Sunday, August 2, 2009

கன்னடத்தில் நாடோடிகள்

சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான "நாடோடிகள்' தமிழில் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, அப்படம் தெலுங்கிலும், இந்தியிலும் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கில் ரவி தேஜா நடிக்கிறார். தெலுங்கு படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்குகிறது.

இந்தி படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்குகிறது. இதற்காக ஷாகீத் கபூர் மற்றும் தேவ் பட்டேலிடம் பேசப்பட்டு வருகிறது. இதன் பிறகு "நாடோடிகள்' கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. கன்னட உலகின் பிரபலமான கதாநாயகன் புனித் ராஜ்குமார் நடிக்கிறார். சமுத்திரகனியே அங்கும் இயக்குகிறார்

ஒபாமாவை மிரட்டியவருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை

அதிபர் ஒபாமாவை கொலை செய்யப் போவதாக கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க போலீசாருக்கு 2 இ-மெயில் மிரட்டல்கள் வந்தன. ஒபாமாவை படுகொலை செய்ய வெடிகுண்டுகளை பதுக்கி வைத்துள்ளதாகவும் அந்த இ-மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்கா போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அந்த இ-மெயில்களை டிமோதி ராயின் கியூட்டிரெஸ் என்ற 21 வயது இளைஞர் அனுப்பி இருப்பதை கண்டு பிடித்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.

நீண்ட விசாரணைக்கு பிறகு ஒபாமாவுக்கு இ- மெயில் மிரட்டல் அனுப்பியதை டிமோதி ஒத்துக்கொண்டார். இந்த வழக்கில் டென்வர் மாவட்ட கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

டிமோதிக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை அளித்து நீதிபதி உத்தர விட்டார். தண்டனை காலத்தில் முதல் 10 மாதத்தை அவர் வீட்டுக் காவலில் கழிக்கவேண்டும் என்று கூறப்பட்டது.

இது தவிர அவர் ரூ.75 ஆயிரம் அபராதம் கட்ட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த பணம் மின்ன போலீஸ் புறநகரில் உள்ள ஒரு அரங்கு பாதுகாப்புக்கு செலவிடப்படும்.

எதிர்பார்ப்புகள் பொய்த்தனவே...

நிதிநிலை அறிக்கை என்பது ஒரு தேசத்தின் அல்லது மாநிலத்தின் பொருளாதார நிலையை வெளிப்படுத்துவதாக மட்டும் அமைவதில்லை. அடுத்த ஓராண்டில், அந்த அரசு எந்தெந்த துறைகளுக்கு முன்னுரிமை அளிக்க இருக்கிறது, என்னென்ன சமுதாய மற்றும் மக்கள் நலப் பணிகளை முன்னிறுத்திச் செயல்பட இருக்கிறது, கனரகத் தொழில், சிறு தொழில்கள், விவசாயம், ஏற்றுமதி, சேவையை முன்னிறுத்தும் தொழில்கள் ஆகியவற்றிற்கு எந்தெந்த அளவுக்கு ஊக்கம் அளிக்கப் போகிறது என்பதை எல்லாமே தெளிவாக்கும் ஓர் "எக்ஸ்ரே'தான் நிதிநிலை அறிக்கை என்பது.

கடந்த முறை தேர்தலுக்கு முன்னால், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஓர் இடைக்கால நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்தபோது இருந்த நிலைமையே வேறு. தேர்தலில் வெற்றி பெற்று, கணிசமாகக் கூட்டணி நிர்பந்தங்கள் தளர்ந்து விட்டிருக்கும் நிலையில் ஒரு நிதிநிலை அறிக்கையை பிரணாப் முகர்ஜி சமர்ப்பித்திருக்கிறார்.

நிதிநிலை அறிக்கையைப் படித்துப் பார்த்ததும் பளிச்சென மனதில் பட்ட விஷயங்கள் இரண்டுதான். முதலாவது, பரந்த பாரத தேசத்தின் வருட வரவு செலவு ரூ. பத்து லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது என்பது. அடுத்தது, கடந்த நிதி ஆண்டில் 6.2 சதவீதமாக இருந்த பற்றாக்குறை இந்த ஆண்டு 6.8 சதவீதமாக உயரும் என்பது. பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப்பதில் தவறு இல்லைதான். அதேநேரத்தில், நிதிப் பற்றாக்குறை என்பது வளர்ச்சிக்கும், மூலதனத்துக்கும் வழிகோலாமல், விலைவாசியை அதிகரிக்க மட்டுமே உதவும் என்றால், அதைவிட ஆபத்தான விஷயம் எதுவும் இருக்க முடியாது.

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். அதற்காக, ரூ. 39,100 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மேலும் 4.74 கோடி குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் பரவலாக்கப்படுகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல், கிராமப்புற வீட்டு வசதிக்காக ரூ. 2,000 கோடி தேசிய வீட்டுவசதி வங்கிக்கு ஒதுக்கி இருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

அதேபோல, நகர்ப்புற ஏழை எளியவருக்கான வீட்டு வசதிக்காக ரூ. 3,973 கோடி ஒதுக்கி இருப்பதும் நல்லதொரு முயற்சி. இந்த ஒதுக்கீடு தெருவோரவாசிகளையும், குடிசைவாழ் மக்களையும் சுகாதாரமான வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளில் வாழ வழிகோலுமானால், நிதியமைச்சர் புண்ணியம் கட்டிக் கொள்வார். அரசு, மக்களின் நல்லாதரவைப் பெறும்.

குறித்த காலத்தில் கடனைத் திருப்பி அளிக்கும் விவசாயிகளுக்கு சிறப்புச் சலுகை என்பது, வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்யும் சிறு விவசாயிகளைக் கேலி செய்வது போன்றது. குறித்த நேரத்தில் கடனுதவி கிடைக்க வழி செய்வதும், நீர்ப்பாசன வசதி, உரம், விதை போன்றவை கிடைக்க வகை செய்வதும்தான் அவர்களது அத்தியாவசியத் தேவை என்பதை எப்போதுதான் நமது ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளப் போகிறார்களோ, தெரியவில்லை.

தனிநபர் வருமான வரியின் வரம்பைக் கண்துடைப்புக்காக உயர்த்தி இருப்பதும், தனிநபர் வருமான வரியிலான 10 சதவீதம் கூடுதல் வரியை அகற்றி இருப்பதும், அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் கண்துடைப்பு சலுகைகளாகும். ஃப்ரின்ஞ் பெனிபிட் வரி எனப்படும் கூடுதல் சலுகைகளுக்கான வரியை அகற்றி இருப்பது, உயர் வருவாய்ப் பிரிவினரின் வரவேற்பைப் பெறும்.

தொழில்துறை வளர்ச்சிக்கு இந்த நிதிநிலை அறிக்கை எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பது சந்தேகமாக இருக்கிறது. ஏற்றுமதியை முன்னிறுத்தும் உற்பத்தியாளர்களுக்கு அடுத்த 9 மாதத்துக்கு 2 சதவீதம் வட்டிச் சலுகை என்கிறார் நிதியமைச்சர். தொழிற்சாலையை நடத்தவே தத்தளிக்கிறார்கள் பலர். அவர்களைக் கைதூக்கி விடுவதை விட்டுவிட்டு, ஏற்றுமதியை ஊக்குவிக்க வட்டிச்சலுகை என்பது ஏமாற்று வித்தையல்லவா? அப்படியே வட்டியில் சலுகை தருவதாக இருந்தாலும் குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகளுக்குத் தராவிட்டால், எப்படி தொழில் வளர்ச்சி அதிகரித்து பொருளாதாரம் தேக்கத்திலிருந்து விடுபடும்?

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், காப்பீட்டுக் கழகங்களும் தனியார் மயமாகாது என்று கூறியிருக்கிறார். மகிழ்ச்சி. அரசியல் கட்சிகளுக்கான நன்கொடைகளுக்கு முழு வரி விலக்கு அளித்திருக்கிறார். அரசுக்கு இகழ்ச்சி!

சிறிய நகைக் கடைகளும், தனியார் ஆசாரிகளும் தயாரிக்கும் தங்க நகைகளுக்கு வரியுண்டு. ஆனால், பெரிய நிறுவனங்களும், நகைக் கடைகளும் தயாரித்து விற்பனை செய்யும் நகைகளுக்கு வரி கிடையாது. இந்த அறிவிப்பு, சர்வதேச நகை தயாரிப்பாளர்களுக்குப் பட்டுக் கம்பளம் விரிக்கும் முயற்சியோ என்று கருத இடமிருக்கிறது. அடிப்படையே ஆட்டம் காணும் நிலையில் பொருளாதாரம் இருக்கும்போது இப்படி ஒரு முயற்சி தேவைதானா?

அனுபவசாலியின் நிதிநிலை அறிக்கையாயிற்றே; அதுவும், பொருளாதாரத் தேக்கத்திலிருந்து மீண்டு அனைத்துத் துறைகளையும் புத்துணர்வு பெறச் செய்ய வேண்டிய நேரமாயிற்றே; கூட்டணி நிர்பந்தங்களில்லாமல், துணிந்து பல முயற்சிகளையும், புத்திசாலித்தனமான தீர்வுகளையும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம் முன்வைப்பார் என்று எதிர்பார்த்தால், எதிர்பார்ப்புகள் பொய்த்தனவே...

பொட்டு அம்மான் உயிருடன் உள்ளாரா?

விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலிகளின் தகவல் தொடர்புகளை இடைமறித்து கேட்டதன் மூலம் இது தெரியவந்துள்ளது என்று ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தத் தகவல் பரிமாற்றத்தின்போது, பொட்டு அம்மானை 'குருவி' என்ற புனைப் பெயரில் புலிகள் குறிப்பிட்டுப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

வன்னியில் நடைபெற்ற போரில் பொட்டு அம்மான் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை ராணுவம் கூறியிருந்தது. இந்நிலையில், அவர் உயிருடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Saturday, August 1, 2009

ரஜினி பாணியில் ஸ்ரேயா!

ரஜினி போல் மாறி விட்டார் ஸ்ரேயா. நைட் கிளப், பார்ட்டி என சென்று வந்ததை குறைத்துக் கொண்டு கோயில் மற்றும் ஆன்மிக குருஜிக்களை தேடி போக ஆரம்பித்து இருக்கிறார் ஸ்ரேயா.

வெள்ளியங்கிரி மலை ஈஷா மையத்தில் தங்கியிருந்து கடந்த சில வாரங்களாக யோகா கற்ற ஸ்ரேயா, இப்போது வீட்டில் முன்று வேளையும் யோகா செய்ய ஆரம்பித்து இருக்கிறார்.

படப்பிடிப்பு தளங்களில் கேரவனிலே யோகா செய்கிறார்.

திருப்பதி கோயிலுக்கும் அடிக்கடி சென்று வருகிறார். படப்பிடிப்பு நடக்கும் ஊர்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களை கேட்டறிந்து அங்கு சென்று வழிபாடு நடத்துகிறார்.

இதற்கெல்லாம் காரணம் ஸ்ரேயா காதலிக்கும் காதலனின் ஆன்மிக வழிகாட்டுதல்தான் என்கிறது அவரது நெருங்கிய வட்டாரங்கள்.

ஆறு மனமே - - சினிமா விமர்சனம்

கணக்கு வாத்தியார் ராஜேசுக்கு இருமகன்கள். மூத்தவர் ஸ்ரீமன், பொதுப்பணித்துறையில் என்ஜினீயர் வேலை பார்க்கிறார். இளைய மகன் தீபக் படிப்பு வராமல் ஆட்டோ ஓட்டுகிறார். ஸ்ரீமன் மேல் அக்கறை காட்டும் ராஜேஷ் தீபக்கை வெறுத்து தண்டச்சோறு என அவமதிக்கிறார்.

வில்லன் கோஷ்டி காண்டிராக்ட் பைலில் கையெழுத்திடுமாறு ஸ்ரீமனை நிர்ப்பந்திக்கிறது. அவர் மறுக்கிறார். தலைவாசல் விஜய் மகளுக்கும் ஸ்ரீமனுக்கும் திடீர் திருமணம் நடக்கிறது. வில்லன்கள் போலி கையெழுத்து மூலம் காண்டிராக்ட் ஒப்பந்தம் தயாரிக்கின்றனர். அதை எதிர்த்து கோர்ட்டுக்கு போகும் ஸ்ரீமன் கொல்லப்படுகிறார்.

கொலையாளிகளை தீபக் கண்டுபிடிக்க முயற்சிக்கும்போது அண்ணனுக்கு இன்னொரு மனைவியும் குழந்தையும் இருப்பது தெரிகிறது. அவர்களை வீட்டின் எதிரில் குடிவைக்கிறார். இருவரையும் இணைத்து சந்தேகிக்கும் ராஜேஷ் தந்தை மகன் உறவை முறிக்கிறார். தீபக்கை காதலிக்கும் நிக்கோலும் வெறுப்புகாட்டி பிரிகிறார்.

