வெளுத்துகட்டு - விமர்சனம்


ஒரே கிராமத்தில் வசிக்கும் கதிரும் அருந்ததியும் சிறு வயதில் இருந்தே காதலிக்கிறார்கள். கதிர் படிப்பு ஏறாமல் இடையில் நிறுத்திவிட்டு அடிதடி என ஊதாரியாகிறார். காதலை அருந்ததி பெற்றோர் எதிர்க்கின்றனர். 

ஒரு வேளை கஞ்சி கூட ஊற்ற முடியாதவனையா மணக்கப்போகிறாய் என்று கண்டிக்கின்றனர். ஆவேசமாகும் அருந்ததியோ, கதிரிடம் வெளியூர் போய் நிறைய பணம் சம்பாதித்து என் குடும்பத்துக்கு தகுதியான மருமகனாக வந்து என்னை கட்டிக்கொள் என்கிறார்.

 
காதலி சொல்படி கதிர் பட்டிணம் வருகிறார். கடினமாக உழைத்து ஓட்டல் கட்டி நிறைய சம்பாதிக்கிறார், பிறகு பணப்பெட்டியுடன் அருந்ததியை பார்க்க கிராமத்துக்கு வருகிறார். அங்கு எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன. இருவரும் இணைந்தார்களா என்பது கிளைமாக்ஸ்...

 
தறுதலை இளைஞன் ஒரு பெண்ணின் காதலால் எவ்வாறு உயர்கிறான் என்பதை கிராமிய மணத்தோடு யதார்த்தமாக காட்சி படுத்தியுள்ளார். இயக்குனர் சேனாபதி மகன். வம்பு சண்டைக்கு மல்லுக்கட்டியும் காதலில் உருகுபவராகவும் நிறைவாய் வருகிறார் கதிர். 

காதலி கட்டளைப்படி கிராமத்தில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து ஊரார் வாழ்த்தை பெறுவது அழுத்த மான பதிவு. நகரத்தில் டிபன் வியாபாரம் செய்யும் வண்டியை போலீசார் நொறுக்கி போட்டதும் அழுது புலம்பி இதயத்தை கனக்க வைக்கிறார்.

 
புதுமுகம் அருந்ததி அழகான வரவு. எனக்காக எதுவும் செய்வியா என கேட்டு உயரமான பாறையில் இருந்து அருவியில் கதிரை குதிக்க சொல்ல, அவரும் குதிக்க அய்யோ என அலறியபடி அருவிப் பகுதிக்கு ஓடிவந்து தண்ணீரில் உயிரை பிடித்தபடி தேடி புலம்பி காதலில் உயிர் பாய்ச்சுகிறார்.

 
தன்னை பலாத்காரம் செய்த வில்லனிடம் இது கதிரோட உடம்புடா இதையா தொட்டே என்று வெறியாக மாறி அரிவாளுடன் விரட்டி அசுரத்தனம் காட்டுகிறார்.
 

வழக்கமான பாணியில் இருந்து விலகி காதல், லட்சியம் என்ற கருவில் விறுவிறுப்பான கதையம்சம் உள்ள படமாக தயாரித்து உள்ளார் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன். வாழ்வை தொலைக்கும் இளைஞர்களுக்கு முன்னேற்றத்துக்கான பாடம் நடத்தி உள்ளார். நேர்த்தியான திரைக்கதை காட்சிகளோடு ஒன்ற செய்கிறது. பரணி இசையில் பாடல்கள் இனிமை, ஷோபா சந்திரசேகரனின் அசிலிபிசிலி வெளுத்துக்கட்டு பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. சுகுமாரின் ஒளிப்பதிவு பலம்.

 
சிறுவன் சிறுமியின் காதல், உரசல், விளையாட்டு திருமண வகையறாக்கள் ஒட்டவில்லை. அவற்றின் நீளத்துக்கு கத்திரி போட்டு இருக்கலாம்.

இயக்குனர் ராஜா, அர்ச்சனா சர்மா, பானு, முத்துராஜ், கேரக்டர்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டு உள்ளன.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails