தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் பாலா, 2008-ம் ஆண்டின் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். "நான் கடவுள்' படத்துக்காக பாலாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
56-வது தேசிய திரைப்பட விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது.
இதில் அனிருத்தா ராய் செüத்ரி இயக்கிய "அந்தாகீன்' என்ற வங்க மொழிப் படம் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் சர்மிளா தாகூர், ராகுல் போஸ், அபர்ணா சென் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திபாகர் பானர்ஜி இயக்கிய "ஒயே லக்கி ஒயே' ஹிந்திப் படம் சிறந்த பொழுதுபோக்குப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
"ஜோக்வா' மராட்டிய மொழிப் படத்தில் நடித்த உபேந்திரா லிமயே சிறந்த நடிகர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், கரு.பழனியப்பன் இயக்கிய "சிவப்பதிகாரம்' தமிழ்ப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர். "ஜோக்வா' } சமூகப் பிரச்னைகளை நுணுக்கமான முறையில் வெளிப்படுத்தியதற்கான சிறந்த படம் என்ற விருதையும் பெற்றுள்ளது.
மதுர் பந்தார்கர் இயக்கிய "பேஷன்' ஹிந்திப் படத்தில் நடித்த முன்னாள் உலக அழகியும் பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான பிரியங்கா சோப்ரா சிறந்த நடிகை விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதே படத்தில் நடித்த கங்கனா ரணாவத் சிறந்த துணை நடிகையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
"ராக் ஆன்' ஹிந்திப் படத்தில் நடித்த அர்ஜுன் ராம்பால் சிறந்த துணை நடிகர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆர்யா, பூஜா ஆகியோருடன் ஏராளமான புதுமுகங்கள் நடிக்க பாலா இயக்கிய படம் "நான் கடவுள்'. எழுத்தாளர் ஜெயமோகனின் "ஏழாவது உலகம்' என்ற புத்தகத்தைத் தழுவி இந்தப் படம் உருவாக்கப்பட்டது. இளையராஜா இசையமைத்துள்ளார்.
காசியில் உள்ள தபஸ்விகளான "அகோரிகள்' மற்றும் சக மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு வாழ்வின் விளிம்பு நிலையில் வாழும் ஆதரவற்றவர்கள் ஆகியோரைப் பற்றி யதார்த்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் எடுத்துக்கூறிய இந்தப் படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. வழக்கமான திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு, ரசிகர்களுக்குப் புதிய கதைக் களத்தையும் வித்தியாசமான அனுபவத்தையும் அறிமுகப்படுத்திய இந்தப் படத்தை இயக்கியதற்காக பாலா சிறந்த இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
"நான் கடவுள்' படத்தில் பணியாற்றிய ஒப்பனைக் கலைஞர் மூர்த்தி, சிறந்த "மேக்கப் மேன்' விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கெüதம் வாசுதேவ் மேனன் இயக்கிய "வாரணம் ஆயிரம்' சிறந்த பிராந்திய மொழித் திரைப்படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது.
"தேங்க்ஸ் மா' ஹிந்திப் படத்துக்கு இசையமைத்த சாம்ஸ் படேல் சிறந்த இசையமைப்புக்கான விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். "ஜோக்வா' ஹிந்தி திரைப்படத்தில் பாடிய ஹரிஹரன் சிறந்த பின்னணிப் பாடகராகவும் "அந்தாகீன்' வங்க மொழிப் படத்தில் பாடிய ஷ்ரேயா கோஷல் சிறந்த பின்னணிப் பாடகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புதுதில்லியில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள விழாவில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தேசிய விருதுகளை வழங்குகிறார்
0 comments:
Post a Comment