அண்ணனை கொன்றவனை பழி தீர்த்து குடும்பத்தோடு தீபக் எப்படி சேருகிறார் என்பது கிளைமாக்ஸ்...

தந்தையின் கோபத்தை தாங்கி நேர்மையாக ஆட்டோ ஓட்டி பிழைக்கும் இளைஞர் கேரக்டரில் கச்சிதமாக பொருந்துகிறார் தீபக்... நண்பன் செய்யும் தவறுகள் சந்தர்ப்ப சூழலில் தன் தலையில் விழுந்து தந்தையிடம் வாங்கி கட்டும்போது பரிதாபப்பட வைக்கிறார்.

கொலையுண்ட அண்ணன் உடலை கட்டிப்பிடித்து கதறுவது... நிர்க்கதியான அண்ணி மற்றும், குழந்தையை அழைத்து வந்து தன்னோடு தங்க வைப்பது... அதனால் வரும் பழி சொற்களை தாங்கிக் கொள்வது... என அனைத்திலும் தேர்ந்த நடிப்பு முதிர்ச்சி காட்டுகிறார்.

நிக்கோல் காதலன் மேல் சந்தேகித்து வேறு ஒருவரை மணக்க திருமண அழைப்பிதழ்கள் அச்சிட்டு தெருவோரவாசிகளுக்கு விநியோகித்து எரிச்சல் காட்டுவது அழுத்தம். கார்த்திகா அழுகை அண்ணியாக வருகிறார். கணக்கு வாத்தியாராக வரும் ராஜேஷ் கேரக்டரை வலுவாக பதிவு செய்கிறார். ஸ்ரீமன் பாசக்கார அண்ணனாக பளிச்சிடுகிறார். கஞ்சா கருப்பு சிரிக்க வைக்கிறார். பொன்வண்ணன், ஆனந்த் வில்லத்தனம் செய்கின்றனர்.

குடும்ப பாங்கான கதையை கச்சிதமாக செதுக்கியுள்ளார் இயக்குனர் சதீஷ் சங்கர், தீபக்கை நல்லவர் என நிரூபிக்க அண்ணணுக்கு இருவரை மனைவிகளாக்குவது பிறகு விதவைகளாக்கி அவர்களையே கதை சுற்றி வருவது வலுவில்லாத காட்சி தொகுப்பு, ஸ்ரீகாந்த் தேவா இசை, அன்புமணி ஒளிப்பதிவு பக்கபலம்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு

தீவிரவாதிகள் அச்சுறுத்தலை அடுத்து பெங்களூரில் உள்ள இன்ஃபோசிஸ் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் நிறுவனத் தலைமையகத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்.) போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள சில மத்திய அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், இன்ஃபோசிஸ் சாஃப்ட்வேர் தொழில் நுட்ப நிறுவனம் போன்றவற்றை குண்டுவைத்து தகர்க்கப்போவதாக தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்தனர். கடந்த ஆண்டு பெங்களூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள்கூட இன்ஃபோசிஸ் நிறுவனத்தை தாக்க சதித் திட்டம் தீட்டியிருந்தனர்.

இந்நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென அரசுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, தனியார் நிறுவனங்களிலேயே முதல் முறையாக இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1969-ல் சிஐஎஸ்எஃப் உருவாக்கப்பட்டதில் இருந்து இதுவரை அரசுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தப் படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. முதல் முறையாக தனியார் நிறுவனத்துக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று சிஐஎஸ்எஃப் அதன் ஐ.ஜி. ஆர்.கே.மிஸ்ரா தெரிவித்தார்.

மொத்தம் 101 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய பாதுகாப்புப் படையின் காவல் பணிக்காக இன்ஃபோசிஸ் நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 2.5 கோடி செலவிடும்.

மும்பை தாஜ் ஹோட்டலில் கடந்த ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து தனியார் நிறுவனங்களுக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பை வழங்க வகை செய்யும் சட்டத் திருத்தம் இந்த ஆண்டு ஜனவரியில் கொண்டுவரப்பட்டது.

ரிலையன்ஸ், டாடா, ஓபராய் உள்ளிட்ட 79 தனியார் கார்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது என்றார் அவர்.

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...