தமிழ் சினிமாவில் இரு பிரிவினர் இருக்கிறனர். முதல் பிரிவினர், சினிமாவை அக்கு வேரு ஆணி வேராகக் கரைத்துக் குடித்தவர்கள். மற்றொரு பிரிவினர், ஆனா... ஆவன்னா... கூட தெரியாதவர்கள்.
சமீபத்தில் தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு இந்த இரண்டாம் பிரிவினரே மூலகாரணமாக இருக்கின்றனர். இரண்டாம் பிரிவினரில் பெரும்பாலோனோர் தயாரிப்பாளர்கள், என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
ஆணியைக் கண்ணால் அறைவதைப் போல பேராபத்தான இந்தத் தயாரிப்புத் துறையில் முதலீடு செய்த பலர், வந்த வழி பார்த்து திரும்பிக் கொண்டிருக்கின்றனர் என்பது வேறு கதை. இதைப் பார்த்த முதல் பிரிவினர், தமிழ் சினிமாவுக்கு தங்களது பங்களிப்பாக வாரிசுகளை நட்சத்திரங்களாக உருவாக்கி வருகின்றனர். பிரபலங்களின் மகனாப் பிறந்தால் போதும், எளிதில் நடிகராகிவிடலாம் என்ற நிலை வேகமாக வளர்ந்து வருகிறது.
"தலைவாசல், அமராவதி, கர்ணா, பூவேலி, ஜேம்ஸ் பாண்டு, உன்னருகே நானிருந்தால், ஸ்டூடன்ட் நம்பர் 1, நான் அவன் இல்லை' போன்ற படங்களை இயக்கிய செல்வா, "நாங்க' என்ற படத்தை இயக்குகிறார். செல்வாவின் 25வது படமான இதில், 13 புதுமுகங்களை அறிமுகம் செய்கிறார். இதில், ஒன்பது பேர் சினிமா பின்புலம் கொண்டவர்கள். பழைய நடிகர் தயாளனின் மகன் நிவாஸ், தயாரிப்பு நிர்வாகி குருசாமியின் வினோத், சசியின் மகன் அருண், மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளரின் மகன் விவேக், தெலுங்கு இசையமைப்பாளர் வாசுராவின் மகன் முனீஷ், தயாரிப்பாளர் சுவாமிநாதனின் மகன் அஸ்வின், நடிகர் பெரிய கருப்புத் தேவரின் மகன் விருமாண்டி, நடிகர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய், பாடகர் மனோவின் மகன் சாஹிர் ஆகியோர் தான் பிரபலங்களின் வாரிசுகள்.
அது என்னவோ தெரியவில்லை, சினிமாப் பிரபலங்களின் மகள்களுக்கு மட்டும் ஹீரோயினியாகும் ஆசை துளிர்ப்பதே இல்லை. இந்தச் சாபக்கேட்டால் தான், தமிழ் சினிமாவின் கிராமியப் படங்களுக்கான முகத்தை, மும்பை மாடலிடம் தேட வேண்டியுள்ளது.
தமிழகத்தில் தலைவிரித்தாடும் இந்த ஆட்கள் தட்டுப்பாடு, "நாங்க' படத்தையும் விட்டுவைக்கவில்லை. இந்தப் படத்துக்குத் தேவைப்படும் நான்கு ஹீரோயின்களில் மூவர், அண்டை மாநிலத்தில் இருந்து தருவிக்கப்பட்டு உள்ளனர். விஷ்ணுப்ரியா, ஷிவானி இருவரும் கேரளாவில் இருந்தும், வைதேகி பெங்களூருவில் இருந்தும் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளனர்
0 comments:
Post a Comment