பலே பாண்டியா - விமர்சனம்

உலகத்தில் இப்படி எல்லாம் கூட நடக்குமா? எனக் கேட்கும் அளவிற்கு சந்தேகத்தை கிளப்பும் கதை! ஆனாலும் அதை கலக்கலாகவும், காமெடியாகவும் படமாக்கி பலே பலே சொல்ல வைத்துவிடுகிறது பலே பாண்டியா டீம்!

கதைப்படி, பாண்டியன் பாத்திரத்தில் நாயகராக நடித்திருக்கும் விஷ்ணு., உப்பு விற்க போனால் மழை பெய்கிறது... மாவு விற்க போனால் காற்றடிக்கிறது... என புலம்புபவர்களை எல்லாம் காட்டிலும் பேட், பேட்., பேட் லக்கி கேரக்டர்.

குழந்தையில் ‌தொடங்கி குமரன் ஆனது வரை தொடரும் இதுமாதிரி பேட்லக் சமாச்சாரங்களால் மனம் வெறுத்துப்போகும் பாண்டியனின் தற்கொலை முயற்சிகளும், அடுத்தடுத்து தவிடுபொடி ஆவதால் மேலும் வெறுத்துப்போகிறார் மனுஷர். பாவம்!

கடைசியாக பத்தாயிரம் ரூபாய் பணத்தை புரட்டிக் கொண்டு தன்னை தீர்த்து கட்டிவிட சொல்லி தாதா ஏ.கே.பி.யிடம் போகிறார். அவரோ., இவரது கதையை கேட்டு படம் பார்ப்பவர்களோடு சேர்ந்து (?) கொண்டு விழுந்து விழுந்து சிரித்துவிட்டு கொலை செய்ய தனது ரேட் 5 லட்சம். வெறும் பத்தாயிரத்திற்கெல்லாம் உன்னை கொல்ல முடியாது.

வேண்டுமானால் சில நாட்கள் கூட இரு. யோசித்து சொல்கிறேன்... என ஜகா வாங்குவதுடன், தான் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி மந்திரி ஒருவரது மகளை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டுவதில் கவனம் செலுத்துகிறார். ஆனால் பாண்டியனோ... விடாமல் நச்சரிக்கவே... பொறுக்க முடியாத ஏ.கே.பி., 10ம்தேதி சிட்டியில் நடக்க இருக்கும் ஒரு காவல்துறை உயர் அதிகாரிகள் மீட்டிங்கை சீர்குலைக்கும் விதமாக நீ மனித வெகுண்டாக போய் தற்கொலை செய்து கொள்.

அதுவரை இதில் இருக்கும் 25 லட்சத்தை உன் கூலியாக வைத்து செலவு செய்து கொள் என ஒரு டெபிட் கார்டை கொடுத்து இந்த கார்டும் 10ம்தேதி வேலை செய்யாது தீர்ந்து போகும், நீயும் தீர்ந்து போவாய் என்கிறார்.

அதுநாள்வரை குடும்பத்தினர் உள்ளிட்ட எல்லோருக்கும் அதிர்ஷ்டக் கட்டையாக இருக்கும் பாண்டியன், ரூ.25 லட்சம் கிடைத்ததும் தன் மீது விழுந்து படிந்த அவப்பெயரை துடைத்துக் கொள்ளும் முகமாக களம் இறங்குகிறார். இந்நிலையில் ஏகேபி தீர்த்துக் கட்ட திட்டமிடும் மினிஸ்டர் மகளுடன் பாண்டியனுக்கு எதிர்பாராமல் காதல் வேறு ஏற்படுகிறது. பாண்டியனின் காதல் கை கூடியதா?

25 லட்சம் தீர்ந்ததும் மனித வெடிகுண்டாக மாறி அவனுடைய உடல் சிதறியதா? உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் சொல்கிறது பலே பாண்டியா படத்தின் மீதிக்கதை!

பலே பாண்டியனாக வெண்ணிலா கபடிக்குழு விஷ்ணு. அதிர்ஷ்டக்கட்டையாக குடும்பத்தாராலேயே ஒதுக்கி வைக்கப்படும்போதும் சரி... காசு, காதல் எல்லாம் கிடைத்த பின்பும் சரி... இருவேறு பரிணாமங்களில் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். அமைதியான முகத்தை வைத்துக் கொண்டு விஷ்ணு சந்திக்கும் அவமானங்களும், அதிர்ஷ்டம் இல்லாமையையும் ஜோசியம், ராசி, நட்சத்திரம், அதிர்ஷ்டம் இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்களையும்கூட உலுக்கி எடுத்து விடும்.

பொய் சொல்லப்போறோம், கோவா படங்களில் நடித்த பியாதான் கதாநாயகி. சைனா ‌பொம்மை மாதிரி இருந்தாலும் அம்மணி நடிப்பில் பொளந்து கட்டுகிறார். ஏகேபியாக வரும் புதியவர் மகேந்திரன், நாடி ஜோதிடர் பாண்டு, கச்சிதம் ஜிப்ரான், ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ், டாக்டர் ஷர்மிளா, ஆர்த்தி என படத்தில் பங்குபெற்றுள்ள மற்ற நட்சத்திரங்களும் தங்கள் பங்கை சரியாக செய்து இருக்கின்றனர்.

காமெடியை ஹீரோ உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்கள் செய்து சிரிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு கூட அந்த விவேக(மில்லாத) காமெடி நடிகர் செய்து சிரிப்பை வரவழைக்காதது கொடுமை

தேவன் ஏகாம்பரத்தின் இசையும், சவுந்தர்ராஜன், ஆர்.எஸ்.குருதேவ் இருவரது ஒளிப்பதிவும், சித்தார்த் சந்திரசேகரின் எழுத்தும் இயக்கமும் பலே பாண்டியாவை ஏ க்ளாஸ் படமாக்கி இருக்கின்றன. படமும் ஏ சென்டர் ரசிகர்களுக்கு புரியும் அளவு பி மற்றும் சி சென்டர் ரசிகர்களுக்கு புரியுமா? பிடிக்குமா? என்பது கேள்விக்குறியே!

பலே பாண்டியா : பரவாயில்லேக்கும் மேலே

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails