அமெரிக்க இசை உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய மைக்கேல் ஜாக்சன் (50), மரணம் அடைந்துவிட்டார்.
பாப் பாடகர், பாடலாசிரியர், இசை தயாரிப்பாளர், டான்சர், நடிகர் மற்றும் தொழில் அதிபர் என்று மைக்கேல் ஜாக்சனுக்கு பல முகங்கள் உண்டு.
1958 ஆக. 29ல், ஜோசப் வால்டர் மற்றும் காதரின் எஸ்தர் ஆகியோருக்கு, ஏழாவது மகனாக, இண்டியானா நகருக்கு அருகிலுள்ள கேரி எனும் இடத்தில் பிறந்தவர் ஜாக்சன். இவரது குடும்பம் சாதாரணமானது. வீட்டில் மொத்தம் 9 பிள்ளைகள். 11 வயதிலேயே அவரது சகோரர்களுடன் இணைந்து "தி ஜாக்சன் 5" இசை நிகழ்ச்சி மற்றும் ஆல்பங்களை வெளியிட்டார். "ஐ வான்ட் யூ பேக்" எனும் ஆல்பம் மிகவும் பிரபலம் ஆனது.
சகோதரர்களுடன் தொடர்ச்சியான "ஹிட்' ஆல்பங்களை கொடுத்துக் கொண்டிருந்த ஜாக்சன், 1971ம் ஆண்டு முதல் இசை உலகின் தனது தனி பிரவேசத்தை மேற்கொண்டார். 1972ல் "காட் டு பி தேர்' எனும் ஆல்பம், 1979ல் "ஆப் தி வால்' எனும் "டிஸ்கோ டான்ஸ்' இசை நிகழ்ச்சி, 1982ல் "திரில்லர்' ஆல்பம், 1987ல் "பேட்' , 1991ல் "டேஞ்சரஸ்' மற்றும் 1995ல் "ஹிஸ்டரி' ஆகிய ஆல்பங்கள் சக்கை போடு போட்டன.
1980களில் இவர் அமெரிக்க இசை உலகின் தனி ராஜாவாக (தி கிங் ஆப் பாப்) உருவானார். அப்போதுதான் எம்.டி.வி., உருவாகியிருந்த நேரம். இந்த "டிவி' ஜாக்சனின் நிகழ்ச்சியால் பிரபலம் அடையத் தொடங்கியது. "பீட் இட்", "பில்லி ஜீன்" மற்றும் "திரில்லர்" ஆகிய இசை நிகழ்ச்சிகள் எம்.டி.வி.,யின் "ஹிட்" நிகழ்ச்சிகள்.
1990களில் "பிளாக் ஆர் ஒயிட்' மற்றும் "ஸ்கிரீம்" ஆகிய நிகழ்ச்சிகள் எம்.டி.வி.,யின் புகழை உச்சிக்கு எடுத்து சென்றன.
ஜாக்சனின் நடனம் மிகவும் வித்தியாசமானது. அதற்கு முன் யாரும் அதுபோன்று நடனம் ஆடியது இல்லை. மிகவும் சிக்கலான உடல் அசைவுகளை வெளிப்படுத்தும் விதத்தில் அவர் ஆடினார். ரோபோ நடப்பது போன்றும், நிலவில் காலடி எடுத்து வைத்த வீரர்கள் போன்றும் மேடையில் ஜாக்சன் ஆடியது, ரசிகர்களை மெய்மறக்கச் செய்தது.
உலகம் முழுவதும் 75 கோடி ஆல்பங்கள், 13 கிராம்மி விருதுகள் பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது என ஜாக்சனின் புகழ் உச்சிக்கு சென்றது. அமெரிக்காவில் பாப், ராக் இசையில் 1980களில், மைக்கேல் ஜாக்சனுக்கு ஈடு இணை யாரும் இல்லை என்ற அளவில் உயர்ந்தார்.
20ம் நூற்றாண்டின் மாபெரும் ஹீரோவாக விளங்கியவர். ஆனால், அவர் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் புகழ் சரிந்து, வீழ்ச்சி அடைந்தவராக காணப்பட்டார்.
இந்த வீழ்ச்சிக்கு காரணம் அவர் பலமுறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது, தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பிளாஸ்டிக் சர்ஜரி செய்த இடங்களில் புற்றுநோய் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. என்றாலும் தனது இசை உலக மறு பிரவேசத்தை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார். அடுத்த மாதம் முதல், 2010ம் ஆண்டு வரை லண்டனில் 50 இசை கச்சேரிகளுக்கு அவர் திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் இன்னொரு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவும் திட்டமிட்டிருந்தார்.
1993ல் ஒரு பேட்டியில் தனது சிறு வயது கால அனுபவங்களை கூறியிருந்தார். அப்போது, அவர் தந்தை தன்னை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தினார், சித்திரவதக்கு உள்ளாக்கினார் என்பதை விவரித்தார். 2003ம் ஆண்டில் சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஜாக்சன் குற்றம் சாட்டப்பட்டார். என்றாலும் அவர், 2005ல் அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
பிரஸ்லி என்பவரை ஜாக்சன் 1996ல் திருமணம் முடித்தார். 1999ல் டெபோரா எனும் நர்சை மணம் முடித்துக் கொண்டார். அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இரு திருமணங்களும் விவாகரத்தில் முடிந்தது. என்றாலும், பின்னர் மீண்டும் அவர்கள் சந்தித்துக் கொண்டனர்.
மைக்கேல் ஜாக்சனுக்கு ஒரு பெண் குழந்தை, இரு ஆண் குழந்தை உள்ளனர். கடைசி மகனை (மைக்கேல் ஜாக்சன் 2) வாடகைத் தாய் உதவியுடன் பெற்றதாக கூறப்படுகிறது. மற்ற குழந்தைகள் (ஜோசப் ஜாக்சன் மற்றும் பாரிஸ் மிசேல் காதரின்) டெபோராவுக்கு பிறந்தவர்கள்
2 comments:
இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்
நல்ல கருத்துக்கள். இத்தனை நாள் உங்களை எப்படி மிஸ் பண்ணினேன் ? சாரி தலைவா ....!
Post a Comment