Friday, November 19, 2010

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் த்ரிஷா நிஷா என்ற பெயர் கொண்ட சினிமா நடிகையாக நடிக்கிறார். 

கதைப்படி நடிகை நிஷா ஒரு கவிதை எழுதுகிறார். அது பாடலாக இடம்பெறுகிறது. அந்த கவிதையை நிஜமாக எழுதியவர் நடிகர் கமல்ஹாசன். 

கண்ணோடு கண்ணை கலந்தாளென்றால்... எனத் தொடங்கி தொடரும் அந்த பாடல் கமல்ஹாசனை ஒரு கவிஞராக மீண்டும் நிரூபித்திருக்கிறது.

கமல்ஹாசன் எழுதிய அந்த பாடல் வரிகள் வருமாறு:-


கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா?
ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை

கவிதை இலக்கியம் பேசினளாயின்
காசை மதியாள் எச்சரிக்கை
உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக்கோள்
கூட்டல் ஒன்றே குறியென்றானபின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்?
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்

காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்றைஇயற்றத் துணியும் அணி சேர்த்துக்கொள்.

Thursday, November 18, 2010

டைட்டிலுக்காக புதுமுகத்தை மிரட்டும் பிரபல டைரக்டர்!

தான் விரும்பிய டைட்டிலை வேறொரு புதுமுகம் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருப்பதையறிந்த பிரபல டைரக்டர் அந்த புதுமுக டைரக்டரை மிரட்டி வருகிறாராம். 

ஏற்கனவே 10 படங்களை இயக்கியிருக்கும் அந்த டைரக்டர் தற்போது மருமகன் நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த படத்திற்கு முதலில் அருவா என பெயர் சூட்டியிருந்தனர். 

ஆனால் படத்தின் நாயகனுக்கோ வேறொரு தலைப்பின் மேல் ஈர்ப்பு. நாயகன் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக அந்த தலைப்பை பதிவு செய்ய முற்பட்டபோதுதான் தெரிந்தது, நாயகனின் விருப்ப தலைப்பு வேறோரு புதுமுக டைரக்டரின் கையில் இருக்கிறது என்று. 

உடனடியாக அந்த புதுமுகத்திடம் போனில் பேசிய டைரக்டர், தனக்கு அந்த ‌தலைப்பை விட்டுக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். ஆனால் புதுமுகமோ... வாய்ப்பே இல்லை. எனது படத்திற்கு அந்த தலைப்புதான் பொருத்தமாக இருக்கும், என்று கூறி மறுத்து விட்டாராம்.

விட்டாரா டைரக்டர்...? ஆளு தெரியாம மோதாதே... மரியாதையா டைட்டிலை கொடுத்திரு என மிரட்டத் தொடங்கி விட்டார். அதேநேரம் புதுமுகமோ, நீங்க எவ்வளவு மிரட்டினாலும் அந்த டைட்டிலை தர முடியாது என முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார். மிஷ்கின் பஞ்சாயத்து முடிவுக்கு வந்துள்ள நிலையில் இயக்குனர்கள் சங்கத்தில் இப்போது இந்த பிரச்னை சூட்டை கிளப்பி விட்டிருக்கிறதாம். 

Wednesday, November 17, 2010

கமல்ஹாசன் பாணியில் இளம் ஹீரோக்கள்!

தனது படத்தில் இளம் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை தனி கொள்கையாக வைத்திருக்கும் கமல்ஹாசனின் பாலிஸிக்கு இளம் ஹீரோக்கள் மாறி வருகிறார்கள்.


இன்றைய இளம் ஹீரோக்கள் தங்கள் படங்களில் வேறொரு ஹீரோ நடிப்பதை அனுமதிக்க மறுப்பது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாலிவுட், மல்லுவுட்டைப் போல மூத்த நடிகர்கள் ஒன்று சேர்ந்து ஒரே படத்தில் நடிப்பதில்லை.


தமிழ் சினிமாவில் இந்த நிலை மாற வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது கூறுவதுடன், தனது படங்களில் இளம் நடிகர்களையும் இணைத்து நடிக்க வைப்பார். பஞ்சதந்திரம், தெனாலியில் ஜெயராம், அன்பேசிவம் படத்தில் மாதவன், காதலா காதலாவில் பிரபுதேவா, குருதிப்புனலில் அர்ஜூன் என சக கலைஞர்களை நடிக்க வைத்தார். தற்போது அவர் நடித்து வரும் மன்மதன் அம்புவில் கூட மாதவன் இருக்கிறார்.

இப்போது கமல்ஹாசன் பாலிஸியை பின்பற்ற தயாராகியிருக்கிறார்கள் நடிகர் விஜய், ஜீவா, ஸ்ரீ‌காந்த் ஆகியோர். டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவிருக்கும் 3 இடியட்ஸ் படத்தில்தான் இந்த மூன்று நட்சத்திரங்களும் இணைகின்றன.


இந்த படத்துக்காக முதல் பாடல் கம்போஸிங் முடிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். டிசம்பர் 6ம்‌தேதி படத்தின் சூட்டிங் தொடங்கவுள்ளது.

Tuesday, November 16, 2010

சிங்கப்பூரில் மன்மதன் அம்பு பாடல் வெளியீடு

கமல், திரிஷா, மாதவன் இணைந்து நடித்துள்ள படம் மன்மதன் அம்பு, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி உள்ளார். டிசம்பர் 17-ந் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது.

இதன் பாடல் சி.டி. வெளி யீட்டு விழாவை சிங்கப்பூரில் நடத்துகின்றனர். வருகிற 20-ந் தேதி இவ்விழா நடக்கிறது. 7 ஆயிரம் ரசிகர்கள் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.

3 மணி நேரம் விழா நடைபெறுகிறது. முன்னதாக 14-ந் தேதி கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கமலஹாசன், மாதவன்- திரிஷா, சங்கீதா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் இவ் விழாவில் கலந்து கொள்கின்றனர்.


நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும், நடிகர் -நடிகைகள் பலர் சிங்கப்பூர் செல்கிறார்கள். விஜய் டி.வி. இதனை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Monday, November 15, 2010

மந்திர புன்னகை - முன்னோட்டம்

டைரக்டர் கரு.பழனியப்பன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் மந்திர புன்னகை. இதுவரை நான்கு படங்களை இயக்கியிருக்கும் கரு.பழனியப்பன் தனது 5வது படமான மந்திர புன்னகையை இயக்கி, நடிக்கிறார்.

படத்தில், காதலாலும் கறைக்கமுடியாத, ஒரு கனத்த இதயத்துடன் இருக்கும் ஒரு இளைஞனாக கரு.பழனியப்பன் நடித்திருக்கிறாராம். இந்த உலகத்தில் இருக்கிற எல்லா மனிதர்களுக்கும், பசி, கோபம், அழுகை, சிரிப்பு, ஆசை, காமம், காதல், அன்பு என்று ஆதார உணர்ச்சிகள் ஒன்றுதான்.

ஆனால் இந்த உணர்ச்சிகளுக்கான காரணம் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. அப்படி பார்க்கும்போது இந்தப் பூமிப் பந்தில் இருக்கிற ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி உலகம்தான்.

அப்படி தனெக்கென ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் கதைதான் மந்திரப்புன்னகை.

கரு.பழனியப்பனுக்கு ஜோடியாக மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சந்தானம், மகேஸ்வரி, ரிஷி மற்றும் தம்பி ராமையா ஆகியோர் நடிக்க, இயக்குநர் நகுலன் பொன்னுசாமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு கவிஞர் அறிவுமதி இப்படத்தில் பாடல்களை எழுதியுள்ளார். இவருடன் யுகபாரதி, விவேகா ஆகியோரும் பாடல்கள் எழுத, வித்யாசாகர் இசையமைக்கிறார்.

ராம்நாத் ஷெட்டி ஓளிப்பதிவு செய்ய, கலையை ராஜீவனும், படத்தொகுப்பை ராஜா முகம்மதுவும் செய்கிறார்கள்.

இந்திரா பிக்சர்ஸ் சார்பில் நாகராஜன் - கார்த்திக் நாகராஜன் தயாரிக்கும் இப்படத்தின் சூட்டிங், சென்னையிலும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் நடந்துள்ளது.

Sunday, November 14, 2010

திருட்டு விசிடியை ஒழிக்க கமல்ஹாசன் சொல்லும் ஐடியா!

மக்கள் நினைத்தால் மட்டுமே திருட்டு விசிடியை ஒழிக்க முடியும் என்று நடிகர் கமல்ஹாசன் யோசனை தெரிவித்துள்ளார்.

திருட்டு விசிடி குறித்த கேள்விக்கு பதில் அளித்திருக்கும் கமல்ஹாசன், திருட்டு சி.டி.க்களால் திரைப்படத்துறை நலிந்துள்ளது. அவற்றை சினிமா துறையினரோ, அரசியல்வாதிகளோ தடுக்க முடியாது. மக்களால்தான் தடுக்க முடியும்.

திருட்டு சி.டி.யில் படம் பார்க்கமாட்டோம் என்று அவர்கள் உறுதி எடுத்தால் தானாக சரியாகிவிடும், என்று கூறியுள்ளார்.

ஷங்கர் படத்தில் நடிக்கப்போவதாக வெளியான செய்தி குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், ஷங்கர் இயக்கும் ரூ.500 கோடி பட்ஜெட் படத்தில் நான் நடிப்பதாக செய்தி வெளியானதாக நானும் கேள்விப்பட்‌டேன். ஆனால் ஷங்கரிடம் இருந்து அதுபோன்று ஒரு படத்தில் நடிக்க அழைப்பும் வரவில்லை, என்றார்

Saturday, November 13, 2010

ஷங்கர் இயக்கும் ரூ. 500 கோடி பட்ஜெட் படம்

ஷங்கர் தற்போது இந்தியில் ஹிட்டான “3 இடியட்ஸ்” படத்தை தமிழில் ரீமேக் செய்யும் வேலையில் உள்ளார். விஜய் நாயகனாக நடிக்கிறார்.

இந்த படம் முடிந்ததும் ரஜினி, கமல் நடிக்கும் படத்தை துவங்குவார் என்றும் செய்திகள் பரவின.

இதுபற்றி ஐதராபாத்தில் கமலிடம் நிருபர்கள் நேற்று பேட்டி கண்டனர். நீங்களும், ரஜினியும் சேர்ந்து நடிக்க ஷங்கர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்து கமல் கூறியதாவது:-


ஷங்கர் இயக்கும் ரூ. 500 கோடி பட்ஜெட் படமொன்றில் ரஜினியும், நானும் அதில் நடிக்கிறோம் என்றும் நீங்கள் கூறுகிறீர்கள். அது பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை. ஷங்கரிடம் இருந்து அதுபோன்று ஒரு படத்தில் நடிக்க அழைப்பும் வரவில்லை என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:-

ஐதராபாத்தில் பிக்கி மீடியா மாநாட்டை டிசம்பர் 1, 2 தேதிகளில் நடத்த உள்ளோம். 2 ஆயிரம் பிரதிநிதிகள் அதில் பங்கேற்கின்றனர்.

திருட்டு சி.டி.க்களால் திரைப்படத்துறை நலிந்துள்ளது. அவற்றை சினிமா துறையினரோ, அரசியல்வாதிகளோ தடுக்க முடியாது. மக்களால்தான் தடுக்க முடியும்.

திருட்டு சி.டி.யில் படம் பார்க்கமாட்டோம் என்று அவர்கள் உறுதி எடுத்தால் தானாக சரியாகிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...