இந்திய அளவில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வியை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
2005–06 ஆம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை 53,000 பள்ளிகள் பயன்பெற்று வந்தன. இது தற்போது விரிவுபடுத்தப்படுகிறது. விரிவுபடுத்தப்படும் இந்த திட்டம் 2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான 11 ஆவது திட்ட காலத்தில் மேற்கொள்ளப்படும்.
இதற்கென ரூ.6,926.13 கோடி செலவிடப்படும். இதில் மத்திய அரசின் பங்காக ரூ.6,000 கோடி கிடைக்கும். மீதத் தொகையினை மாநிலங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கம்ப்யூட்டர் கல்வியினை வளரும் மாணவர்களுக்கு அளித்து அவர்களை கம்ப்யூட்டர் பயனாளர்களாக மாற்ற இது பெரும் அளவில் உதவும். குறிப்பாக அரசு பள்ளிகள் ஏழை கிராமப் புற மாணவர்களுக்குக் கல்வியை வழங்கி வருவதால், இந்த திட்டம் பெரும் அளவில் மாணவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
கம்ப்யூட்டர் கல்வி வழங்கப் பயன்படுத்தப்படுவதுடன், பிற பாடங்களைக் கற்றுக் கொள்வதிலும் இந்த கம்ப்யூட்டர்கள் மாணவர்களுக்கு பயனுள்ளதாய் அமையும். மேலும் மாநில மொழிகளில் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது குறித்த தெளிவும் மாணவர்களுக்குக் கிடைக்கும்.
இதன் மூலம் மக்களிடையே கம்ப்யூட்டர் கற்றவர்கள் மற்றும் அறியாதவர்கள் என்ற இடைவெளி குறைய இவை பயன்படும். கம்ப்யூட்டர்கள், அவை இயங்கத் தேவையான சாப்ட்வேர், கல்வி சார்ந்த அப்ளிகேஷன் புரோகிராம்கள், மின்சார இணைப்பு, யு.பி.எஸ்., இணைய இணைப்பு ஆகியவை ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்படும்.
இந்த தகவலை மத்திய மனித வளத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். இந்த திட்டம் மூலம் 1.5 கோடி மாணவர்களும் 10 லட்சம் ஆசிரியர்களும் பயனடைய இருப்பதாக பிரதமர், திட்டம் தொடங்கியபோது தெரிவித்தார்.
இந்த திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதில் பல பிரச்னைகளைச் சந்தித்துள்ளது. பத்து கம்ப்யூட்டர்கள், யு.பி.எஸ். , பி.எஸ்.என்.எல். இன்டர்நெட் இணைப்பு ஆகிய சாதனங்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால் மிகத் தாமதமாகத்தான் இவை இன்ஸ்டால் செய்யப்பட்டு இயக்கப்படுகின்றன. இவற்றிற்கான தனி அறைகள் இல்லை என்பதால், பெரும்பாலான பள்ளிகளில் தலைமை ஆசிரியர் அறைகள் அல்லது ஆசிரியர் அமரும் அறைகளிலேயே இவை வைக்கப்படுகின்றன.
இதனால் ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் சுதந்திரமாக இவற்றை இயக்கிக் கற்றுக் கொள்வதில் தடங்கல் ஏற்படுகின்றன. மேலும் இவற்றைப் பயன்படுத்திக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களுக்குப் போதுமான பயிற்சி தரப்படுவதில்லை.
எனவே திட்டத்திற்கு நிதியும் சாதனங்களும் தரப்படுவதோடு நிற்காமல், மாநில அரசுகளின் துறை அதிகாரிகள் இவை தொடர்ந்து பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக் கூறுகளைத் தர வேண்டும்
0 comments:
Post a Comment