
உலக அளவில் பிரபலமாக விளங்கினாலும், மைக்கேல் ஜாக்சனின் தனிப்பட்ட வாழ்க்கை சோகமும், சோதனையும் நிறைந்ததாகவே விளங்கியது.
ஆப்பிரிக்க-அமெரிக்கரான ஜாக்சன் 1958 ஆகஸ்ட் 29-ல் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் இசைக் குடும்பத்தில் பிறந்தார்.
அவரது பெற்றோருக்கு 9 குழந்தைகள். இதில் 7-வது குழந்தையான ஜாக்சன் தனது 11 வயதிலேயே இசைப் பயணத்தைத் தொடங்கினார்.
தனது அதிரடி இசையால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த அவர் உலக முழுவதும் பிரபலமானார். அவரது "திரில்லர்', "பேட்', "டேஞ்சரஸ்' ஆகிய இசை ஆல்பங்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் விற்று விற்பனையில் புதிய சாதனையைப் படைத்தன.
புகழின் உச்சியில் இருந்த ஜாக்சன், 1993-ல் சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏற வேண்டியிருந்தது. ஆனால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
2005-ம் ஆண்டு அவர் மீண்டும் பாலியல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்.
சுமார் 30 ஆண்டுகாலம் தனது இசையால் உலகை ஆட்டுவித்து வந்த ஜாக்சன் 13 கிராமி விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.
தனது உடலின் நிறத்தை மாற்றிக் கொள்ள அவர் மேற்கொண்ட சிகிச்சைகள் அவருக்கு உடல் ரீதியில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தியது.
அவருக்கு தோல் புற்றுநோய் உள்ளதாகவும், அவரது நுரையீரல்கள் செயல் இழந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
அவரது மண வாழ்க்கையும் திருப்திகரமானதாக அமையவில்லை. பிரபல பாடகரும், நடிகருமான எல்விஸ் பிரெஸ்லியின் மகளான லிசா மேரி பிரெஸ்லியை 1994-ல் மணந்தார். கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகளுக்குள்ளாகவே அவரை விவாகரத்து செய்தார்.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டபோது சந்தித்த நர்ஸ் டெப்பி ரோவ் (37) என்பவரை 1997-ல் திருமணம் செய்து கொண்டார். அவரையும் 1999-ல் விவாகரத்து செய்தார்.
ஜாக்சனுக்கு மைக்கேல் ஜோசப் ஜாக்சன் ஜூனியர், பாரிஸ் மைக்கேல் காத்தரீன் ஜாக்சன், பிரின்ஸ் பிளாங்கெட் மைக்கேல் ஜாக்சன் 2 என 3 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஆண்டு இஸ்லாம் மதத்தை தழுவிய அவர் தனது பெயரை "மிக்கேல்' என மாற்றிக் கொண்டார். அவருக்கு சுமார் ரூ.1000 கோடி அளவுக்கு கடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபகாலமாக இசை மற்றும் பொது நிகழ்ச்சியில் இருந்து ஒதுங்கியிருந்த ஜாக்சன், லண்டனில் வரும் ஜூலை 13-ம் தேதி இசை நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சி தொடர்பான அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே சுமார் 1 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஆனால் நிகழ்ச்சிக்கு முன்னரே அவர் இறந்துவிட்டார்.
பாப் இசை உலகில் அதிரடி இசையால் தனியிடம் பிடித்த மைக்கேல் ஜாக்சன் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை வேறு எவராலும் நிரப்ப முடியாது.
0 comments:
Post a Comment