2010ல் மொபைல் போன்கள்

2009 ஆம் ஆண்டு மொபைல் பயன்படுத்து பவர்களுக்கு ஒரு தங்கச் சுரங்கமாக அமைந்தது என்றால் மிகையாகாது. பல்வேறு புதிய வசதிகளுடன் பல போன்கள் அணி வகுத்தன.

வீடியோ அழைப்பு, 3ஜி அலைவரிசை, வீடியோ பிளாக்கிங், டச் ஸ்கிரீன் வசதி, குவெர்ட்டி கீ போர்டு, வீடியோ கால், வாய்ஸ் கால், மல்ட்டி மீடியா மெசேஜ்,கேமராவில் ஆட்டோ போகஸ், ஸெனான் பிளாஷ், முகம்/சிரிப்பு அறிந்து செயல்படல் எனப் பல வசதிகள் சாதாரண போன்களிலும் கிடைக்கத் தொடங்கின.

இது போல பல மாடல்கள் அறிவிக்கப்பட்டு வர இருக்கின்றன. வசதிகள் மேம்படுத்தப்பட்டது மட்டுமின்றி, போனின் விலைகளும் வேகமாகக் குறைந்தன. இதற்கு மொபைல் சேவை நிறுவனங்களின் கட்டணக் குறைப்பு பெரிதும் உதவியது.

வரும் ஆண்டில் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் போனின் வசதிகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அதன் ஸ்டைலான வடிவமைப் பினையும் பார்த்து போன் வாங்கும் வழக்கம், சென்ற ஆண்டின் இறுதியில் பெரிதும் காணப்பட்டது. இதனால் அனைத்து முன்னணி நிறுவனங்களும் வடிவமைப்பில் கவனம் செலுத்தின.

நோக்கியாவின் அண்மைக் காலத்திய போன்கள் இதனை உறுதி செய்கின்றன. சோனி எரிக்சனின் சாஷியோ இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. தொழில் நுட்பங்கள் மேம்படுத்தப்பட இருக்கின்றன. அதி நவீன தொழில் நுட்பங்களால், தகவல் தொடர்பு நம் கரங்களில் தவழும் செல்லப் பிள்ளையாக மாற இருக்கிறது.

தற்போது ஜியோ டேக்கிங் வசதி மேம்படுத்தப்பட்டு, சாடலைட் தொடர்பு சாதாரண அழைப்புகளுக்கும் கிடைக்கும். அதற்கேற்ற வகையில் செல்லுலர் மற்றும் சாடலைட் தொடர்புகளை ஒருங்கிணைக்கும் சிப் கிடைக்கும். இதனால் செல்லுலார் வசதியற்ற இடங்களுக்குச் செல்கையில், சாடலைட் தொடர்பு கைகொடுக்கும்.

போனின் உள் நினைவகத்திறன் உயரும். இது 60 ஜிபி வரை செல்லும் எனச் சொல்கின்றனர். கேமராவின் திறன் 24 எம்பி வரை அதிகப்படுத்தப்படும். இவற்றிற்கு ஈடு கொடுக்கும் வகையில் விண்டோஸ் மொபைல் சிஸ்டம் தொகுப்பு 7 அமையும் எனத் தெரிகிறது.

தன்னுடைய மொபைல் போன்களில் அடுத்து என்ன முன்னேற்றம் இருக்கும் என சாம்சங் கோடி காட்டியுள்ளது. 5 கிகா ஹெர்ட்ஸ் (5GHz) பிராசசர், 10ஜிபி முதல் 20 ஜிபி வரையிலான உள் நினைவகம், முப்பரிமாண படங்கள் எடுக்கும் கேமரா என அவற்றைப் பட்டியலிட்டுள்ளது.

இவற்றைக் காட்டிலும் இந்நிறுவனம் அறிவித்துள்ள பேட்டரி குறிப்பிடத்தக்கது. தண்ணீரைத் தன் சக்திக்கான மூலமாகக் கொண்டு இயங்கும் பேட்டரிகள் வர இருக்கின்றன. போன் ஸ்விட்ச் ஆன் செய்தவுடன், அதில் உள்ள நீர் மற்றும் மெட்டல் செயல்பட்டு ஹைட்ரஜன் உருவாகும். இது பேட்டரிக்கு மாற்றப்பட்டு அதில் உள்ள ஆக்ஸினுடன் இணைந்து மின்சக்தி உருவாகும்.

இது 10 மணி நேரம் தங்கி நிற்கும். இதற்கான ஹைட்ரஜன் கேட்ரிட்ஜ்களை மாற்றினால் போதும். சாதாரணமாக மொபைல் பயன்படுத்துபவர்கள் ஐந்து நாட்களுக்கு ஒன்று மாற்றினால் போதும். இது அடுத்த நிலையில் ஹைட்ரஜன் கேட்ரிட்ஜாக இல்லாமல், நீர் அடங்கியதாக மட்டும் இருக்கும்.

2009 ஆம் ஆண்டில் ஐந்து போன்களில் ஒன்றில் ஆக்ஸிலரோமீட்டர் இடம் பெற்றது. 2010ல் இது இரண்டில் ஒரு போனில் இடம் பெறும் வகையில் பெருகும். திரைத் தோற்ற மாறுதல், அசைத்தால் கட்டளை இடம் பெறுதல், அடுத்த பாட்டு அல்லது காட்சிக்கு மாறுதல் போன்ற வசதிகள் இந்த ஆக்ஸிலரோ மீட்டரினால் தான் கிடைக்கின்றன.

நோக்கியா, சோனி எரிக்சன்,சாம்சங் மற்றும் எல்.ஜி. வெளியிட்ட அண்மைக் காலத்திய போன்களில் இவை இடம் பெற்றுள்ளன. சோனியின் பெரும்பாலான போன்களில் இது உள்ளது. இனி அனைத்து போன்களிலும் இவை வரலாம். இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட டச் ஸ்கிரீன், 2010ல் மேலும் மேலும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails