இந்திப் படத்தில் சச்சின் டெண்டுல்கர்

சினிமாவில் நடிக்கும் கிரிக்கெட் வீரர்கள் லிஸ்ட்டில் விரைவில் சச்சின் டெண்டுல்கரும் இணையப்போகிறார்.

ஏற்கனவே சடகோபன் ரமேஷ் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் சினிமாவில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் என்ற பெருமைக்குரிய சச்சின், இந்திப் படமொன்றில் நடிக்கப் போகிறாராம்.

விது வினோத் சோப்ரா தயாரிப்பில், ராஜேஷ் மபுஸ்கார் இயக்கத்தில் தயாராகும் பெராரி கி சவாரி எனும் படத்தில் அவர் நடிக்கயிருக்கிறார் என கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் திரீ இடியட்ஸ் படத்தில் நடித்த சர்மான் ஜோஷியும் நடிக்கிறார்

இந்திய இன்டர்நெட்

இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது என்று வெகுநாட்களாகவே நாம் சொல்லி வருகிறோம். இன்டர்நெட் பயன்பாட்டிலும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும், விரைவில் இது முதல் இடத்திற்கு வரும் என்றும் எழுதி வருகிறோம்.

ஆனால் அண்மையில் எடுத்த ஆய்வின்படி, இந்தியக் கிராமவாசிகளில் 84% பேர், இன்டர்நெட் என்றால் என்னவென்று தெரியாமலேயே இருக்கிறார்கள். மீதம் இருக்கின்ற 16% பேர்களில் 85% பேர் இமெயில் பார்ப்பதற்கும், 67% பேர் வீடியோ பார்ப்பதற்கும், 48% பேர் கல்வி சார்ந்த தகவல்களைத் தேடுவதற்கும் இணையத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் ஆறுதல் அளிக்கும் ஒரு விஷயம், கிராம மக்களில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில், 13% பேர் நவீன வேளாண் முறைகள் குறித்து கண்டறியவும், 8% பேர் உரவகைகள் குறித்து அறியவும் இணையத்தினைப் பயன்படுத்துகின்றனர்.

இதே போல, கிராம மக்களில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் குறைவாக இருந்தாலும், இவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2008 ஆம் ஆண்டைக் காட்டிலும், 2009 ஆம் ஆண்டு, இணையத்தினைப் பயன்படுத்தியவர்கள் 26.7% உயர்ந்து இருந்தனர்.

33 லட்சம் பேராக இருந்தவர்கள், 42 லட்சமாக உயர்ந்தனர். தமிழ்நாடு, ஆந்திரம், அஸ்ஸாம், மஹாராஷ்ட்ரா, ஒரிஸ்ஸா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமங்களில், இன்டர்நெட் பயன் படுத்தும் 15 ஆயிரம் பேர்களிடம், இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஆஸ்காருக்கு போகிறது அமீர்கானின் பீப்பிளி லைவ்

பாலிவுட் நடிகர் அமீர்கான் தயாரித்து சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆன படம் பீப்ளி லைவ். இந்தியாவின் அடிமட்ட விவசாயிகளின் அவலத்தை சொன்ன படம் இது. ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு இந்திய திரைப்பட சம்மேளனம் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவட, ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை கமிட்டி தலைவர் கே.எஸ்.சேதுமாதவன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஆஸ்கார் விருதுக்கான வெளிநாட்டுப் பட பிரிவுக்காக அங்காடி தெரு, மதராச பட்டினம், விண்ணைத்தாண்டி வருவாயா, பா (இந்தி), பீப்லி லைவ் (இந்தி), பழசிராஜா (மலையாளம்) உள்பட மொத்தம் 27 படங்கள் பரிசீலிக்கப்பட்டன.

இறுதியில், இந்திய விவசாயிகளின் அவலநிலையை மிக யதார்த்தமாகவும், நகைச்சுவையாகவும் சித்தரித்து இருந்த பீப்லி லைவ் (இந்தி) படம், ஆஸ்கர் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டது, என்றார்

வந்தேமாதரம் - விமர்சனம்

இந்தியா முழுக்க லட்சக்கணக்கான போலீஸ் ஆபிஸர்கள் இருந்தாலும் வழக்கம்போலவே தேசத்தை காக்க சிங்கிளாய் நின்று ஆக்ஷன் கிங் அர்ஜூன் அலப்பறை பண்ணும் சினிமாதான். அர்ஜூனுக்கு ஆறுதலாய் அவர் கூடவே இருக்கிறார் உளவுத்துறை அதிகாரி மம்முட்டியும் என்பது படம் பார்க்கும் நமக்கு ஆறுதல்!

கதைப்படி, இந்தியா முழுக்க உள்ள நதிகளை ஒன்றிணைத்து தேசியமயமாக்கி விவசாயத்தில் வெற்றி பெறும் முயற்சியின் தொடக்க விழாவிற்காக நாகர்கோயில் வரவிருக்கும் பாரத பிரதமரை தீர்த்துக் கட்ட தென்இந்தியாவிற்குள் ஊடுருவுகிறார்கள் பயங்கரவாதிகள். இதை தெரிந்து கொள்கிறார் ஐபிஎஸ் ஆபீஸர் மம்முட்டி.

அவர்களையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் பிடிக்க அர்ஜூன் தலைமையிலான ஸ்பெஷல் டீம் ஒன்றை உருவாக்கி தானும் அவர்களுடன் களம் இறங்குகறிார். மம்முட்டி - அர்ஜூன் இருவரது கூட்டு முயற்சி வென்றதா? இல்லை பயங்கரவாதிகள் வென்றார்களா? என்பது மீதிக்கதை!

ஐபிஎஸ் ஆபிஸராக அர்ஜூன் வழக்கம்போலவே தேசப்பற்றை முகத்தில் காட்டி தேசத்திற்கு எதிரான போராளிகளை போட்டுத் தாக்குகிறார். என்ன? வயதானதால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களையும், கருவளையங்களையும் என்னதான் மேக்கப் போட்டும் தடுக்க முடியாதது பரிதாபம்!

மிடுக்கான ஐபிஎஸ் ஆபிஸராக அர்ஜூனை சேர்த்துக் கொண்டு பணியாற்றும் மம்முட்டி, அர்ஜூனை காட்டிலும் கம்மியாகவே ஆக்ஷனில் இறங்கினாலும் நிறையவே நடித்து சபாஷ் வாங்கி விடுகிறார். அதற்காக தன் மனைவி சினேகாவையே பயங்கரவாதியிடம் இருந்து உண்மையை வரவழைக்க அவனது மகளாக அனுப்பி வைத்து சினேகாவை பறிகொடுப்பதெல்லாம் நம்பவே முடியவில்லை.

ஒருமுறைகூட விமானத்தில் பறக்காமல் பைலட் (கெட்-அப்)டாக வரும் மம்முட்டியின் மனைவி சினேகா, மம்முட்டி - அர்ஜூனுடன் போலீஸ் ஆபிஸராக வந்துபோகும் ஜெய் ஆகாஷ், மலையாள ஜெகதீஷ், பிரதம மந்திரியாக வரும் நாசர், இரும்பு வியாபாரி ரியாஸ்கான்,

பயங்கரவாதிக்கு உதவி பின் ஜெயிலில் களி தின்னும் பெயிர மனிதர் ராஜ்கபூர், தற்கொலை செய்துகொள்ளும் டாக்டர் ஜெயபிரகாஷ், நாகர்கோயில் காவல் அதிகாரி ராஜன் பி.தேவ், வில்சன் தீபக் என படத்தை தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும், மலையாளத்திலும் விற்பனை செய்துவிடும் நோக்கில் எக்கச்சக்க நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் முன்பாதியில் இருக்கும் நம்பகத்தன்மை படத்தின் பின்பாதியில் இல்லாதது தமிழிலே‌யே வந்தேமாதரம் தாக்குபிடிக்குமா? எனும் சந்தேகத்தை எழுப்புகிறது.

அதுவும் மம்முட்டிக்கும், அர்ஜூனுக்கும் நிஜமாகவே வயதாகி விட்டதால், அழகான இளமையான வில்லன் தீபக்கை ஸ்பெஷல் ஜெயிலுக்கு தள்ளி அவர் வந்து 20 வருடனம் ஆகி விட்டதாக ஜோடித்து, தீபக்கிற்கு ஓல்ட் கெட்-அப் போட்டு கண்றாவி ஆக்குவதெல்லாம டூ மச்!

ராஜேஷ் யாதவ், எம்.வி.பன்னீர்செல்வம் இருவரது ஒளிப்பதிவும் படத்தின் பெரும் பலம். இமானின் இசையும், அரவிந்த்.டியின் இயக்கத்தில் வந்தேமாதரம் முன்பாதி நச். பின் பாதியில் இல்லை டச்!

மொத்தத்தில் இந்த வந்தேமாதரத்தில் இல்லை வெற்றி மந்திரம்.

‘எந்திரன்’ டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்

‘எந்திரன்’ படத்தின் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது.சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் பிரமாண்டாமாக தயாரித்துள்ள படம் ‘எந்திரன்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யாராய் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி உள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

பாடல்கள் வெளியிடப்பட்டு விற்பனையில் சாதனை படைத்து வந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் படத்தின் ரிலீசை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அக்டோபர் முதல் தேதி வெளிவரும் ‘எந்திரன்’ படம் தமிழ், தெலுங்கு இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

கடந்த வாரமே இந்தப் படத்திற்கான முன்பதிவு வெளிநாடுகளில் தொடங்கி ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்துள்ளது.இந் நிலையில், தமிழ்நாட்டில் டிக்கெட் முன்பதிவு எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வந்தனர்.

அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நாளை காலை 9 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்று சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முன்பதிவிற்கு கட்டுக் கடங்காத கூட்டம் வருமென்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்கேற்ற முன்னேற்பாடுகளை தியேட்டர் அதிபர்கள் செய்துள்ளனர்.

அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கே அல்வா கொடுத்த நடிகர்

தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கஷ்டப்பட்டால் ஓடிச்சென்று உதவும் நட்சத்திரங்கள் இருக்கும் அதே திரையுலகில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கே அல்வா கொடுக்கும் நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படி அல்வா கொடுப்பதில் முன்னணி இடத்தில் இருப்பவர்களில் முக்கியமானவர் சூர்ய நடிகர். நேருக்கு நேரான படத்தில் அறிமுகமானாலும் அவரை முதலில் நாயகன் ஆக்கியவர் சிவமான சக்தி தயாரிப்பாளர்தான்.இளம் இயக்குனர்களின் கலங்கரைவிளக்காக திகழ்ந்து வந்த அந்த தயாரிப்பாளர் காதல்கோட்டை, காதலே நிம்மதி, கனவே கலையாதே என நிறைய ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

பின்‌னொரு காலகட்டத்தில் கஷ்டமான சூழ்நிலைகளை தாண்டி, இப்போது புதுப்படம் ஒன்றிற்காக சூர்ய நடிகரிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார். இதோ... அதோ.. என்று ஜகா வாங்கிய அந்த நடிகர் கடைசியில் கால்ஷீட் இல்லை என்று அல்வா கொடுத்து விட்டாராம். தான் அறிமுகப்படுத்திய நடிகர் தனக்கு உதவி செய்வார் என எதிர்பார்த்த தயாரிப்பாளர் விரக்தியில் இருக்கிறார்.

இவர் இப்படியென்றால், அந்நிய நடிகர் அதற்கு மேல் அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கிறாராம். புதிய டைரக்டர்களின் படங்களில் நடிக்க மாட்டேன் என்பதை கொள்கை முடிவாகவே வைத்திருக்கும் அவர் சினிமாத்துறையின் நடிகராக அறிமுகம் ஆகும்போது புதுமுகம் என்பதை மறந்து விட்டாரோ என்னவோ.

அதேநேரம் விஜய நடிகர் இந்த விஷயத்தில் ரொம்பவே நல்லவர் என்று போற்றுகிறது கோடம்பாக்கம். காதலுக்கு மரியாதை கொடுத்த படத்தை தயாரித்த சங்கிலி, கஷ்டமான காலகட்டத்தில் விஜய நடிகரிடம் கால்ஷீட் கேட்க, அவருக்கு உதவும் விதமாக கால்ஷீட் கொடுத்து படத்தையும் குறிப்பிட்ட நாட்களுக்குள் முடித்துக் கொடுத்தார்.

சுறாவான அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லையென்றாலும் படத்தை முதலில் தயாரித்த சங்கிலி தயாரிப்பின் கையை கடிக்கவில்லை. அவருக்கு லாபத்தை கொடுத்த படமாகத்தான் அந்த படம் இருந்தது.

அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கு அல்வா கொடுக்கும் நடிகர்களை குறிப்பிட்டு ஒரு சினிமா விழாவில் சங்கிலி தயாரிப்பாளர் பேசிய பேச்சு இந்த செய்திக்கு பொருத்தமாக இருக்கும் : ``ஒரு பட விழா நடைபெறும்போது, அந்த படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் கலந்துகொள்வதில்லை. கேட்டால், டெல்லியில் இருக்கிறேன்...

மும்பையில் இருக்கிறேன் என்று பதில் சொல்கிறார்கள். ஒரு படத்தை தயாரித்து, அதை திரைக்கு கொண்டுவருவதற்குள் தயாரிப்பாளர் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. தயாரிப்பாளர்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. உதவி செய்யவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட படவிழாக்களில் நடிகர்-நடிகைகள் கலந்துகொள்ள வேண்டும்.

ஒரு படம் வெற்றிபெற்றால், அந்த வெற்றியில் படத்தில் பணிபுரிந்த அத்தனை பேரும் பங்கு போடுகிறார்கள். ஆனால் தோல்வி அடைந்தால், அந்த பாதிப்பை தயாரிப்பாளர் மட்டுமே சுமக்கிறார். வெற்றியை பங்குபோடுகிறவர்கள், தோல்வியையும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும், என்று கூறியிருந்தார் அந்த தயாரிப்பாளர்.

முரட்டு காளை - முன்னோட்டம்

ஒருகாலத்தில் ஓஹோவென ஓடிய முரட்டுக்காளை படத்தின் ரீ-மேக்தான் இந்த முரட்டுக்காளை. நடிகர் சுந்தர் சி. நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கிறார்.

சிவாஜி படத்தில் வில்லனாக நடித்த சுமன் வில்லனாக நடிக்கிறார்.

பழைய முரட்டுக்களையின் கதையில் அதிக மாற்றம் செய்யவில்லை என்றாலும், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மேலும் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார்களாம்.

நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள டைரக்டர் செல்வபாரதி இப்படத்தை இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்

மொபைல் போனிலும் தேர்வு எழுதலாம்

இன்று மொபைல் போன் ஒரு அடிப்படைதேவைகளில் ஒன்றாக உருவாகிவிட்டது. மொபைல் போன் மூலம் தகவல் செய்யலாம், அரட்டை செய்யலாம் , வீடியோ அனுப்பலாம் , பாடல் கேட்கலாம். ஆனால் தேர்வு எழுதலாமா? எழுதலாம்.

சேஷாத்ரிபுரம் பர்ஸ்ட் கிரேட் கல்லூரி , எலகங்கா , பெங்களூரு. இதனை நடைமுறை செய்திருக்கிறது. கல்லூரிகளிலும் , பள்ளிகளிலும் மொபைல் போன் தடை செய்யப்பட்டு வருகிற காலகட்டத்தில் இந்த தேர்வு முறையை அறிமுகப்படுத்திருக்கிறது. இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தரும் பதில் , தொழில்நுட்பம் கல்வி தரத்தை உயர்த்தும் என கூறுகிறது.

இந்த தொழில்நுட்பத்திற்கு இன்டர்ஆக்டிவ் பிளாட்பார்ம் ஆன் மொபைல் என்று பெயர் . தேர்வு எழுத ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மொபைல் போன் தரப்படுமாம். அதில் கேம்ஸ் ,மெசேஜ் மற்றும் பிறரை தொடர்பு கொள்ளும் வசதிகள் தடைசெய்யப்படுமாம்.

இந்த தேர்வு முறையை கடந்த வருடம் பிபிஎம், பிசிஏ பாடத்திட்டத்திற்கு அறிமுகம் செய்தது , முயற்சி வெற்றியடைந்தது. இந்த வருடம் அனைத்து பாடத்திட்டதிற்கும் இந்த தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறது. தேர்வு நேரம் துவங்கியதும் அனைவருக்கும் கேள்விகள் மொபைல் போன் திரையில் வெளியிடப்படுமாம்.

ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் தரப்பட்டிருக்குமாம். ஒவ்வொரு கேள்விக்கும் உரிய பதிலை தேர்வு நேரம் முடியும் தருவாயில் பதிலை உறுதி செய்து இறுதில் சப்மிட் பட்டனை அழுத்தினால் பதில்கள் அனைத்தும் சர்வர் கம்ப்யூட்டரில் சேமிக்கப்படும். பதில்கள் அனைத்தும் உடனடியாக சரிபார்க்கப்பட்டு மதிப்பெண்கள் விரைவாக வெளியிடப்படும் என்கிறது நிர்வாகம்.

மேலும் இந்த தேர்வு முறையால் மாணவர்கள் தகாத செயல் செய்வதை தடுக்க முடியும் என்கிறது. மாணவர்கள் கல்லூரி வகுப்புகளை புறக்கணிப்பது ஒரு பெருமை சார்ந்த விஷயமாக கருதப்படுவதுண்டு. இதனையும் இந்த மொபைல் போன் தொழில்நுட்பத்தின் மூலம் தவிர்க்கலாம். அதாவது வருகை பதிவேட்டையும் கொண்டு வந்திருக்கிறது.

வகுப்பிற்கு வரும் ஆசிரியர் ஒரு மொபைல் எடுத்துவருவர் , அவருக்கு ஒரு பாஸ்வேர்ட் தரப்படும் , பாஸ்வேர்டை அளித்ததும் பாடப்பிரிவு , வருடத்தின் நிலை திரையிடப்படும் . பின்னர் ஒவ்வொரு மாணவர்களின் பெயர்கள் திரையிடப்படும். வருகை பதிவேட்டை சரிபார்த்தவுடன் தகவல் சர்வர் கம்ப்‌யூட்டரில் சேமிக்கப்படும்.

முதல் 15 நிமிடகளுக்கு மட்டுமே வருகை பதிவேட்டை அளிக்கமுடியும். காலம் தாழ்த்தி வரும் மாணவர்கள் வருகை அளிக்கமுடியாது, இதனால் மாணவர்கள் காலம்கடத்துவதை தவிர்க்கமுடியும். இதுமட்டுமில்லை , 3 நாட்களுக்கு மேல் வருகை இல்லாத மாணவர்கள் அவர்களின் பெற்றோரின் மொபைல் எண்ணிற்கு தகவல் அளிக்கப்படும்.

இதனால் மாணவர்கள் புறக்கணிப்பதை தடுக்கமுடியும் என்கிறது கல்லூரி. இந்த முறை பயன்படுத்தி வங்கிகள் தேர்வு, அரசு தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகள் நடைமுறைபடுத்தபடலாம். இது மட்டுமா! தேர்தலை கூட நடத்தலாம்.

இதனால் போலி ஓட்டுகள் அளிக்கப்படுவதை தவிர்க்கலாம். எல்லோருக்கும் வாக்காளர் எண் தரப்படுவதால், இந்த முறையை எதிர்கொள்ளலாம். தேர்தல் முடிவையும் காலதாமதமின்றி தெரிந்துகொள்ளலாம்.

நம்பரை மாற்றாமல் மொபைல் நிறுவனங்களை மாற்றும் வசதி

மொபைல் போன் வாடிக்கையாளர்கள் தங்கள் எண்ணை மாற்றாமல், விரும்பிய மொபைல் நிறுவனத்தை தேர்வு செய்து கொள்ளும் வசதி நவம்பர் முதல் வாரத்தில் அமலுக்கு வரும். "2ஜி' லைசென்ஸ் பெறுவதற்காக புதிய கட்டணம் இரண்டு வாரத்தில் நிர்ணயிக்கப்படும்,'' என டிராய் தலைவர் சர்மா கூறினார்.


நாட்டில் தூர்தர்ஷன் மற்றும் ஆறு தனியார் நிறுவனங்கள், டி.டி.எச்., சேவையை வழங்கி வருகின்றன. இதில் 2.1 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். ஒரே "செட்டாப் பாக்ஸ்' மூலம் வாடிக்கையாளர்கள் விரும்பும் டி.டி.எச்., சேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் புதிய நடைமுறையை அமல்படுத்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து டி.டி.எச்., சேவை நிறுவனங்கள், நுகர்வோர் அமைப்புகள், பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணியை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் (டிராய்) ஒப்படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, "டிராய்' நடத்திய கருத்துக் கேட்பு கூட்டம் சென்னை அண்ணா சாலை பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் நடந்தது. டிராய் தலைவர் சர்மா தலைமை வகித்தார். செயலர் அர்னால்டு, ஆணைய உறுப்பினர் அசோக், டி.டி.எச்., சேவை நிறுவன பிரதிநிதிகள், ஏஜன்சிகள், நுகர்வோர் அமைப்பினரும் இதில் பங்கேற்றனர்.


நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த சரவணன் பேசும்போது, ""வாடிக்கையாளர்களின் உரிமைகள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில், இதை நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போதுள்ள "செட்டாப் பாக்ஸ்'களில் இதை நடைமுறைப்படுத்த சாத்தியம் இல்லை. இலவசம் என்ற பெயரில் சேவை நிறுவனங்கள் மறைமுக வரி விதிக்காமல் இருக்க வேண்டும்,'' என்றார். மற்றொரு நுகர்வோர் முருகன் பேசும்போது,""இது தொடர்பாக கோர்ட்டில் உள்ள வழக்கு முடிந்ததும் தான் இதை நடைமுறைப்படுத்த முடியும். நுகர்வோர் எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது,'' என்றார்.


"செட்டாப் பாக்ஸ்' சேவை நிறுவன பிரதிநிதிகள் பேசும்போது,""அவசரகதியில் இதை நடைமுறைப்படுத்தக் கூடாது. கால அவகாசம் அளிக்க வேண்டும். ஒரே "செட் டாப் பாக்சில்' வாடிக்கையாளர் விரும்பும் சேவை நிறுவனத்தை தேர்வு செய்யும் நடைமுறை சரியாக இருக்காது. போட்டி நிறைந்த வர்த்த உலகில், சந்தையை பெரிதும் பாதிக்கும். ""ஏற்கனவே நாங்கள் ஆன்-லைன் மூலமாக தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளோம். நுகர்வோர் எந்த அளவில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை அறியாமல், திடீரென இதை அமல்படுத்துவது சிக்கலை ஏற்படுத்தும்,'' என்றனர்.


இதற்கு பதில் அளித்த டிராய் தலைவர் சர்மா,""வெளிநாட்டுக்கு போகக் கூடாது என தடைபோட்டுவிட்டு, வெளிநாட்டுக்கு போக யாருக்கும் ஆர்வம் இல்லை என்று சொல்ல முடியாது. வெளிநாடுக்கு போகலாம் என அறிவித்தால்தான், எவ்வளவு பேர் போகிறார்கள் என தெரியும்,'' என்றார். சார்ப்ட்வேர் இன்ஜினியர்கள் பேசும்போது, ""இந்த நடைமுறையை அமல்படுத்துவதில் எந்த சிக்கலும் ஏற்படாது. தொழில்நுட்ப வசதிகள் அதீத வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், இது சாத்தியம்தான்,'' என்றனர்.


கருத்துக் கேட்புக்கு பின், டிராய் தலைவர் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது: பரிந்துரை, விதிமுறைகள் குறித்து நிர்ணயம் செய்ய கால நிர்ணயம் ஏதும் இல்லை. இருந்தபோதிலும் விரைவில் அது தொடர்பான அறிக்கையை அரசிடம் சமர்ப்பிப்போம். "2ஜி' அலைவரிசை லைசென்ஸ் பெறுவதற்கான கட்டணம் 2001ல் நிர்ணயிக்கப்பட்டு, அப்படியே உள்ளது. இரண்டு, மூன்று வாரத்திற்குள் புதிய கட்டண நிர்ணயம் செய்யப்படும். மொபைல் போன் வாடிக்கையாளர்கள், அதே எண்ணில் விரும்பிய நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் வசதி நவ., முதல் வாரத்தில் அமலுக்கு வரும். இவ்வாறு சர்மா கூறினார்.

தொடர் படங்களால் பிஸியான விஜய்

தொடர்ந்து அடுத்தடுத்த பல படங்களில் நடித்து வருவதால் நடிகர் விஜய் ரொம்பவே பிஸியாக உள்ளார்.

ஏற்கனே பல படங்களில் ஒப்பந்தம் ஆகி உள்ள விஜய் தற்போது களவாணி பட இயக்குனர் சற்குணத்தின் புதிய படத்திலும் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த படத்தில் விஜய் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளார்.

போக்கிரிக்கு பின் விஜய் போலீஸ் வேடத்தில் வர இருக்கும் அடுத்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது காவலன் படத்தில் நடித்து வரும் விஜய், வேலாயுதம் படத்தின் இறுதி கட்ட வேலையையும் ஒருபுறம் கவனித்து வருகிறார்.

அதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்கிலும் நடிக்க உள்ளார். மேலும் சீமானின் பகலவன் படத்திலும் விஜய் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த படங்கள் அனைத்தையும் முடித்த பிறகு சற்குணத்தின் புதிய படத்தின் பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் காவலன் டிசம்பரில் ரீலிஸ்

நடிகர் விஜய்யின் 51வது படமாக உருவாகி வரும் காவலன் டிசம்பரில் ரீலிஸ் ஆகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி விருந்தாக காவலன் படம் வெளிவரும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் ரீலிஸ் தேதி தள்ளிவைக்கப்பட உள்ளது.

காவல் காரன், காவல் காதல் என பல தலைப்புகளுக்கு பிறகு காவலன் என்ற தலைப்பில் உருவாகி வரும் இப்படத்தை டைரக்டர் சித்திக் இயக்கி வருகிறார். இறுதிகட்ட சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் டைரக்டர் சித்திக், இப்படத்திற்காக நடிகை அசின் கொடுத்த தேதிகளை வைத்துக் கொண்டு மளமளவென சூட்டிங்கை முடித்து வருகிறார்.

காரைக்குடி, கும்பகோணம், வேலூர், மலேசியா, பாங்காக் என 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இறுதிகட்டமாக கேரளா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பை நடத்த காவலன் டீம் திட்டமிட்டுள்ளது.

டிசம்பரில் காவலனை அதிரடியாக திரையிடும் திட்டத்துடன் விறுவிறுப்பாக பணிகள் நடந்து வருகின்றனவாம்.

பென் டிரைவில் திரைப்படங்கள் : அசத்துகிறது மோசர் பியர்

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்று வரும் நிலையில் எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் இந்த போட்டி உலகில் தங்களை முன்னிறுத்திக் கொள்ள புதுப்புது மாற்றங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் ஆப்டிகல் மீடியா உபகரணங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மோசர் பியர் நிறுவனம், பென் டிரைவில் திரைப்படங்களை அறிமுகப்படு்த்துகிறது.

இதுகுறித்து, மோசர் பியர் நிறுவன விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவின் துணை தலைவர் தீபக் ஷெட்டி வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : பங்குச்சந்தை மற்றும் விற்பனை உள்ளிட்ட அம்சங்களில், தங்கள் நிறுவனத்தை முன்னிறுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, முதற்கட்டமாக பாலிவுட் திரைப்படங்கள் லோட் செய்யப்பட்ட யுஎஸ்பி பென் டிரைவ்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். மாதத்திற்கு 1 லட்சம் பென் டிரைவ்கள் வீதம் வெளியிட உள்ளோம், இதன் மூலம் மோசர் பியரின் பங்கு மதிப்பு 4 முதல் 5 சதவீத அளவிற்கு உயர வாய்ப்பு உள்ளது.

அறிமுகச்சலுகையாக, பாலிவுட் திரைப்படங்கள் லோட் செய்யப்பட்ட 4 ஜிபி மெமரி திறன் கொண்ட பென் டிரைவ் ரூ. 850 க்கு விற்பனை செய்ய உள்ளோம். படங்களை பார்த்த பிறகு அவற்றை அழித்து, நம்முடைய பயன்பாட்டிற்கு அந்த பென் டிரைவ்களை பயன்படுத்தலாம் என்பது இதன் தனிச்சிறப்பு.

விரைவில் 8 ஜிபி மற்றும் 16 ஜிபி கொண்ட பென் டிரைவ்களில் படங்கள் வெளியிடப்படும். இவ்வாறு அந்த செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலே பாண்டியா - விமர்சனம்

உலகத்தில் இப்படி எல்லாம் கூட நடக்குமா? எனக் கேட்கும் அளவிற்கு சந்தேகத்தை கிளப்பும் கதை! ஆனாலும் அதை கலக்கலாகவும், காமெடியாகவும் படமாக்கி பலே பலே சொல்ல வைத்துவிடுகிறது பலே பாண்டியா டீம்!

கதைப்படி, பாண்டியன் பாத்திரத்தில் நாயகராக நடித்திருக்கும் விஷ்ணு., உப்பு விற்க போனால் மழை பெய்கிறது... மாவு விற்க போனால் காற்றடிக்கிறது... என புலம்புபவர்களை எல்லாம் காட்டிலும் பேட், பேட்., பேட் லக்கி கேரக்டர்.

குழந்தையில் ‌தொடங்கி குமரன் ஆனது வரை தொடரும் இதுமாதிரி பேட்லக் சமாச்சாரங்களால் மனம் வெறுத்துப்போகும் பாண்டியனின் தற்கொலை முயற்சிகளும், அடுத்தடுத்து தவிடுபொடி ஆவதால் மேலும் வெறுத்துப்போகிறார் மனுஷர். பாவம்!

கடைசியாக பத்தாயிரம் ரூபாய் பணத்தை புரட்டிக் கொண்டு தன்னை தீர்த்து கட்டிவிட சொல்லி தாதா ஏ.கே.பி.யிடம் போகிறார். அவரோ., இவரது கதையை கேட்டு படம் பார்ப்பவர்களோடு சேர்ந்து (?) கொண்டு விழுந்து விழுந்து சிரித்துவிட்டு கொலை செய்ய தனது ரேட் 5 லட்சம். வெறும் பத்தாயிரத்திற்கெல்லாம் உன்னை கொல்ல முடியாது.

வேண்டுமானால் சில நாட்கள் கூட இரு. யோசித்து சொல்கிறேன்... என ஜகா வாங்குவதுடன், தான் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி மந்திரி ஒருவரது மகளை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டுவதில் கவனம் செலுத்துகிறார். ஆனால் பாண்டியனோ... விடாமல் நச்சரிக்கவே... பொறுக்க முடியாத ஏ.கே.பி., 10ம்தேதி சிட்டியில் நடக்க இருக்கும் ஒரு காவல்துறை உயர் அதிகாரிகள் மீட்டிங்கை சீர்குலைக்கும் விதமாக நீ மனித வெகுண்டாக போய் தற்கொலை செய்து கொள்.

அதுவரை இதில் இருக்கும் 25 லட்சத்தை உன் கூலியாக வைத்து செலவு செய்து கொள் என ஒரு டெபிட் கார்டை கொடுத்து இந்த கார்டும் 10ம்தேதி வேலை செய்யாது தீர்ந்து போகும், நீயும் தீர்ந்து போவாய் என்கிறார்.

அதுநாள்வரை குடும்பத்தினர் உள்ளிட்ட எல்லோருக்கும் அதிர்ஷ்டக் கட்டையாக இருக்கும் பாண்டியன், ரூ.25 லட்சம் கிடைத்ததும் தன் மீது விழுந்து படிந்த அவப்பெயரை துடைத்துக் கொள்ளும் முகமாக களம் இறங்குகிறார். இந்நிலையில் ஏகேபி தீர்த்துக் கட்ட திட்டமிடும் மினிஸ்டர் மகளுடன் பாண்டியனுக்கு எதிர்பாராமல் காதல் வேறு ஏற்படுகிறது. பாண்டியனின் காதல் கை கூடியதா?

25 லட்சம் தீர்ந்ததும் மனித வெடிகுண்டாக மாறி அவனுடைய உடல் சிதறியதா? உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் சொல்கிறது பலே பாண்டியா படத்தின் மீதிக்கதை!

பலே பாண்டியனாக வெண்ணிலா கபடிக்குழு விஷ்ணு. அதிர்ஷ்டக்கட்டையாக குடும்பத்தாராலேயே ஒதுக்கி வைக்கப்படும்போதும் சரி... காசு, காதல் எல்லாம் கிடைத்த பின்பும் சரி... இருவேறு பரிணாமங்களில் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். அமைதியான முகத்தை வைத்துக் கொண்டு விஷ்ணு சந்திக்கும் அவமானங்களும், அதிர்ஷ்டம் இல்லாமையையும் ஜோசியம், ராசி, நட்சத்திரம், அதிர்ஷ்டம் இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்களையும்கூட உலுக்கி எடுத்து விடும்.

பொய் சொல்லப்போறோம், கோவா படங்களில் நடித்த பியாதான் கதாநாயகி. சைனா ‌பொம்மை மாதிரி இருந்தாலும் அம்மணி நடிப்பில் பொளந்து கட்டுகிறார். ஏகேபியாக வரும் புதியவர் மகேந்திரன், நாடி ஜோதிடர் பாண்டு, கச்சிதம் ஜிப்ரான், ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ், டாக்டர் ஷர்மிளா, ஆர்த்தி என படத்தில் பங்குபெற்றுள்ள மற்ற நட்சத்திரங்களும் தங்கள் பங்கை சரியாக செய்து இருக்கின்றனர்.

காமெடியை ஹீரோ உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்கள் செய்து சிரிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு கூட அந்த விவேக(மில்லாத) காமெடி நடிகர் செய்து சிரிப்பை வரவழைக்காதது கொடுமை

தேவன் ஏகாம்பரத்தின் இசையும், சவுந்தர்ராஜன், ஆர்.எஸ்.குருதேவ் இருவரது ஒளிப்பதிவும், சித்தார்த் சந்திரசேகரின் எழுத்தும் இயக்கமும் பலே பாண்டியாவை ஏ க்ளாஸ் படமாக்கி இருக்கின்றன. படமும் ஏ சென்டர் ரசிகர்களுக்கு புரியும் அளவு பி மற்றும் சி சென்டர் ரசிகர்களுக்கு புரியுமா? பிடிக்குமா? என்பது கேள்விக்குறியே!

பலே பாண்டியா : பரவாயில்லேக்கும் மேலே

மைக்ரோமேக்ஸ் க்யூ 7

பயன்படுத்த மிக வசதியான வடிவமைப்பு, எளிதாக வழி காட்டும் பயனாளர் இடைமுகத் தொகுப்பு, ஆடியோ மற்றும் வீடீயோ பைல் இயக்கத் திறன், துல்லியமான இசை வெளிப்பாடு, எளிதாக அமைத்துக் கொள்ளும் வகையில் வை–பி இணைப்பு, கேமரா எனப் பல நல்ல அம்சங்களுடன் வந்துள்ளது.

இரண்டு சிம் இயக்கம் கொண்ட மைக்ரோமேக்ஸ் க்யூ7. கீ பேடின் பின்புற வெளிச்சம் சில வேளைகளில் சூரிய வெளிச்சத்தில் கீ பேட் பயன் படுத்துவதற்கு இடையூறாக உள்ளது. 100 கிராம் எடையில், நல்ல தெளிவான சதுர வடிவிலான பார் வகை போனாக இது உரு பெற்றுள்ளது.

முந்தைய மைக்ரோமேக்ஸ் போன்களைக் காட்டிலும் இதன் திரை வெளிப்பாடு தெளிவாகவும், பளிச் என்றும் உள்ளது. மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட், பவர் ஸ்லாட், யு.எஸ்.பி. போர்ட் ஆகியவை பயன்படுத்த எளிதான இடத்தில் அமைந்துள்ளன.

இதில் உள்ள ஜாவா ஆப்ப ரேட்டிங் சிஸ்டம், பயன் படுத்து வதனையும், மெனு மாற்றத்தினையும் மிக மிக எளிமையுடன் தருகிறது. ஆடியோ மற்றும் வீடியோ மிகவும் துல்லியமான ஒலியுடனும், காட்சியுடனும் அமைந்துள்ளது.

எப்.எம். ரேடியோ பயன்பாடும் இதே சிறப்புடன் இருக்கிறது. ஆனால் பதிவு செய்யக் கூடிய வசதி தரப்படாதது சற்று ஏமாற்றமே. வீடியோவைப் பொறுத்தவரை எம்பி4, 3ஜிபி, ஏ.வி.ஐ. மற்றும் எப்.எல்.வி பார்மட்டுகளைக் கையாள்கிறது.

இரண்டு அடி சுற்றளவில் ஏற்படும் ஒலியினை மிகத் தெளிவாகப் பதிவு செய்கிறது. வழக்கமான அலாரம், உலக கடிகாரம், செயல் மேற்கொள்ள நினைவுபடுத்தும் பட்டியல் அமைத்தல், இ–புக் ரீடர், ஸ்டாப் வாட்ச், திருட்டு தடுப்பு, அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ். பிளாக் லிஸ்ட் ஏற்படுத்துதல் ஆகிய வசதிகளும் தரப்பட்டுள்ளன.

பட்ஜெட் விலை போனாக இருந்தாலும், வை–பி இணைப்பு வசதி தரப்பட்டுள்ளதுதான் இந்த போனின் கூடுதல் சிறப்பாகும். வை–பி இல்லாத இடங்களில் EDGE/GPRS/WAP சேவைகளைப் பயன்படுத்தலாம்.

இதில் தரப்பட்டுள்ள பிரவுசருக்குப் பதிலாக, ஆப்பரா பிரவுசரைப் பயன்படுத்துவது சிறப்பான பயன்பாட்டினைத் தரும். இதில் தரப்பட்டுள்ள பேட்டரி 4.5 மணி நேரம் தொடர்ந்து பேச மின்சக்தி தரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சிம் பயன்பாட்டில், மேலே குறிக்கப்பட்டுள்ள சிறப்பான வசதிகளுடன், இந்த போனின் விலை ரூ. 4,800 எனக் குறிக்கப்பட்டுள்ளது இதன் இன்னொரு சிறப்பாகும்.

மங்காத்தாவில் சிம்புவுக்கு கெஸ்ட்ரோல்

நடிகர் அஜித் அடுத்து நடித்து வரும் மங்‌காத்தா படத்தில் நடிகர் சிம்பு கெஸ்ட் ரோலில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிம்பு சமீப காலமாக தன்னை அஜித்தின் தீவிர ரசிகராக காட்டிக் கொண்டு வருகிறார். தனது படங்களில் அஜித்தை புகழும் வகையில் வசனங்களை வைப்பதுடன், அஜித் எனது அண்ணன் மாதிரி என்று பேசி வருகிறார்.

இந்நிலையில் அஜித் நடிக்கும் மங்காத்தா படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க நடிகர் சிம்பு, மங்காத்தா டைரக்டர் வெங்கட் பிரபுவிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அறிந்த அஜித், அதற்கென்ன... சிம்புவுக்கு ஏற்ற கெஸ்ட் ரோல் ரெடி பண்ணி அவரை நடிக்க வைக்கலாமே...! என்று கூறிவிட்டாராம்.

இதுதொடர்பாக சிம்புவிடம் போனில் பேசிய அஜித், நடி தம்பி என்று கூறி விட்டாராம். இதனால் ஏக குஷியாகியிருக்கிறார் சிம்பு.

2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’

இரண்டு விண்கற்கள் இன்று பூமியை நெருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. பிரபஞ்சத்தில் ஏராளமான கோள்கள், துணைக் கோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் 2 விண்கற்கள் பூமியை நெருங்கி வருவதை டஸ்கன் நகரில் உள்ள கேடலினா விண்ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.

2010ஆர்எக்ஸ்30 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் சுமார் 32 முதல் 65 அடி நீளம் இருக்கலாம் என்று தெரிகிறது.

இது பூமியை 2.46 லட்சம் கி.மீ. தூரத்தில் புதன்கிழமை கடக்கும். 2010ஆர்எப்12 என்ற கல் 20 முதல் 46 அடி நீளம் இருக்கும் என்று தெரிகிறது.

இது 78 ஆயிரம் கி.மீ. தூரத்தில் கடந்து செல்லும். பிரபஞ்சத்தை பொருத்தவரை இந்த தொலைவு மிகமிக குறைவு. அதனால், ‘நூலிழையில்’ பூமி தப்பியது என்றே கூறலாம். இந்த கற்களால் பூமிக்கு ஆபத்து இல்லை.

வ குவாட்டர் கட்டிங் - முன்னோட்டம்

தமிழ்ப்படம் என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையே கிண்டலடித்து கல்லா கட்டிய தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியின் அடுத்த படம் வ குவாட்டர் கட்டிங்.

தமிழ் அகராதிப்படி வ என்றால், ஒன்றின் கீழ் நான்கு என்று அர்த்தமாம், அதாவது கால் பங்கு என்று பொருள்.

இதை ஆங்கிலத்தில் சொன்னால் குவார்ட்டர் தானே, அதான் இந்த படத்திற்கு வ என்று தலைப்பு வைத்துவிட்டோம், என்கிறார்கள் படத்தின் டைரக்டர்களான புஷ்கர் - காயத்ரி தம்பதியர்.

படத்தின் தலைப்பு வ மட்டும்தான் என்று சொல்லும் டைரக்டர்கள், குவார்ட்டர் கட்டிங் என்பது சப்-டைட்டில்தான் என்று வரிவிலக்கிற்கு வில்லங்கம் வராத அளவுக்கு விளக்கம் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி.

நாயகனாக தமிழ்ப்படம் சிவாவும், நாயகியாக லேகா வாஷிங்டனும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

விஜய் புதிய படத்தின் பெயர் ராஸ்கல்

பாலிவுட்டில் வெளியாகி வசூலை வாரி குவித்த 3 இடியட்ஸ் படத்தை தமிழில் எடுக்கப்போவதாக தகவல் வெளியான நாள் முதல் தினம் தினம் புதுப்புது செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

முதலில் விஜய் - அஜித்- மாதவன் சேர்ந்து நடிப்பதாக கூறப்பட்டது. பின்னர் விஜய் - சித்தார்த்- சிம்பு என கூறப்பட்டது. விஜய் -மாதவன் - சிம்பு ஆகியோர் சேர்ந்து நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியானது. தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று சிம்பு கூறியதாகவும்‌ செய்தி வெளியானது.

இப்படி மாறி மாறி பல செய்திகள் ‌உலா வந்து கொண்டிருந்தபோதிலும் விஜய் நடிப்பது மட்டும் உறுதியாக கூறப்பட்டது. இப்போது வந்திருக்கும் புதிய தகவல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமன்ன நடிக்கிறார் என்பதும்.

நவம்பர் முதல் வாரத்தி்ல 3 இடியட்ஸின் தமிழ் ரீமேக் பட சூட்டிங் ‌தொடங்குகிறது என்பதும்தான். இன்னொரு லேட்டஸ்ட் தகவல் படத்திற்கு ராஸ்கல் என ‌பெயர் சூட்டியிருக்கிறாராம் டைரக்டர் ஷங்கர். அடுத்தடுத்து படுபிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் தீபாவளி விருந்தாக காவலனையும், பொங்கல் விருந்தாக வேலாயுதத்தையும் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்.

இதற்கிடையில் சீமான் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்த பகவலவன் படத்துக்கான சூட்டிங்கும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் திரைக்கதை வசனத்தை சிறைக்குள்ளேயே எழுதி முடித்துவிட்டார் என்பது கொசுறு தகவல்.
Related Posts with Thumbnails