த நேரத்திற்கு உங்களுக்கு எஸ்.எம்.எஸ். செய்தி கிடைக்கும். ஜிமெயிலுக்கு இமெயில் செய்தி அனுப்பப்படும்.

உங்கள் கூகுள் காலண்டரில் குறித்து வைத்த தகவல்களை நீங்கள் மட்டும் பார்க்குமாறு வைக்கலாம். அல்லது உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தெரிந்துகொள்ளுமாறும் செட் செய்திடலாம்.

இதனால் உங்கள் நாட்குறிப்பினை நீங்கள் எங்கிருந்தாலும், இணையத்தில் மூலம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு ஒன்றும், வர்த்தக மற்றும் அலுவலக நடவடிக்கைகளுக்கு ஒன்றும், நண்பர்களுக்காக ஒன்றும் என எத்தனை காலண்டர்களை வேண்டுமானாலும் வடிவமைத்து வைத்துக் கொள்ளலாம்.

இந்த காலண்டரிலேயே தேடல் வசதி தரப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி என்று நடைபெற உள்ளது என மறந்து விட்டால், இதன் மூலம் தேடி அறியலாம்.

இது ஒரு இணைய வழிச் செயல்பாடு என்பதால், எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டரிலும் இதனைக் காணலாம். அதே போல எந்த பிரவுசர் வழியாகவும் பெறலாம்.

இந்த சேவை முழுவதும் இலவசமே. கட்டணம் இல்லை என்பது இதன் சிறப்பு. இதனை ஒரு முறை பயன்படுத்தினால், தொடர்ந்து உங்கள் அன்றாட வாழ்க்கையில், உங்களை வழி நடத்தும் நம்பிக்கையான நண்பனாக கூகுள் காலண்டர் மாறுவதனைக் காணலாம்.

கூகுள் காலண்டர் செட்டிங்ஸ் அமைப்பில் லேப்ஸ் என்பதைக் கிளிக் செய்து, இன்னும் என்ன வழிகளில், கூகுள் காலண்டரை நம் உற்ற வழிகாட்டியாக மாற்றலாம் என்பதனைத் தெரிந்து கொள்ளலாம்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails