இந்தியா முழுக்க லட்சக்கணக்கான போலீஸ் ஆபிஸர்கள் இருந்தாலும் வழக்கம்போலவே தேசத்தை காக்க சிங்கிளாய் நின்று ஆக்ஷன் கிங் அர்ஜூன் அலப்பறை பண்ணும் சினிமாதான். அர்ஜூனுக்கு ஆறுதலாய் அவர் கூடவே இருக்கிறார் உளவுத்துறை அதிகாரி மம்முட்டியும் என்பது படம் பார்க்கும் நமக்கு ஆறுதல்!
கதைப்படி, இந்தியா முழுக்க உள்ள நதிகளை ஒன்றிணைத்து தேசியமயமாக்கி விவசாயத்தில் வெற்றி பெறும் முயற்சியின் தொடக்க விழாவிற்காக நாகர்கோயில் வரவிருக்கும் பாரத பிரதமரை தீர்த்துக் கட்ட தென்இந்தியாவிற்குள் ஊடுருவுகிறார்கள் பயங்கரவாதிகள். இதை தெரிந்து கொள்கிறார் ஐபிஎஸ் ஆபீஸர் மம்முட்டி.
அவர்களையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் பிடிக்க அர்ஜூன் தலைமையிலான ஸ்பெஷல் டீம் ஒன்றை உருவாக்கி தானும் அவர்களுடன் களம் இறங்குகறிார். மம்முட்டி - அர்ஜூன் இருவரது கூட்டு முயற்சி வென்றதா? இல்லை பயங்கரவாதிகள் வென்றார்களா? என்பது மீதிக்கதை!
ஐபிஎஸ் ஆபிஸராக அர்ஜூன் வழக்கம்போலவே தேசப்பற்றை முகத்தில் காட்டி தேசத்திற்கு எதிரான போராளிகளை போட்டுத் தாக்குகிறார். என்ன? வயதானதால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களையும், கருவளையங்களையும் என்னதான் மேக்கப் போட்டும் தடுக்க முடியாதது பரிதாபம்!
மிடுக்கான ஐபிஎஸ் ஆபிஸராக அர்ஜூனை சேர்த்துக் கொண்டு பணியாற்றும் மம்முட்டி, அர்ஜூனை காட்டிலும் கம்மியாகவே ஆக்ஷனில் இறங்கினாலும் நிறையவே நடித்து சபாஷ் வாங்கி விடுகிறார். அதற்காக தன் மனைவி சினேகாவையே பயங்கரவாதியிடம் இருந்து உண்மையை வரவழைக்க அவனது மகளாக அனுப்பி வைத்து சினேகாவை பறிகொடுப்பதெல்லாம் நம்பவே முடியவில்லை.
ஒருமுறைகூட விமானத்தில் பறக்காமல் பைலட் (கெட்-அப்)டாக வரும் மம்முட்டியின் மனைவி சினேகா, மம்முட்டி - அர்ஜூனுடன் போலீஸ் ஆபிஸராக வந்துபோகும் ஜெய் ஆகாஷ், மலையாள ஜெகதீஷ், பிரதம மந்திரியாக வரும் நாசர், இரும்பு வியாபாரி ரியாஸ்கான்,
பயங்கரவாதிக்கு உதவி பின் ஜெயிலில் களி தின்னும் பெயிர மனிதர் ராஜ்கபூர், தற்கொலை செய்துகொள்ளும் டாக்டர் ஜெயபிரகாஷ், நாகர்கோயில் காவல் அதிகாரி ராஜன் பி.தேவ், வில்சன் தீபக் என படத்தை தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும், மலையாளத்திலும் விற்பனை செய்துவிடும் நோக்கில் எக்கச்சக்க நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் முன்பாதியில் இருக்கும் நம்பகத்தன்மை படத்தின் பின்பாதியில் இல்லாதது தமிழிலேயே வந்தேமாதரம் தாக்குபிடிக்குமா? எனும் சந்தேகத்தை எழுப்புகிறது.
அதுவும் மம்முட்டிக்கும், அர்ஜூனுக்கும் நிஜமாகவே வயதாகி விட்டதால், அழகான இளமையான வில்லன் தீபக்கை ஸ்பெஷல் ஜெயிலுக்கு தள்ளி அவர் வந்து 20 வருடனம் ஆகி விட்டதாக ஜோடித்து, தீபக்கிற்கு ஓல்ட் கெட்-அப் போட்டு கண்றாவி ஆக்குவதெல்லாம டூ மச்!
ராஜேஷ் யாதவ், எம்.வி.பன்னீர்செல்வம் இருவரது ஒளிப்பதிவும் படத்தின் பெரும் பலம். இமானின் இசையும், அரவிந்த்.டியின் இயக்கத்தில் வந்தேமாதரம் முன்பாதி நச். பின் பாதியில் இல்லை டச்!
மொத்தத்தில் இந்த வந்தேமாதரத்தில் இல்லை வெற்றி மந்திரம்.
0 comments:
Post a Comment