இன்றியமையா டிஜிட்டல் சாதனங்கள்

வீட்டில் சிறிய அலுவலகம் வைத்து இயங்குவதும், அலுவலகப் பணிகளை வீட்டில் உள்ள சாதனங்களில் இயக்குவதும் இப்போதைய நடைமுறை வாழ்க்கையின் அம்சங்களாக மாறிவிட்டன. 

உடனடியாகச் சில பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு, அன்றாட வாழ்க்கையில் நாம் அடிக்கடி தள்ளப்படுகிறோம். இமெயில்கள் மூலம் வரும் வேண்டு கோள்களை, அலுவலக நடைமுறை களை மேற்கொள்வது கட்டாயத் தேவையாய் மாறி வருகிறது. 

வாழ்க்கையில் நமக்குத் தேவையான இன்றியமையாத டிஜிட்டல் சாதனங்களாகச் சில மாறிவிட்டன. வாழ்க்கையில் எந்த சந்தர்ப்பத்தினையும் விட்டுவிடாமல், முன்னேறி, முதல் நிலையில் இருக்க வேண்டுமானால் இவை நமக்குத் தேவையாய் உள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

1. லேப்டாப் கம்ப்யூட்டர்: 

அலுவலகம் மற்றும் வீடு என்றில்லாமல், பல இடங்களுக்கு நாம் சென்று, அலுவல் சார்ந்த சிலவற்றை விளக்க வேண்டியுள்ளது. நம் வேலைகள் தொடர்பான தகவல் குறிப்புகளை, அவ்வப்போது மேம்படுத்த வேண்டியுள்ளது. 

இதற்கு முதல் தேவை ஒரு லேப் டாப் கம்ப்யூட்டர். அலுவலகங்களிலும் வீடுகளிலும் கூட, டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் இடத்தை, லேப்டாப் கம்ப்யூட்டர்கள் பிடித்துக் கொண்டன. ஒருவரின் இணை பிரியா டிஜிட்டல் தோழனாக, வாழ்க்கையை மேம்படுத்தும் சாதனமாக லேப்டாப் கம்ப்யூட்டர் இடம் பிடிப்பதனால் தான், இன்று அதன் விலையும் சாதாரண மக்கள் வாங்கும் நிலைக்கு இறங்கியுள்ளது. 

2. பன்முக பிரிண்டர்: 

கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு வந்த காலத்திலிருந்து, பிரிண்டர் அதன் இணை பிரியாத தோழனாக நமக்கு உதவி வருகிறது. ஆனால் இப்போது ஒரு பிரிண்டர், அச்சிடும் வேலையை மட்டும் செய்வதில்லை. எம்.எப்.பி (MFP Multi Function Printer)  என அழைக்கப்படும் இந்த பிரிண்டர்கள் அச்சிடுவது, ஸ்கேனிங், செராக்ஸ் காப்பி எடுப்பது, பேக்ஸ் சாதனமாக இயங்குவது, தொலைபேசியாகச் செயல்படுவது எனப் பல வேலைகளை மேற்கொள்ளும் சாதனமாக மாறிவிட்டது. சிறிய அலுவலகங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக மாறிவிட்டது. 

நம் வேலைகளின் தன்மையைப் பொறுத்து, கலர் எம்.எப்.பி. பிரிண்டராகவோ, மோனோ (கருப்பு) எம்.எப்.பி. பிரிண்டராகவோ ஒன்றை வாங்கிப் பயன்படுத்துவது, நம் அலைச்சலை மிச்சப்படுத்தி, வேலை மேற்கொள்ள கூடுதல் நேரம் தரும்.

3. வை–பி ரௌட்டர் (Wi Fi Router):  

வயர் இணைப்பு இல்லாமல் இன்டர்நெட் இணைப்பு தருவதுடன், ஒரு வை–பி ரௌட்டர் வீடு அல்லது அலுவலகத்தின் உள்ளாக, வை–பி வசதி கொண்ட சாதனங்களிடையே டேட்டா பைல்களை பரிமாறிக் கொள்ள உதவுகிறது. ஸ்மார்ட் போன், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களிடையே இந்த பரிமாற்றத்தை மேற்கொள்ள இந்த சாதனம் உதவுகிறது.

 இதனை வாங்குவதாக இருந்தால், எவ்வளவு இடைவெளியில் வயர்லெஸ் டேட்டா பரிமாற்றத்தினை மேற்கொள்ள இருக்கிறோம் என்பதன் அடிப்படையில், அதற்கேற்ற திறன் கொண்டதாக வாங்க வேண்டும். 

4. பிராட்பேண்ட் இன்டர்நெட் யு.எஸ்.பி.: 

Broadband Internet Dongle என அழைக்கப்படும் சாதனம், எப்போதும் இடம் மாறிக் கொண்டு, பயணம் செய்து, பணியில் ஈடுபடுவோருக்கு இணைய இணைப்பினைத் தரும் சாதனமாகும். கம்ப்யூட்டரின் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்து, இன்டர்நெட் உலகை உங்கள் உள்ளங்கையில் கொண்டு வரும் இந்த இன்டர்நெட் ட்ரைவ்கள் மூலம், உலகில் எந்த மூலையில் உள்ளவர்களுடனும் வீடியோ கலந்துரையாடலை மேற்கொள்ளலாம்; 

இமெயில்களை உடனுக்குடன் கையாளலாம்; அந்த நேரத்தில் ஒரு தகவல் என்ன நிலையில் இருக்கிறது என அறிந்து கொண்டு நம் வர்த்தகத்தினை, வேலையை மேம்படுத்தலாம். அவரவருக்கு ஏற்ற வாடகைக் கட்டணத்தில், பல இன்டர்நெட் சேவை நிறுவனங்கள் இவற்றை வழங்கி வருகின்றன. 

5. ஸ்மார்ட் போன்:

மொபைல் போன் ஓர் அத்தியா வசியத் தேவையாய் மாறிய பின், அதன் மூலம் அலுவலக மற்றும் அன்றாட பணிகளை மேற்கொள்ள, நமக்கு உதவுவது ஸ்மார்ட் போன் என்னும் உயர்வகை மொபைல் போன் ஆகும். இதில் 3ஜி இணைப்பு மற்றும் வை–பி வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் நம் அலுவலக மற்றும் சொந்த பணிகளை, உள்ளங்கைகளுக்குள் கொண்டு வருகின்றன.

6. டேட்டா மாற்றும் கேபிள்:  

Data Transfer Cable என அழைக்கப்படும் இந்த கேபிள்கள், கம்ப்யூட்டர் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்கள் இடையே, விரைவாகவும் எளிதாகவும் டேட்டா பைல்களைப் பரிமாறிக் கொள்ள உதவுகின்றன. இதன் மூலம் இரண்டு பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கிடையே, டேட்டா பைல்களை மாற்றி பேக் அப்பாக வைத்துக் கொள்ள முடியும். 

7. சுருக்கிப் பதியும் ட்ரைவ்கள்

டேட்டாவினைப் பதிந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள,  Encrypted Storage Device  என்ற வகை சாதனங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவற்றில் பயோ மெட்ரிக் சாதனங்களும் வந்துள்ளன. இந்த சாதனங்களில் டேட்டா சுருக்கப்பட்டு பதியப்படுவதால், எளிதில் இதனை யாரும் பெற முடியாது. 

கை ரேகையைப் பதிந்து பின், பாஸ்வேர்டினைப் பயன்படுத்திய பின்னரே, டேட்டாவினைப் பெற முடியும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் தவறான பாஸ்வேர்டைப் பயன்படுத்தினால், உள்ளே உள்ள டேட்டா தானாக அழிக்கப்படும் வகையில் இந்த ட்ரைவ்கள் வரத் தொடங்கி உள்ளன.

8. இணைப்பு இல்லா பிரசன்டேஷன்: 

Presentation Remote என அழைக்கப்படும் இந்த சாதனங்கள், லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி, பிரசன்டேஷன் காட்சிகளை அடிக்கடி தருபவர்களுக்கு நல்லதொரு சாதனம். 50 அடி தொலைவில் இருந்து நாம் காட்ட விரும்பும் பிரசன்டேஷன் காட்சிகளை, இதன் மூலம் இயக்கலாம். 

லேப்டாப் கம்ப்யூட்டர் அருகே செல்ல வேண்டிய தில்லை. இதிலேயே சிறிய லேசர் பாய்ண்ட்டரும் தரப்பட்டுள்ளதால், அதன் மூலம் இதனைப் பார்ப்பவர்களின் கவனத்தினைக் குறிப்பிட்ட தகவலுக்குக் கொண்டு வரலாம். இதில் சில மாடல்கள் மவுஸாகவும், டேட்டா ஸ்டோர் செய்திடும் ட்ரைவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

9. இன்டர்நெட் பாதுகாப்பு சாப்ட்வேர்

நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் கட்டாயம் இருக்க வேண்டிய சாப்ட்வேர். குறிப்பாக மற்றவர்களின் எக்ஸ்டர்னல் டேட்டா ட்ரைவ்களைப் பயன்படுத்தும் போது, நம் கம்ப்யூட்டர்களில் கட்டாயம் ஒரு இன்டர்நெட் பாதுகாப்பு சாப்ட்வேர் தொகுப்பு பதியப்பட்டு இயக்கப்பட வேண்டும். 

ஆண்ட்டி வைரஸ், ஆண்ட்டி ஸ்பைவேர், பயர்வால், ஆண்ட்டி ஸ்பேம், அடையாளம் அறிந்து அனுமதி கொடுக்கும் வசதி, டேட்டா பாதுகாப்பு எனப் பன்முக பாதுகாப்பு வசதிகள் கொண்ட சாப்ட்வேர் தொகுப்புகள் இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் பெறலாம்.

10. சரியான இருக்கை: 

இதனை Ergonomic Chair என அழைப்பார்கள். கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில் நமக்கு சரியான நாற்காலி தேவை. தொடர்ந்து பணியாற்றுவதால், நம் உடம்பின் முக்கிய பகுதிகளான கண்கள், முதுகெலும்பு, கைகள், குறிப்பாக மணிக்கட்டு ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நாற்காலி, டிஜிட்டல் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும். இதனால் தசைகளுக்கு பிரச்னை வராமலும், முதுகெலும்பிற்கு கூடுதல் அழுத்தம் வராமலும் பாதுகாக்கலாம்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails