துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்பு, பயறு வகைகள் வரலாறு காணாத வகையில் விலை உயந்து விற்பனை செய்யப்படுகிறது.
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் பருப்பு வகைகள் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், மியான்மர் போன்ற நாடுகளில் இருந்தும் தமிழகத்திற்கு துவரை, உளுந்து, பாசி உள்ளிட்ட பயறு வகைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
இந்த பயறு வகைகள் சென்னை, சேலம், தேனி, விருதுநகர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஆலைகளில் உடைக்கப்பட்டு பருப்பு தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் பருப்பு வகைகள் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
தற்போது துவரம் பருப்பு ரூ.68 -70, பாசிப்பருப்பு ரூ.60 என விற்கப்படுகிறது. உளுந்தம் பருப்பு -ரூ. 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு துவரம் பருப்பு ரூ. 38 முதல் ரூ. 40 வரைக்கு விற்கப்பட்டது. பாசிப்பருப்பு ரூ. 40, உளுந்தம்பருப்பு ரூ. 35 முதல் ரூ. 40 வரை விற்கப்பட்டது.
இதே போல் முக்கிய பயறு வகைகளான பாசி பயறு ரூ. 50 (ரூ.40), தட்டைபயறு ரூ.80 (ரூ.40), மொச்சை ரூ.75 (ரூ.40)-க்கு இப்போது விற்கப்படுகிறது (அடைப்புக்குள் கடந்த ஆண்டு விலை).
கடந்த ஆண்டு விலையுடன் ஒப்பிடுகையில் பருப்பு மற்றும் பயறு வகைகள் இந்த ஆண்டு சராசரியாக இருமடங்கு விலை உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து சென்னையில் உள்ள விற்பனையாளர்கள் மற்றும் தரகர்கள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறியது:
வழக்கமாக பயறு வகைகள் மே மாதங்களில் விதைக்கப்பட்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பயறு விளையும் மாநிலங்களில் பருவ மழை பொய்த்து வருகிறது.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் விளைச்சல் குறைந்து வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு போதிய மழை இன்மை காரணமாக விதைக்கும் பணி பல இடங்களில் இதுவரை ஆரம்பிக்கவில்லை.
இனி விதைத்தால் எப்படி விளைச்சல் இருக்குமோ என்ற பயத்தில் விவசாயிகள் விதைக்கும் எண்ணத்தில் இருந்து பின்வாங்கி வருகின்றனர்.
கையிருப்பு பருப்புகளும் பெரும்பான்மையாக விற்றுவிட்டன. இதனால் பருப்புகளின் விலை உயர்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது. மேலும் அரசு நேரடிக் கொள்முதல் செய்து வருவதும் விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணமாகும்.
தமிழகத்தை தொடந்து ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் துவரை மற்றும் உளுந்து பயறுகளை அந்தந்த மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்யத் துவங்கிவிட்டன.
இதற்கெல்லாம் மேலாக பங்கு மார்க்கெட் போன்று பருப்பு கொள்முதலிலும் கடந்த சில ஆண்டுகளாக யூக வணிகம் விளையாடிவருகிறது. இதை தடுத்து நிறுத்தக் கோரி அரசுக்கு பல முறை கோரிக்கைவிடுத்தும் மத்தியஅரசு கண்டுகொள்ளவில்லை. இதுவும் பருப்பு, பயறு விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகிவிட்டது என்று கூறினர்.
0 comments:
Post a Comment