மைக்கேல் ஜாக்சனின் ஒத்திகை புகைப்படத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி

லண்டனில் ஒப்புக் கொண்டிருந்த பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு மைக்கேல் ஜாக்சன் தீவிரமாக பயிற்சி செய்துள்ளார். அவர் இறப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதை உறுதி செய்கின்றன.

இந்த ஒத்திகை புகைப்படங்கள்தான் மைக்கேல் ஜாக்சனின் கடைசி படங்களாக அமைந்துவிட்டன. லண்டன் நிகழ்ச்சி மூலம் பாப் இசை உலகிற்கு மீண்டும் திரும்ப முயன்ற மைக்கேல் ஜாக்சனின் முயற்சி ஈடேறாமலேயே போய்விட்டது.

ஒளி விளக்குகளின் பின்னணியில் மைக்கேல் ஜாக்சன் நிகழ்த்தவிருந்த லண்டன் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையின்போது மிகவும் சுறுசுறுப்புடனும், தெம்பாகவுமே மைக்கேல் ஜாக்சன் காணப்பட்டதாக லண்டனிலிருந்து வெளியாகும் "சன் ஆன்லைன்' செய்தி வெளியிட்டுள்ளது.

முந்தைய ஒத்திகைகளைக் காட்டிலும் இந்த ஒத்திகையில் ஜாக்சன் மிகவும் துடிப்போடு இருந்ததாக நிகழ்ச்சியைப் பார்த்தவர்களை மேற்கோள்காட்டி இணையதள செய்தி தெரிவிக்கிறது.

மறக்கமுடியாத நிகழ்ச்சியாக லண்டன் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற முனைப்போடு ஜாக்சன் செயல்பட்டார்.

சக நடிகர்கள் மற்றும் நடிகைகளுடன் தமாஷாக பேசி சிரித்து மகிழ்ந்ததையும் அருகிலிருந்தவர்கள் பார்த்துள்ளனர். 48 மணி நேரத்துக்கு முன் மைக்கேல் ஜாக்சனை ஒத்திகையின்போது பார்த்தவர்களுக்கு அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை நம்புவது மிகவும் கடினம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேடைக்கு அவர் வருவதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்துமே வித்தியாசமானவை. பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாக புகைப்படக் கலைஞர் கெவின் மசூர் தெரிவித்தார்.

ஒத்திகையைப் பார்த்தவுடனேயே மைக்கேல் ஜாக்சன் மீண்டும் தனது பழைய நிலைக்குத் திரும்பிவிட்டார். இனி மேடைகளில் ஜாக்சனின் ஆதிக்கமே இருக்கும் என்று நம்பிக்கையூட்டும் வகையில் அவரது நடனம் அமைந்திருத்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார் என்று கெவின் மசூர் மேலும் தெரிவித்தார்.

10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜாக்சன் மீண்டும் மேடையில் தோன்றத் தொடங்கிவிட்டார் என்பதை நிரூபிக்கும் வகையில் லண்டன் நிகழ்ச்சிகள் அமையவேண்டும் என்பதில் ஜாக்சன் தீவிரமாக இருந்தார்.

இந்நிகழ்ச்சிக்கு "இறுதி திரைச்சீலை' (Final Curtain) என்று இதற்கு பெயரிட்டிருந்தார் ஜாக்சன். தனக்கு ஏதேனும் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாக இந்தப் பெயரைத் தேர்வு செய்தாரோ? என நினைக்கும் வகையில் அமைந்துவிட்டது அவரது மரணம்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails